ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!


இந்த ஆண்டு ஆகஸ்டு 30 தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை உலகெங்குமுள்ள மலையாள மக்களால் கொண்டாடப்பட்டது ஓணம்.

தாமதமாகச் சொன்னாலும், அனைவருக்கும் ஓணநன்னாள் நல்வாழ்த்துக்கள்!!

சரி, மலையாளப் பண்டிகைக்குத் தமிழில் வாழ்த்தா என்கிறீர்களா?

சேர சோழ பாண்டியர்களென ஒன்றிணைந்த தமிழகத்தின் திருவிழாவாக இருந்த ஓணவிழாவை, காலப்போக்கில் தமிழர்கள் கொண்டாட மறந்த பண்டைநாள் பண்டிகையைப் பற்றியதுதான் இன்றைய பதிவு. இதை உணர நம் வழித்துணை- நமக்கென நம் முன்னோர் விட்டுச் சென்ற இலக்கியச் சான்றுகளே.

கடந்த நான்கு ஆண்டுகள் அபுதாபியில் வாழ்ந்ததில் பல கேரளத் தோழிமார் கிடைத்தனர். செவிக்கினிய மலையாள மொழியைக் கொஞ்சமாய்ப் பேசக்கற்கும் வாய்ப்பும் அமைந்தது. அதனால், அம்மொழி தமிழோடு எவ்வளவு தொடர்புடையது என்றும் தமிழரின் பல பழமையான சொற்களை மலையாளிகள் இன்றளவும் புழங்கி வருவதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

தமிழர்கள்மீதும், தமிழ்த்திரைப்படங்கள்மீதும், தமிழ்த்திரைப்பாடல்கள்மீதும் மலையாள மக்களுக்கு உள்ள ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களுடைய மொழி, பழகும் தன்மை, வேர்களைப் பாதுகாக்கும் விழைவு, உணவுமுறை என்று பலவற்றைக் கூர்மையாகக் கவனிப்பேன். அப்போதெல்லாம், என்றோ விலகிப்போன உறவுகளோடு இணையும் மீள்நிகழ்வுபோல உணர்ந்திருக்கிறேன்.

வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்திரி தம் ‘தென் இந்திய வரலாறு’ நூலில் –

“சங்க காலத்தில், இப்போதைய மலையாளப் பகுதி தமிழ்ப்பேசும் நிலமாகவே இருந்தது……….. சங்க இலக்கியத்தில் காணப்படும் பல சொற்களும் சொற்றொடர்களும் இப்போதைய தமிழில் வழக்கற்றுவிட்டபோதிலும், அவை மலையாள மொழியில் இன்றும் வழக்கிலிருக்கின்றன”

என்று குறிப்பிடுகிறார்.

“கன்னடத்தையும் தெலுங்கையும்போல, மலையாள மொழியும் இலக்கிய மரபுச் சொற்கள் பலவற்றைச் சமஸ்கிருதத்திலிருந்து தாராளமாகக் கடன் வாங்கியது. சமஸ்கிருத ஒலிகளைச் சரியாக உச்சரிப்பதற்காக, பழைய வட்டெழுத்து முறையை விட்டுவிட்டு, தமிழ்-கிரந்தத்தின் அடிப்படையில் ஒரு புதிய எழுத்துமுறையை உருவாக்க வேண்டியிருந்தது”

என்றும் அவர் விளக்குகிறார்.

ஆக, முந்தைய சேரநாடென வழங்கப்பெற்ற இன்றைய கேரள மாநிலத்தில், அவர்தம் மொழியில், உணவில், இசையில் தமிழ்மணம் கமழ்வது வியப்பில்லைதானே?!

 அப்படிப்பட்ட ஒரு தொடர்புதான் ஓணநன்னாளும்.

ஓணம் தமிழரின் பழங்காலப் பண்டிகை என்பதுபற்றி பலர் பேசியும் எழுதியுமிருக்கிறார்கள். இது என் முறை.

ஓணத்திருநாள் திருமாலின் வாமன அவதாரத்தோடு தொடர்புபடுத்தியே கொண்டாடப்படுவதைப் பார்க்கிறோம்.

‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடிய’ என்று வாமன அவதாரத்தைப் பாடி, ‘திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே’ என்று இளங்கோவடிகள் சிலப்பதிகார ஆய்ச்சியர்க் குரவையில் போற்றும் முன்பே, சங்கப்பாடல்கள் வாமனரைக் குறிக்கக் காணலாம்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான முல்லைப்பாட்டின் தொடக்கமே திருமால் பெருமை பேசுகிறது.

‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்று தொல்காப்பியர் காட்டும் முல்லை நிலத்தின் தலைவன் மாயோனான திருமால் அல்லவா?

முல்லைப்பாட்டு, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, சோழநாட்டில் பிறந்த காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மழைமேகத்தை திருமாலோடு ஒப்பிடுகிறார் புலவர்.

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல

(முல்லைப்பாட்டு 1-3)

அகன்ற உலகத்தை வளைத்து, சங்கும் சக்கரமும் ஆகிய குறிகளை உடையவனும்,

மா தாங்கு தடக்கை – திருமகளை அணைத்த வலிமையான கையை உடையவனும்,

நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – மாவலி மன்னன் தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது விண்ணளவு உயர்ந்தவனுமாகிய திருமால்;

அந்தத் திருமாலைப் போல் முகிலானது, கடல்நீரைப் பருகியவுடன், மலைகளை இடமாகக் கொண்டு வலப்பக்கமாக எழுந்துநின்று, விரைந்து பெருமழையைப் பெய்ததாம்.

முல்லைப்பாட்டைப் போல, வாமனரைப் பற்றி வேறு பாடல்களிலும் காணமுடிகிறது. ஆனால், ஓணவிழா அல்லவா நாம் தேடுவது?

சரி, ஓணவிழாவைத் தமிழர்கள் கொண்டாடிய சான்றுகளை எங்கெல்லாம் காணமுடிகிறது?

சங்க இலக்கியத்தில் மதுரைக்காஞ்சியில் ஓணவிழவின் குறிப்பு வருகிறது. பத்திமை இலக்கியங்களில் சிவனைப் போற்றிய நாயன்மாரும், திருமாலைப் போற்றிய ஆழ்வார்களும் ஓணவிழாவைப் பற்றிப் பாடுகிறார்கள்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை, மாங்குடி மருதனார் பாடியது.

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி  சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் …

(மதுரைக்காஞ்சி 590 – 599)

என்ற வரிகளைப் பாருங்கள்…

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓண நன்னாள்

அவுணர்களைக் கொன்ற, பொன்னால் செய்த மாலையினையுடைய திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், 

வீரர்கள் எப்படித் தெருக்களில் வந்தார்களாம்??

கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி  

யானைத் தோட்டி வெட்டின வடுவுடைய முகம்

போர்க்கருவிகளைப் பயின்று தழும்புபட்ட போரைத் தாங்கும் பெரிய கை

தழும்புடைய நெற்றியுடன் காட்சியளிக்கும் போரை விரும்பும் மறவர்கள்-

எப்படி நடந்து வருகிறார்கள்??

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் …

வண்டுகள் நிறைந்த மலர்ச் சரத்தை அணிந்து வலிமையான களிற்று யானைகளைச் செலுத்தி நடந்து வருகிறார்கள்..

திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், யானைகளைத் தெருக்களில் நடத்திச் செல்கிறார்கள் வீரர்கள்..

இன்றளவும் யானைகள் கோயில்களோடும் திருவிழாக்களோடும் இணைந்திருப்பதைக் காண்கிறோம்.

சங்கநூலான மதுரைக்காஞ்சி நமக்குச் சொல்லும் செய்தி இது.

அடுத்து, சிவனை அம்மையப்பனாகக் கண்ட திருஞானசம்பந்தர், மயிலை கபாலீச்சரத்தில் பாடிய பூம்பாவைப் பதிகத்தில்-

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம்அமர்ந்தான் ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்

(பன்னிரு திருமுறை 2:47:2 திருஞானசம்பந்தர், இரண்டாம் திருமுறை, திருமயிலை கபாலீச்சரம்)

என்கிறார்.

மையிட்ட அழகிய கண்களையுடைய பெண்கள் வாழும் மயிலையில், திருநீறு அணிந்து கபாலீச்சரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். அங்கு நடக்கும் ஐப்பசி ஓணவிழாவையும் அடியவர்கள் போற்றுதலையும் காணாமல் போவாயோ பூம்பாவாய் என்று கேட்கிறார்.

ஓணவிழா, சம்பந்தர் காலத்தில் ஐப்பசியில் கொண்டாடப்பட்டதையும் இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

திருமாலையே முழுமுதல் கடவுளாக வழிபட்ட, திருமால் பெருமை பாடிய ஆழ்வார்கள் நெஞ்சுருகி உரைத்தது என்ன?

திருமழிசை ஆழ்வார்-

காணல்உறுகின்றேன் கல்அருவி முத்து உதிர 
ஓண விழவில் ஒலிஅதிர  பேணி
வருவேங்கடவா! என்உள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று

(2422, திருமழிசை ஆழ்வார்,  நான்முகன் திருவந்தாதி, மூன்றாம் ஆயிரம்)

என்கிறார்.

நானோ உன்னைத் தேடி திருவேங்கடம் அதனைச் சென்று காணல் உறுகின்றேன்….. நீயோ என் உள்ளம் புகுந்தாய்

கல்அருவி முத்து உதிர ஓண விழவில் ஒலிஅதிர  ….. வேங்கடத்தில், அருவிகளிலிருந்து முத்துக்கள்போல நீர் ஆர்ப்பரித்து விழுகிறது;

அந்த ஒலியோடு தொண்டர்கள் திருமாலைப் போற்றிப் பல்லாண்டு பாடும் ஒலியும் சேர்ந்து வேங்கடமலையில் ஒலியதிர்கிறது என்கிறார் திருமழிசை ஆழ்வார்.

சரி, இந்தக் காட்சி நடக்குமிடம் திருவேங்கடத்தில், ஆனால் நடக்கும் நாளோ மாலுக்குரிய நாளான ஓணவிழாவில் என்பதுதான் நமக்குக் கிடைக்கும் வரலாற்றுச் செய்தி.

அடுத்து, பெரியாழ்வார் தம் திருப்பல்லாண்டில்-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி

வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில் 

அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப் 

 பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே 

 (6, பெரியாழ்வார், திருப்பல்லாண்டு)

என்கிறார்.

நாங்கள் வழிவழியாக ஏழேழு பிறவியிலும் திருமாலுக்கே தொண்டு செய்கின்றோம் என்பவர், திருவோணத் திருவிழவில், அந்திப் பொழுதில் அரியுரு எடுத்தவனைப் பல்லாண்டு பாடுவோமென்கிறார். நற்றமிழில் நரசிம்ம அவதாரத்தைக் குறிப்பிடுகிறார்.

ஆயினும், திருவோணத்தைக் குறிப்பிடும் பெரியாழ்வார் வாமன அவதாரத்தை இணைத்துப் பாடாதது இங்கு நோக்கத்தக்கது.

திருப்பல்லாண்டின் மற்றொரு பாடலில்-

உடுத்துக் களைந்த நின் பீதகஆடை உடுத்துக் கலத்ததுண்டு

தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்

விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்

படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே

(9, பெரியாழ்வார், திருப்பல்லாண்டு)

என்கிறார் பெரியாழ்வார்.

நீ உடுத்திக் களைந்த பட்டாடையை நாங்கள் உடுத்துகிறோம்; உனக்கு முதலில் கலத்தில் படைத்த உணவையே நாங்கள் உண்ணுகிறோம்; நீ சூடிய துழாய் மாலையை நாங்கள் சூடிக்கொள்கிறோம்;

நீ எங்களைச் செய்யப் பணித்த தொழிலையே செய்யும் நாங்கள்- பாம்பணையில் பள்ளிகொண்ட உமக்குப் பல்லாண்டு பாடுகிறோம், என்று வெறுமனே சொல்லாமல்,

திருவோணத் திருவிழவில்படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே

என்று வரலாற்றுத் தகவலையும் தந்து செல்கிறார்.

ஆக, முந்தைய இலக்கியங்கள் வாயிலாக, ஓணவிழா சங்ககாலம் தொடங்கி பத்திமைக்காலத்திலும் தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பது நமக்குத் தெரிய வருகிறது.

தமிழர்களாகிய நமக்குக் கிடைத்துள்ள பெரும் சொத்து நம் பழம்பெரும் இலக்கியங்கள். அவை, நம் மூதாதையர் நமக்கென எழுதிச்சென்ற கடிதங்கள். அவற்றைத் தேடித்தேடி மேலும்மேலும் படிக்கப்படிக்க, நம் வரலாறும் பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்பட்ட சமூகமாற்றங்களும் நமக்குப் புரிபடும், நம் உண்மையான அடையாளமும் தெளிவுபெறும்.

நன்றி.

Podcast available on:   Apple   Google     Spotify

 

 

 

 

2 Comments

  1. மன்சூர் சொல்கிறார்:

    நல்ல பதிவு, புதிய தகவல்! நன்றி!! 🙏

    Like

    1. attraithingal சொல்கிறார்:

      நன்றி 🙏😊

      Like

பின்னூட்டமொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s