ஏறு தழுவல்- இன்றும் தொடரும் கலித்தொகைக் காட்சிகள்


சென்ற பதிவில் கண்ட பொங்கல் காட்சியின் தொடர்ச்சிபோலவே, இன்றும் தொடரும் ஏறு தழுவும் வீர விளையாட்டின் சுவைமிகு காட்சிகளை இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.

பொங்கலும் சரி அதைத் தொடரும் ஏறு தழுவலும் சரி, ஊர்க்கூடி இழுக்கும் தேரினைப்போல ஊரார் பங்கேற்றுப் பொதுமக்கள் ஒன்றுகூடித் தொடர்ந்துக் கொண்டாடிவரும் தொல்தமிழர் விழாக்கள். அப்படிப்பட்ட தொல்தமிழர் வீரத்தைப் பறைசாற்றும் ஏறு தழுவல் இன்றுவரைத் தொடரும் அழகைக் காட்டுகிறது எட்டுத்தொகை இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகை.

போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு தார் போல் தழீஇயவன் (34-35) எனுமிடத்தில், வீரன் ஒருவன் போர்க்குணத்தோடு தடித்த தோலுடன் தாக்க வரும் காளையின் கழுத்தில்; தார் போல் தழீஇயவன்– மாலைபோலச் சுற்றித் தழுவி நிற்கிறான் என்று விளக்குகிறது கலித்தொகை. ஏறினை மாலைபோலத் தழுவிய உவமையின் காரணமாகவே, இந்த வீர விளையாட்டு ஏறு தழுவுதல் என்றும் ஏறு தழுவல் என்றும் அழைக்கப்படுகிறது.

முல்லைக்கலியைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரனார். கலித்தொகையின் 103ஆவது பாடல், முல்லை நிலத்துத் தோழி தலைவியிடம் கூறுவதாக அமைகிறது. அப்பாடலின் சிறப்பு என்னவென்றால், அவர்கள் இருவரும் அரங்கின் மேலிருந்துகொண்டு, கீழே நடக்கும் ஏறு தழுவுதலை நமக்கு நேரடியாக விவரிக்கிறார்கள். மாட்டுப் பொங்கலன்று, தொலைக்காட்சியின் முன் அமர்ந்து ஏறு தழுவலை நீங்கள் பார்ப்பதுபோல் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

வாருங்கள்! இனி, பண்டைத் தமிழிலக்கியமான கலித்தொகை விளக்கமாகக் காட்டும் தமிழரின் தொன்மையான ஏறு தழுவல் நடக்கும் அரங்கத்துக்குள் செல்வோம்.

அங்கே, பல காளைகளை வைத்திருக்கும் ஆயர்குல ஆடவர் ஏறு தழுவ ஆயத்தமாக நிற்கிறார்கள். அவர்கள், நறுமணம் கமழும் கொன்றை, காயா, வெட்சி, பிடவு, தளவம், குல்லை, குருந்து, கோடல், பாங்கர் என்று பல்வகை மலர்களை அணிந்திருக்கிறார்கள். அவர்களுடைய வீரத்தைக் காணக் காத்திருக்கும் பெண்கள் உயரமான மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய பற்கள், முல்லை மொட்டையும் மயிலிறகின் காம்பையும் ஒத்திருக்கின்றன; பெரிய கண்களையுடைய அவர்களின் காதுகளில் கனமான குழைகள் ஒளிர்கின்றன.

வீரர்களுடன் மோதுவதற்காகக் காளைகள் நிற்கும் இடத்துக்குத் தொழு என்று பெயர். முரட்டுக் காளைகள் எப்படி இருக்கின்றன?

மணி வரை மருங்கின் அருவி போல
அணி வரம்பு அறுத்த வெண்கால் காரியும்,
மீன் பூத்து அவிர்வரும் அந்தி வான் விசும்பு போல்
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும்,
கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல்
வளையுபு மலிந்த கோடு அணி சேயும் (11-16)

என்றால்- கருத்த நிறத்தில் ஒரு காளை நிற்கிறது. அதன் கால்கள் மட்டும் வெண்மையாக இருப்பது, மலைகளின் மேலிருந்து விழும் வெள்ளருவியைப் போலிருக்கிறது; அந்தி வானின் நிறத்தில் ஒரு காளை, அதன் மேலிருக்கும் வெள்ளைப் புள்ளிகள் வானில் தெளித்த தாரகைகள் போலிருக்கிறது; அடுத்து நிற்கும் சிவப்பு நிறக் காளையின் வளைந்த கொம்பு, சிவபெருமான் தலையில் அணிந்த நிலவைப் போலிருக்கிறது. எப்படியிருக்கிறது பாருங்கள் காளைகளின் மிடுக்குடன்கூடிய அழகு!!

களத்தினுள் குதிக்க ஓரிடத்தில் ஒன்றாக நிற்கின்றன இக்காளைகள். நமக்கு இவை எதை நினைவுபடுத்துகின்றன தெரியுமா?

அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும்
பெரு மலை விடர் அகத்து ஒருங்கு உடன் குழீஇ,
படுமழை ஆடும் வரை அகம் போலும் (18-20)

மழை மேகங்களால் சூழப்பட்ட பெரிய மலையின் குகையில் – சிங்கங்களும் குதிரைகளும் முதலைகளும் ஒன்றாகக் கூடியதுபோல் இவை நிற்கின்றன, என்கிறாள் தோழி.

ஏறு தழுவல், வீரத்தை வெளிப்படுத்திப் பெருமைகொள்ளும் விளையாட்டு மட்டுமல்ல, பெண்களை மணமுடிக்க ஆண்கள் பெறும் தகுதிக்கான சிறப்புடைய சமூக நிகழ்வும் என்பதால், மேடைகளின்மேல் பெண்களும் மற்றோரும் நகம்கடித்துக் காத்திருக்கிறார்கள்.

அங்கே மயிர்க் கூச்செறியும் காட்சிகள் அரங்கேறுகின்றன-

தொழுவினுள் மிகுந்த ஆர்வத்துடன் நுழையும் ஒரு வீரனைக் காளை, குத்திக் கிழித்து அவன் குடலைத் தன் கொம்புகளில் சுற்றிக்கொள்கிறது. அச்சமூட்டும் இந்த வேளையிலும் தமிழ்ப் புலவர் உவமைநயத்தை மறக்கவில்லை. இரத்தத்தில் நனைந்துச் சிவப்புக் குடல் சுற்றிய காளையின் கொம்பு எப்படியிருந்ததாம்? ஒளிரும் மழுவேந்திய சிவனார் தலையில் இருக்கும் வெண்திங்களை அழகுசெய்யும் சிவப்புநிற மாலையைப் போலிருந்ததாம்.

அதுமட்டுமா?

அங்கே பாருங்கள்.. குடல் கிழிக்கப்பட்ட அந்த வீரனுக்குத்தான் என்ன துணிச்சல்? அவன் சற்றும் பின்வாங்கவில்லை. காளையின்முன் அச்சமின்றி நின்று, அதன் கொம்பிலிருந்துத் தன் குடலை நீக்கிக்கொண்டிருக்கிறான். அவனுடைய பெருமையை எப்படிப் பாராட்டுவது? குடலை உருவி மாலையாய்ப் போடுவேன் என்று வீரவசனம் பேசுவதெல்லாம் இங்கிருந்து வந்ததுதான் போலிருக்கிறது!

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அடுத்து, எருது வளர்ப்பவர்களின் மகன் ஒருவன் முன்னே தாவி, காளையின் கடினமான கழுத்தை மாலைபோலச் சுற்றிக் கொண்டு இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்கிறான்; மற்றொருவன் மாடு வளர்க்கும் குடும்பத்தினன். அவனோ புள்ளிகளுடைய காளையின் மேலே அமர்ந்துப் பயணிக்கிறான். ஆற்றில் படகு விடுபவனைப் போலக் காளையை அடக்கி ஓட்டுகிறான் அவன்.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

இந்த இளைஞனைப் பார்…. காற்றைப்போல் வேகமாக வந்த இளம் கருப்புக் காளையை வென்று அதன் மேலே நின்றுகொண்டிருக்கிறான்.

இந்தக் காட்சிகளைக் கேட்கும் நமக்கே நடுக்கம் ஏற்படுகிறது.

நேரில் கண்டு விவரிக்கும் தோழியின் நெஞ்சம் நடுநடுங்குகிறது. மற்றொரு வீரனோ, மிகுந்த வேகத்துடன் தன் மேல் ஏறி மிதிக்கும் காளையை, அதன் காதுகளைப் பிடித்துத் தாக்குகிறான். பிடரிமயிர்க் கொண்ட குதிரையின் வாயைப் பிளந்த திருமாலைப் போலிருக்கிறானாம் அந்த வீரன். ஆண்டாளும் திருப்பாவையில் ‘மாவாய்ப் பிளந்தானை’ என்று பாடுவது இங்கு நினைவுக்கு வருகிறது.

மனம் பதைபதைக்கும் விளையாட்டு நிறைவுற்றது. வலிமையான புலிகளும் பெரிய யானைகளும் ஒன்றோடொன்று போரிட்டதுபோலக் காளைகளை அடக்கிய வீரர்கள், தொழுவைவிட்டுச் செல்கிறார்கள். விளையாட்டு அடங்கிய அந்தக் களமெங்கும் காயா மலர்கள் இங்கும் அங்கும் இறைந்து கிடக்கின்றன. கண்களில் மையணிந்த அழகான இளம்பெண்கள், ஆண்களுடன் ஆடி மகிழ்கின்றனர்.

இப்படி ஒரு வீரவிளையாட்டைக் காணும் எவருக்கும் சிலிர்ப்பு ஏற்படுவது இயல்புதானே! அதனால்தான், காளையை அடக்கிய வீரர்களைத் தவிர்த்து வேறு ஆடவரை ஆயர்மகளிர் விரும்பமாட்டார்கள் என்பதை விளக்க,

கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள் (63-64)

என்கிறாள் தோழி. காளைகளின் கொல்லும் தன்மையுடைய கொம்புகளைக் கண்டு அஞ்சும் ஆடவனோடு, இந்தப் பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறப்பிலும் இணையமாட்டாளாம் ஆயர்மகள். முல்லைநில ஆயர்கள் வீரத்திற்குக் கொடுத்த சிறப்பிடத்தை விளக்க இந்த வரிகள் மட்டுமே போதும்.

இந்த உணர்வை விளக்க, முல்லைக் கலியைப் படைத்த சோழன் நல்லுருத்திரனாருக்கு மேலே சொன்ன இரண்டு வரிகள் போதவில்லை, 11 வரிகளை எடுத்துக் கொள்கிறார்.

இகுளை! இஃது ஒன்று கண்டை! இகுளை! இஃது ஒன்று கண்டை! – என் தோழியே.. இந்தக் காட்சியைப் பார்… இங்கு நடக்கும் வீரர்களின் தீரச்செயல்களைப் பார் என்று பாடலில் தோழி வியந்து வியந்துத் தலைவிக்கு ஆடவர் ஏறு தழுவும் வீரப்போட்டியைக் கண்ணகலக் காட்டுகிறாள். அவள் காட்டுவதெல்லாம், நமக்குத்தான். இத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து நாமும் வியந்துச் சுவையுடன் கேட்பதற்குத்தான்.

இந்தப் பாடல் மட்டுமல்ல, தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் பலப்பலக் காட்சிகள் சங்க இலக்கியங்கள் முழுதும் நிறைந்துக் கிடக்கின்றன. இந்தப் பாடலைக்காட்டிலும் வியப்பு ஏற்படுத்துவது ஒன்று உண்டு… அது, இந்தக் காட்சிகளின் சாயலோடு இன்றும் நம் மண்ணில் ஏறு தழுவுதல் தொடர்வதுதான். 

காளையைச் செல்லமாகச் செல்வமாக வளர்ப்பதில் பொதிந்திருப்பது அன்பு; அதை அடக்கவரும் ஆடவரிடம் குடிகொண்டிருப்பதோ வீரம்; முரட்டுக் காளைகளை அடக்கிய வீர இளைஞர்களைக் கைப்பிடிக்கக் காத்திருக்கும் இளம்பெண்களிடம் நாம் காண்பது அச்சத்துக்கும் இளமைதரும் மயக்கத்திற்கும் இடையிலான விளக்க இயலாதத் துறுதுறுப்பு. காதலோ மென்மையான உணர்வு; வீரமோ வன்மையானது. இப்படி நேரெதிர் உணர்வுகளை மையக்கருக்களாகக் கொண்டு போற்றுகிறது சங்க இலக்கியம்.

ஏறு தழுவலின் அன்றைய நோக்கம் இன்றில்லை. இது, கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மட்டுமே கரம்பிடிக்கத் தமிழ்மகளிர் துடிக்கும் காலமுமல்ல; அதற்குத் தேவையுமில்லை. ஆனால் ஒன்றைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏறு தழுவலால் மண்ணுக்குரிய மரபுவழிக் காளைகள் அழியும்முன் காக்கவேண்டியத் தேவை கலித்தொகைக் காலத்தில் இருந்திருக்கவில்லை. பண்பாட்டுச் சடங்குகளால் இயற்கைவிதிகள் பேணப்பட்டதாகவே தெரிகிறது.

கலித்தொகை காட்டிய காட்சிகள் இன்றைய காலத்திற்கேற்ப மாறியுள்ளன. இன்றைய போட்டிகளின்போது நம் காதுகளில் மிகுதியாக ஒலிப்பது- ‘மாடு வெற்றி பெற்றது’ அல்லது ‘மாடு பிடிபட்டது’. இக்காலத்து மரபுமாற்றுச் சந்தையில் உண்மையில் நம் மண்ணுக்குரிய காளைகள் வெற்றிபெறுவதே நமக்கெல்லாம் நன்மை.

காதலும் வீரமும் போற்றிய பழந்தமிழர் பண்பாட்டினுள் புதைந்துக் கிடக்கும் நாகரிகம் செழித்த வாழ்வை அறிந்திடவும் சுவைத்திடவும் மட்டுமல்லாமல், உணர்ந்துப் பேணிடவும் இலக்கியங்களை நாம் நாடிச் செல்வதுதான் ஒரே வழி.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

மண்மணம் வீசும் தைத்திங்கள் திருநாள்- தொடரும் தொல்தமிழர் வழக்கங்கள்


தமிழால் இணைந்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திங்கள் மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஆண்டு முழுதும் சமயம் சார்ந்த, புராணக் கதைகளோடு இணைந்த பல்வேறு பண்டிகைகள் வந்து போகும். ஆனால், பொங்கல் என்ற ஒரு சொல் போதும், தமிழ் மண்ணின் மணம் பரப்பும் எண்ணில்லாக் காட்சிகள் நம் நினைவலைகளில் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கும். மண்ணுக்கு மணம் உண்டா என்றால், ‘பூவுக்கும் வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ’ என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. வேர்களின் மணம் நம் டிஎன்ஏக்களில் பொதிந்திருப்பதால்தான் அந்த வேருக்குரிய பண்பாட்டுக் கூறுகள் நம்மை ஈர்த்துக் கொண்டே இருக்கின்றன. மண்ணையும் அதன் மணத்தையும் நம் பண்பாட்டின் பழமையையும் அதன் பெருமையையும் பேசவும் வியக்கவும் இலக்கியத் தரவுகள் நம்மிடம் இருப்பதுபோல வேறெந்தச் சமூகத்திடமும் இல்லை என்பது என்னை அறியாமல் ஒவ்வொரு பதிவிலும் வந்துவிட நேர்ந்தால், அது என் பிழையல்ல; நம் முன்னோர் எழுத்தாற்றலால் விளைந்த உணர்வு.  

பொங்கல் என்றதும் மனதை மகிழ்வூட்டும் காட்சிகள் என்னென்ன என்பதைப் பற்றி நாம் இன்று பேசப் போவதில்லை. மகிழ்வூட்டும் அந்தக் காட்சிகள் தமிழ்ச் சமூகத்தில் எத்தனை ஆண்டுகாலமாய்த் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன என்பதைத்தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

நிலத்தை உழுது விதை விதைக்கும் உழவுத் தொழிலும், தைத்திங்களும், தை மாதத்து அறுவடையும், கதிரவனை வழிபடுதலும், வீட்டின் முன்வாசலில் இடும் கோலமும், அதே முன்வாசலில் விறகுமூட்டி எரியும் அடுப்பும், பானையில் பொங்கும் சோறும், புதிதாய் விளைந்த காய்களும், கரும்பும், மஞ்சளும், வாழை இலையில் பரிமாறிய உணவும், சமயச் சார்பில்லாத பொங்கல் பண்டிகையைச் சுட்டும் அடையாளங்கள். இவையனைத்தும், ஈராயிரம் ஆண்டுகள் தாண்டி இன்றுவரை நம்முடன் தொடர்ந்து இணைந்துவரும் நெடுங்காலக் குறியீடுகள். இந்தத் தமிழர் தொன்மங்களுக்கான சான்றுகள் அனைத்தும் நம் பண்டைய நூல்களில் உண்டு.

தொல்காப்பியர், வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி (மரபியல் 81) என்ற வரிகளில், நிலத்தையுடைய வேளாண் மக்களுக்கு உழவே தலையாயத் தொழில் என்கிறார். உழவர்களின் சிறப்பை வள்ளுவரும், ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெலாம் தொழுதுண்டு பின்செல்பவர்‘ என்றுரைத்தது நாம் அறிந்ததுதானே. தமிழர்கள் உழவுத் தொழிலை எவ்வளவு போற்றியிருந்தார்கள் என்பது இதனால் புரியும்.

சங்க இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை தை மாதச் சிறப்பைக் குறிப்பிட்டுச் சுட்டுகின்றன. பத்திமைக் காலத்திலும் இது தொடர்ந்ததை, ’நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்‘ என்ற சம்பந்தரின் மயிலைப் பதிகம் உறுதிசெய்கிறது.

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் தொடங்குவதே திங்களையும் ஞாயிறையும் மாமழையையும் போற்றித்தான். சிலம்பின் நான்காவது வரி, ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்‘  (மங்கல வாழ்த்துப் பாடல்- 4) என்று கதிரவனைப் போற்றும் வழக்கம் அக்காலத் தமிழரிடையே இருந்ததை முதன்முறையாகச் சொல்கிறது.

ஆக, உழவர் பெருமை, தை மாதத்தின் சிறப்பு, கதிரவனை வழிபடல் என்று இன்றைய தைத்திருநாள் முதன்மையாக வலியுறுத்துபவை, பழந்தமிழர் வாழ்விலிருந்து நாம் பெற்றவை என்பது தெளிவு.

புறநானூறின் 168ஆவது பாடலோ மேலும் பல சுவையான காட்சிகளை எடுத்தியம்புகிறது. குதிரைமலைக்குத் தலைவனாம் பிட்டங்கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது இந்தப் பாடல். சிறந்த வள்ளலாகத் திகழ்ந்த பிட்டங்கொற்றனின் ஈகைப் பண்பைப் போற்றும் பாடல், அவருடைய நாட்டு வளத்தை முதலில் சொல்கிறது.

அருவி ஆர்க்கும் கழை பயில் நனந்தலைக்
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி (1-4)

பிட்டங்கொற்றனுடைய நாட்டில் அருவிகள் ஆர்ப்பரிக்கின்றன; அகண்ட நிலப்பரப்பில் மூங்கில் அடர்ந்தும், மலைகளில் மிளகு நிறைந்தும் விளைந்திருக்கிறது; அந்த வளமான நிலத்தில் காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன; காந்தள் மலரின் வேரிலுள்ள கிழங்கைக் காட்டுப் பன்றிக்கூட்டம் தோண்டியெடுத்து உண்கிறது; அதை, கடுங்கண் கேழல் கிண்டி உழுத பூழி‘என்கிறார் புலவர். வலிமையான காட்டுப்பன்றிகள் நிலத்தை உழவன் உழுததுபோலக் கிண்டி உழுததால் அந்த இடமே புழுதிக்காடாகத் தெரிகிறது.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அப்படி மண்ணை உழுது, காட்டுப் பன்றிக்கூட்டம் கிழங்கைத் தோண்டியதால், அங்கு வாழ்ந்த குறவர்களுக்குத் தம் மண்ணை உழவேண்டியத் தேவையே இருக்கவில்லை.

நன்னாள் வருபதம் நோக்கிக், குறவர் 
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் (5-7)

உழவேண்டியத் தேவையே இல்லாததால் அவர்கள் உகந்த நேரத்தில், சிறிய தினைப்பயிரை நெருக்கமாக விதைக்கிறார்கள். எதற்காக? குறைவின்றிக் கிடைக்கும் புதுவிளைச்சலை உண்டு மகிழ்வதற்காக.

அடுத்து அவர்கள் என்ன செய்கிறார்கள்?-

மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி,
வான்கேழ் இரும் புடைகழாஅது, ஏற்றி  (7-10)

அவர்கள், நுரைபொங்கும் இனிக்கும் சுவையுடைய மானின் பாலைப் பானையில் இடுகிறார்கள்; சரி, அந்தப் பானை எப்படி இருக்கிறது? மான் இறைச்சியை வேகவைத்த மணத்துடன் இருந்ததாம் அந்தப் பானை.

சரி, நிலத்தை உழுதாகிவிட்டது; தினையை மிகுதியாக விதைத்தாகிவிட்டது; பானையில் மானின் பாலை வைத்தாகிவிட்டது. அடுத்து என்ன?

சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! (11-14)

காட்டுமல்லிப் பூத்துக்குலுங்கும் வீட்டின் முன்பகுதியில், சந்தன விறகில் எரியும் அடுப்பை ஏற்றி, அதில் சோறு சமைக்கிறார்கள். 

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

இன்று சிற்றூர்களில் காணக்கூடிய, நகரங்களில் அருகிப்போய்விட்ட- வாசலில் இடும் பொங்கலை இது படம்பிடித்துக் காட்டுகிறது இல்லையா! நாள்தோறும் சமைக்கும் உணவு வீட்டுக்குள் இருக்கும் அடுக்களையில் பொங்கப்படும். கொண்டாட்டத்திற்குரிய சிறப்பு நாட்களில் வீட்டு முன்பகுதியில் சோறு பொங்குவது தமிழர் மரபு என்பதை இது காட்டுகிறது. இன்றும் கோயில்களில் விழாநாட்களில் விறகடுப்பில் ஒன்றாக அமர்ந்துப் பொங்கலிடுவதை நாம் இங்கு ஒப்புநோக்கவேண்டும்.

அடுத்து, சமைத்த உணவைச் செழுமையாய் வளர்ந்த வாழை மரத்தின் பெரிய இலைகளில் பரிமாறிப் பகிர்ந்து உண்கிறார்கள். ‘செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும் ஊராக் குதிரைக் கிழவ!’ (13-14) என்கிறார் புலவர். பிட்டங்கொற்றனின் ஆட்சிப் பகுதி குதிரை மலை; அதனால், ஊராக் குதிரைக் கிழவ என்று – ஊர்ந்து செல்லாத/ ஓடாத குதிரையாம் குதிரை மலைக்குத் தலைவனே என்று மன்னனைப் பாடுகிறார்.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

முன்றில் என்னும் வீட்டின் முன்பகுதியில் சிறப்பாகச் சோறு சமைத்ததைப் பார்த்தோம். தமிழர் வீட்டு முற்றத்தில் என்னென்ன இருந்தனவாம்? பட்டினப்பாலை வழியாகச் சோழநாட்டு வீட்டுக்குள் நுழைந்து பார்க்கலாம்- கோள் தெங்கின் குலை வாழை; காய் கமுகின் கமழ் மஞ்சள்; இன மாவின் இணர் பெண்ணை; முதல் சேம்பின் முளை இஞ்சி; அகல் நகர் வியல் முற்றத்து (15-20) – கொத்துக் கொத்தாய்த் தென்னை, குலைக்குலையாய் வாழை, காய்த்து நிற்கும் பாக்கு, மணம் கமழும் மஞ்சள், நிரம்பி நிற்கும் மாமரங்கள், நிறைந்த பனை, சேம்பு, முளையுடைய இஞ்சி என்று வீட்டின் அகண்ட முற்றத்தில் செழிப்பான மரம் செடிகளைக் காண்கிறோம்.

சங்கப் பாடல்கள் பலவற்றில் ஓயாது நம் காதுகளில் ஒலிப்பது, கரும்பாலைகளின் ஒலி. எடுத்துக்காட்டாக, கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை என்று கரும்பு ஆலைகள் வைத்துக் கரும்பின் பாகும் கற்கண்டும் உருவாக்கி, அவற்றினின்று பலவித இனிப்புப் பண்டங்கள் செய்ததை மதுரைக் காஞ்சியில் சென்ற பதிவில் பார்த்தோம்.

அடுத்து, கோலங்கள். கோலங்கள் வீட்டின் நுழைவாயில் பகுதியை ஆண்டுமுழுக்க அலங்கரிக்கின்றன. ஆனாலும், மார்கழி முதலே தொடங்கித் தை மாதத்தில் வீடுகளுக்குப் பண்டிகைப் பொலிவைத் தரும் அழகார்ந்த கோலங்களை இங்கு மறக்க முடியுமா? ஓங்கு மணல் வரி ஆர் சிறு மனை (நற்றிணை 378), அகல் வரிச் சிறு மனை (நற்றிணை 273), வரி புனை சிற்றில் (நற்றிணை 123) என்ற நற்றிணைப் பாடல்வரிகள், சிறிய வீடுகள் என்றாலும் அவை வரிகளால் புனையப்பட்ட கோலங்களால் அழகூட்டப்பெற்றமையை அறிகிறோம்.

உழுது, விதைவிதைத்து, தையிலே அறுவடை செய்து, இல்லத்தில் கோலங்கள் வரைந்து, கதிரவனை வணங்கி, வீட்டின் முன் பகுதியில் சந்தன விறகில் அடுப்பு வைத்து, உலையிட்டுச் சோறு பொங்கி, அறுவடைக் காலத்தில் மண் வழங்கிய காய், கனிகளைச் சமைத்து, பெரிய வாழையிலையில் உணவுப் பரிமாறிப் பகிர்ந்து உண்டு, அக்காலத்தே விளைந்த மஞ்சள், கரும்பைக் கொண்டாட்டங்களில் இணைத்து, காலம் காலமாக தமிழக வயல்கள் வழங்கிய செல்வங்களைச் சேர்த்துச் சேர்த்து வந்ததுதான் நாம் இன்று கொண்டாடும் பொங்கல் திருநாள்.

இவை அனைத்தையும் தாண்டி, தைத்திருநாள் ஒரு நன்றி பாராட்டும் நன்னாள். அடிப்படை உணவு தந்த மண்ணுக்கும் அந்த மண்ணை வளமாக்கிய வானுக்கும் முதன்மையாக நன்றி கூறும் காலம் என்பதால்தான்,  தமிழ்நாட்டில் இருந்தாலும் வேறு மாநிலங்களிலோ உலகெங்கும் பரவி வேறு நாடுகளிலோ வாழ்ந்தாலும், தைத்திருநாள் பொங்கலைத் தமிழர் இணைந்து விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். வீட்டுக்குள் குடும்பத்தோடு நின்றுவிடாமல் ஊர்க்கூடிக் களிக்கும் திருவிழா இது. உழவர் தமக்கென உழைத்தவர்களையும், உழவரல்லாத மற்றவர்கள்- அன்றாடம் உண்ணும் உணவைத் தடையின்றி வழங்க உழைத்த உழவர்களையும் நினைத்து நன்றியுணர்வுடன் நெகிழ்ந்து வணங்கும் பண்டிகைதான் பொங்கல்.

இந்தச் சங்கப் பாடல்கள் படம்பிடித்திருக்கும் காட்சிகளின் சாயலைத்தானே இன்றும் உலகெங்கும் வாழும் நம் தமிழ்க்கூட்டம் திருநாளெனக் கொண்டாடுகிறது? பொங்கல் என்பது வெறும் திருநாள் அல்ல. ஒரு சமயம் சார்ந்ததென்று குறுகிய வட்டத்தில் வைக்கப்படும் பண்டிகையும் அல்ல. பண்டைத் தமிழர்களின் தொன்மையான குறியீடுகள் பலவற்றை நமக்கு நினைவூட்டும் நன்னாள் என்பதை இவற்றிலிருந்து நாம் உறுதியாக அறிந்துகொள்ளமுடியும்.

ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் பரவிநிற்கும் இந்தத் தொன்மைப் பண்பாட்டு வேரின் வாசம் தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்து வீசுகிறது. அதனால்தான்…. தமிழ்மொழியின் பெருமை அதன் தொன்மையில் இல்லை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது என்பதுபோல, எந்நாட்டில் வாழ்ந்தாலும் தம் வேர்களை நேசிக்கும் தமிழரின் பெருமை பழமையில் அல்ல, இன்றும் அவர்களுடன் சேர்ந்தே பயணிக்கும் செழுமையான பண்பாட்டுத் தொடர்ச்சியில்தான் இருக்கிறது.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google