மதுரைக்காஞ்சியின் வியக்க வைக்கும் காட்சிகள்

சென்ற பகுதியில் மதுரை மாநகரைச் சுற்றி வந்தபிறகு, இனி, தமிழின் இனிமையும் உவமைச் செழிப்பும் பொருள் சிறப்பும் பொருந்திய மதுரைக்காஞ்சியில் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒருசில காட்சிகளைப் பார்ப்போம்.

1. கரும்பு ஆலைகள் 

வளமான மருத நிலத்திற்குள் நுழைந்தால், அங்கு ஒலிக்கும் பல்வேறு ஓசைகளைக் கேட்கிறோம். அதில் ஒன்று, கரும்பாலைகளின் ஓசை என்று முன்னரே பார்த்தோம்- கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை (258). கரும்பு ஆலைகள் வைத்துக் கரும்பின் பாகும் கற்கண்டும் உருவாக்கி, அவற்றினின்று பலவித இனிப்புப் பண்டங்கள் செய்தது இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருந்தது தெரிகிறது. அதனால்தான் தமிழ்ப் பாடல்வரிகளில் எப்போதும் கட்டிக் கரும்பும், கன்னல் சாறும், சர்க்கரைப் பாகும் இனிமைக்கு உவமைகளாக நிற்கின்றன போலும்.

2. அடை, மோதகம், அப்பம்

அப்படி என்னென்ன பண்டங்கள் செய்தனர்?

நல்வரி இறாஅல் புரையும் மெல்அடை
அயிர் உருப்புஉற்ற ஆடுஅமை விசயம்
கவவொடு பிடித்த வகைஅமை மோதகம்
தீஞ்சேற்றுக் கூவியர்
(624-626)

நல்ல வரிகளையுடைய தேனடையைப் போன்ற மெல்லிய அடையும், கற்கண்டைச் சூடேற்றிக் கிடைத்த பாகோடு பலவற்றைக் கலந்து உள்ளே வைத்துப் பிடித்துச் செய்த மோதகமும், இனிய பாகுடன் செய்த அப்பமும் விற்பவர்கள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு இரவின் இரண்டாம் சாமத்தில் உறங்கச் செல்கிறார்கள்.

3. ஊன் சோறு

அடுத்து வரும் உணவு வகையான ஊன் சோறு, இன்று பிரியாணி என்று நம்மில் பலரும் விரும்பி விரும்பி நாடிச் செல்லும் உணவை ஒத்தது. இந்த ஊன் சோறு சங்க காலத்தில் பரவலாகப் பரிமாறப்பட்டதைப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் பல இடங்களில் நமக்குக் காட்டுகின்றன.

அது, பலரும் புகழும்படி சமைக்கப்பட்ட பெரிய இறைச்சித் துண்டுகள் கலந்த சோறாம். அதனால்தான் மதுரைக் காஞ்சி – ‘புகழ்படப் பண்ணிய பேர் ஊன்சோறு’ (533) என்று பலரால் விரும்பப்பட்ட அதன் தன்மையை எடுத்தியம்புகிறது.

பரதவரைப் பாண்டியன் வெற்றி கொண்டதைச் சொல்லும்போது, அவர்கள் பகுதிகளில் கோழ் ஊஉன் குறைக்கொழு வல்சி (141) உண்ணப்பட்டது தெரிகிறது. அதாவது, கொழுத்த இறைச்சியுடன் சமைக்கப்பட்ட சோறு வழங்கப்பட்டது.

4. தோலால் செய்யப்பட்ட செருப்பு

மூன்றாம் யாமத்தில், கரிய பெண் யானையின் தோலைப் போன்ற கருமையான இருள் பரவிக் கிடக்கிறது. ஊர் நிம்மதியாக உறங்கும் அந்நேரத்தில், மழை பெய்து தேர்கள் இயங்கும் தெருவில் நீர் திரண்டு ஓடுகிறது. அந்தச் சூழலிலும், சோம்பலோ தளர்ச்சியோ இல்லாமல் ஆர்வத்துடன் காவல் காக்கிறார்கள் ஊர்க் காவலர்கள்.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
(643-644)

வலிமையான ஆண்யானையை இரையாக எண்ணிப் பார்க்கும் வலிய புலியைப் போல், துஞ்சாத/தூங்காத கண்களை உடையவர்களாக அஞ்சாத கொள்கை உடையவர்களாக இருக்கிறார்கள்.

கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்
தொடலை வாளர் தொடுதோல் அடியர்
(635-636)

கற்களையும் மரங்களையும் வெட்டும் கூர்மையான தொங்கிய வாளும், தொடையோடு பொருந்திய- கைப்பிடியுடன்கூடிய கூரிய வாளும், நூலாலான ஏணியும், நிலத்தைத் தோண்டும் உளியும் தாங்கி, தெருக்கள்தோறும் இக்காவலர்கள் உலவுவதால் மக்கள் மன அமைதியோடு தூங்குகிறார்கள். அவர்களுடைய கால்களை கவனித்தால் என்ன தெரிகிறது? அவர்கள் தோலாலான காலணிகளை அணிந்திருக்கிறார்கள். இளங்கன்று மற்றும் ஆட்டின் தோல் கொண்டு இசைக் கருவிகள் உருவாக்கப்பட்டது அறிவோம். தோலைக் கொண்டு காலணிகள் செய்து அணிவது அக்காலத்திலேயே இயல்பான ஒன்றாக இருந்தது என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது.

5. கஞ்சியுடைய ஆடை / சிற்பம் 

அடுத்து ஒரு காட்சி- காலையில் கண்விழிக்கிறார் மன்னர். சந்தனச் சாந்தைப் பூசிக் கொள்கிறார். முத்து வட மாலை அணிந்த மார்பில் தேனீக்கள் மொய்க்கும் பூமாலை அணிகிறார். அழகிய மோதிரம் பொருந்திய வலிமையான பெரிய கையில் வீரவளையலுடன் காட்சி தருகிறார். 

அவருடைய ஆடை எப்படி இருக்கிறது? 

சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்
உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ
(721-722)

சோறு வடிக்கையில் கிடைக்கும் நீர்- அதாவது கஞ்சி இட்டுத் துவைத்த ஆடையை, உடைக்கு மேல் அணிகலன்கள் பொலிவுற அணிந்திருக்கிறார். கஞ்சியிட்ட மிடுக்கான ஆடை அணியும் வழக்கம் அன்றே இருந்ததையும் மதுரைக் காஞ்சி பதிவு செய்கிறது. கஞ்சியிட்ட மிடுக்கான ஆடையும் அணிகளும் மாலையும் உடுத்திய அரசர் எவ்வளவு அழகாகக் காட்சியளிக்கிறார் தெரியுமா?

வல்லோன் தைஇய வரிப் புனை பாவை
முருகு இயன்றன்ன உருவினை ஆகி
(723 – 724)

சிற்ப நூலைக் கற்றுத் தேர்ந்த வல்லவன் செய்த முருகனின் சிற்பம் போன்ற அழகிய வடிவத்துடன் இருக்கிறார்.

6. கல்லணை

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அடுத்து, இத்தனை அழகு பொருந்திய, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வீரர்கள் எப்படிப்பட்டவர்கள்?

வருபுனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து
ஒன்னார் ஓட்டிய செருப்புகல் மறவர்
(725-726)

கரை புரண்டு வரும் ஆற்று நீரைத் தடுத்து நிறுத்தும் கல்லணைபோல, தம் படைகளைத் தாக்க வரும் பகைவர்களைத் தடுக்கும் தன்மையுடையவர்களாக இருக்கிறார்கள். ‘வருபுனல் கற்சிறை’ – வரும் புனலைத் தடுக்கும் கற்சிறைதான் கல்லணை. கல்லால் அணை கட்டுவது தொன்மைத் தமிழரின் நீர் மேலாண்மைத் திறம் இல்லையா? அந்தச் சொல்லாக்கமும் ‘வருபுனல் கற்சிறை’ என்று எவ்வளவு அழகாக அமைந்துள்ளது பாருங்கள்.

மன்னரின் பெருங்கொடை

பாணர் வருக, பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என
இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி
(749 – 752)

பாணரையும் அவர்கள் குடும்பத்தில் உள்ள பாடும் பெண்களையும், செய்யுள் இயற்றும் திறமையுடைய புலவர்களையும், ஆடற்கலைஞர்களாகிய கூத்தர்களையும் ‘வருக வருக’ என்று வரவேற்றுப் பரிசுகள் அளிக்கிறார் மன்னர். இந்தக் கலைஞர்கள் தம்முடைய பெரிய சுற்றத்தாரை உடன்வைத்துப் பாதுகாக்கும் தன்மையுடையவர்கள். அவர்களுக்குத் தாமரை வடிவில் உறுப்புகள் உடைய நெடிய தேர்களை யானைகளுடன் அளிக்கும் பெரும் கொடையாளர் பாண்டியன் நெடுஞ்செழியன்.

கொடையும் வளமும் செழிப்பும் நிறைந்த நாட்டில் –

களம் தோறும் கள் அரிப்ப
மரம்தோறும் மை வீழ்ப்ப
நிணஊன் சுட்டு உருக்கு அமைய
நெய் கனிந்து வறை ஆர்ப்ப
குரூஉக் குய்ப்புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா வியல் நகரால்
(753-758)

இடந்தோறும் கள்ளை அரிக்கிறார்கள், மரத்தடிகள்தோறும் செம்மறிக் கிடாக்களை வெட்டுகிறார்கள், ஆட்டின் கொழுப்பு நிறைந்த தசைகளைச் சுடுகிறார்கள், நெய்யுடன் பொரியல்கள் சமைக்கிறார்கள். ஆட்டுத் துண்டுகளைச் சுடும்போதும் பொரியலை நெய்யில் தாளிக்கும்போதும் எழுந்த புகை, மழை வரும் முன் வானில் எழும் கருமுகில்போலப் பரவுகிறதாம்.

எவ்வளவு நயமாகச் சொல்கிறார் புலவர்!

இப்படி, இயற்கை வளம், உயரிய வளர்ச்சி, பல்தொழில் திறன், சீரிய கோட்பாடுகள், மாறுபட்ட வழிபாட்டு நெறிகள் இருப்பினும் கலந்தே இனிதுறையும்  பண்பட்ட மனப்பாங்கு, உள்நாட்டு அங்காடிகள், ஏற்றுமதியும் இறக்குமதியும் இடையறாது நடந்த வெளிநாட்டு வணிகம், போர் வெற்றிகள், கலை வளர்ச்சி, வழங்கிய கொடைகள் என்று பண்டைய தமிழ்நாட்டின் பன்முக வரலாறைத் தெளிவாகக் காட்டும் ஆவணங்களாகத் தமிழ் இலக்கியங்கள் நமக்குக் கிட்டியிருப்பது தமிழ்க் குடியில் பிறந்த நமக்குக் கிடைத்த பெரும் பேறு.

இன்று, ட்ரோன்களின் உதவியுடன் கவின்மிகு காட்சிகள் நம்மை எளிதில் வந்தடைகின்றன. ஒலியும் ஒளியும் நிறங்களும் நிறைந்த அக்காட்சிகள் நம் மனங்களைக் கவர்ந்து ஈர்க்கின்றன. எந்தத் தொழில்நுட்பமும் இன்றி, மதுரை மாநகரின் அன்றாட வாழ்வைத் தம் எழுத்தாற்றலால் செம்மையாக நமக்களிக்கிறார் மாங்குடி மருதனார். அவருடைய படைப்பிலிருந்து நாம் இங்கு பார்த்தது சுருக்கமான ஒரு பருந்துப் பார்வை எனலாம்.

தமிழ் மொழியின் வளனையும் அம்மொழியில் இலக்கியம் படைத்தோரின் திறனையும் தாண்டி இங்கு தனித்துத் தெரிவது, இன்றும் நாம் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஊரும், அதில் வாழும் மக்களும், அவர்கள் தொழிலும், வாழ்வும்தான்.  

பருந்துப் பார்வையிலேயே இத்தனைச் செய்திகள் என்றால், படிக்கப் படிக்கத் திகட்டாத இன்பம் தருகின்ற பற்பலக் காட்சிகளைத் தாங்கி நிற்கும் பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் படித்துத்தான் பாருங்களேன்.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகர்

முந்தைய பகிர்வில், மதுரைக்காஞ்சி வழியாகப் பாண்டிய நாட்டு வளத்தைப் பார்த்தோம். இனி மதுரை மாநகரைச் சுற்றி வருவோம்.. வாருங்கள்.

மதுரை மாநகர் எப்படி இருந்தது?

782 அடிகள் கொண்டது மதுரைக்காஞ்சி. அதில், 327ஆவது வரியில் தொடங்கும் மதுரையின் சிறப்பு, 699ஆவது வரியில் நிறைவடைகிறது. 372 வரிகளில் மதுரை நகரை நமக்குச் சுற்றிக் காட்டுகிறார் ஆசிரியர்.

புத்தேள் உலகம் கவினிக் காண்வர
மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை
(698 – 699)

வானுலகத்தில் உள்ளவர்கள் வியந்து காணும் அழகும், மிகுந்த புகழும் எய்திய பெரிய சிறப்பையுடையது மதுரை. 372 வரிகளில் அம்மாநகரின் அமைப்பையும் பலதரப்பட்ட மக்களையும் அவர்கள் வாழ்க்கை சார்ந்த பல்வேறு காட்சிகளையும் நம் கண்முன் கொணர்ந்து நிறுத்துகிறார் புலவர் மாங்குடி மருதனார். இன்றுபோல் புகைப்படங்கள், காணொலி, குறும்படம் போன்ற வெளிப்பாட்டு ஊடகங்கள் இல்லாத காலத்தில், சொற்களால் நம் கைப்பிடித்துக் கூட்டிச் சென்றுக் காட்டுகிறார் ஆசிரியர்.

மதுரையின் அகழியும் மதில்களும் மாடங்களும் வாயிலும் வீடுகளும் தெருக்களும் எப்படி இருந்தன?

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

  • மண் உற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கு – நீலமணி போன்ற நீரையுடைய ஆழமான கிடங்கு
  • விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை- வான் அளவு உயர்ந்த மதில்,  
  • நெய்படக் கரிந்த திண்போர்க் கதவு – நெய்யை ஊற்றியதால் கருத்த-திண்மையான கதவு
  • மழை ஆடும் மலையின் நிவந்த மாடம்- முகில் உலவும் மலைபோன்ற உயர்ந்த மாடங்கள்
  • வையை அன்ன வழக்குடை வாயில்- வையை ஆறுபோல் மக்கள் பயன்படுத்தும் பெரிய வாயில்
  • சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல் – மெல்லிய இசையாக ஒலிக்கும்  சில்லென்ற தென்றல் வீசும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்கள்,
  • யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு – ஆறு கிடந்ததுபோன்ற அகலமான நெடிய தெருக்கள்

நம் கண்முன் காட்சி மெல்ல விரிவடையத் தொடங்குகிறது.

அப்படியே நடந்து சென்றால், நாளங்காடியில்- உணவுப் பொருட்கள் விற்பவர்கள் மற்றும் கூடைகளில் பூக்கள் மற்றும் பூமாலைகள் விற்பவர்கள் இருக்கிறார்கள்; பலவித சிறுவணிகர்கள் தத்தம் பொருட்களை விற்கிறார்கள். கூந்தல் நரைத்த தொல் முதுபெண்டிரும் உழைத்துப் பொருளீட்டுகிறார்கள்.

நாள்பொழுதில் விழாவைக் கண்டுகளிக்க, செல்வந்தர்கள் வருகிறார்கள். அவர்கள் பளிச்சென்ற ஆடைகளுடன் பொன்னால் அழகு செய்யப்பட்ட வாளையும், மலர் மாலைகளையும், மார்பில் முத்து மாலையும் அணிந்திருக்கிறார்கள். 

செல்வமகளிர், மணிகளையுடைய பொற்சிலம்பும், பொன்னால் செய்த அணிகலன்கள், வளையல்கள் மற்றும் ஒளியுடைய காதணிகள் அணிந்து வருகிறார்கள். அவர்கள் பூசியிருக்கும் வாசனைப் பொருட்களின் நறுமணம் தெருவெங்கும் பரவியிருக்கிறது.

இவர்களோடு குலமகளிர், பரத்தையர், பிள்ளை பெற்ற மகளிர், தாய்மையடைந்த பெண்கள் தத்தம் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் அவரவர் வழிபாட்டு நெறிகளைச் சச்சரவின்றிக் கடைபிடிக்கின்றனர் – பெளத்த பள்ளியும் அந்தணர் பள்ளியும் சமணர் பள்ளியும் தத்தம் முறைகளில் செயல்படுகின்றன.

இது மட்டுமா?

சிறந்த கொள்கையுடைய அறம் கூறும் அவையம்- நீதி மன்றங்கள், அன்பும் அறனும் ஒழியாது காக்கும் அமைச்சர்கள், அறநெறி பிழையாது சிறந்த நாடுகளின் பண்டங்களை விற்கும் வணிகர்கள், நாற்பெரும் குழுவினர் என்று பலதரப்பட்டோர் வாழும் தெருக்களைக் காணமுடிகிறது.

அப்படியே தெருக்களில் தொடர்ந்து நடந்து சென்றால், கடலில் கிடைத்த சங்கினை அறுத்து வளையல் செய்பவர்கள்; அழகிய மணிகளில் துளை இடுபவர்கள்; பொன்னைச் சுட்டு நகைகளைச் செய்வோர்; பொன்னைக் கல்லில் உரசிப் பார்த்துத் தரம் பார்ப்போர்; துணி விற்பவர்கள்; கச்சுக்களை முடிப்பவர்கள்; செம்புப் பொருட்களை எடையிட்டு வாங்குபவர்கள்; மலர் விற்பவர்கள், நறுமணச் சாந்து விற்பவர்கள் என்று பல்வேறு தொழில் செய்வோரைக் காணமுடிகிறது. 

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

அங்கே, கூர்மையான அறிவுடைய ஓவியக் கலைஞர்கள் ஓவியம் தீட்டுகிறார்கள்; சிறிதும் பெரிதுமான மடித்த துணிகளை, அவற்றை நெய்து வந்த வணிகர்கள் விற்பனை செய்கிறார்கள்.

சாறும் மணமும் நிறைந்த பலாச் சுளையும் மாம்பழமும், பல்வேறு வடிவிலான காய்களும், பழங்களும், கீரைகளும், இனிப்பான சாறுடைய கற்கண்டுத் துண்டுகளும், கீழே விளைந்த கிழங்குகளும் கலந்து, சோற்றினைக் கொடுப்போர் கொடுக்க, பெற்றுக் கொள்பவர்கள் உண்ணுகிறார்கள்.

இப்படியே அந்தி நேரம் முடிந்து இரவு வந்து, இரவில் முதல், இடை, கடைச் சாம நிகழ்வுகளைக் காட்டுகிறார் ஆசிரியர். அடுத்து, பொழுது புலர்கிறது. விடியற்காலையில் மதுரை எப்படி இருக்கிறது?

அந்தணர்கள் வேதம் பாட, யாழ் வாசிப்பவர்கள் மருதப் பண்ணை இசைக்க, யானைப் பாகர்கள் யானைக்குக் கவளம் ஊட்ட, தேரில் கட்டப்படும் குதிரைகள் புல்லை உண்டு கனைக்கின்றன. பண்டங்கள் விற்கும் கடைகளில் தரையை மெழுகுகிறார்கள். கள்ளை விற்பவர்கள் விலை கூறி விற்கிறார்கள். இல்லத்துப் பெண்கள் தங்கச் சிலம்புகள் ஒலிக்க நடந்து வந்து, தத்தம் வீடுகளின் கதவுகளைத் திறக்கிறார்கள்.  

இதுதான் மாங்குடி மருதனார் காட்டிய ‘புத்தேள் உலகம் கவினிக் காண்வர மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை (698 – 699)’- வானுலகத்தில் உள்ளவர்கள் வியந்து காணும் அழகும், மிகுந்த புகழும் அடைந்த சிறப்பையுடைய மதுரை மாநகர். ஊரைச் சுற்றி வந்த உணர்வு எப்படி இருந்தது என்று நீங்கள்தான் கூறவேண்டும்.

அடுத்த பகுதியில், மதுரைக்காஞ்சியில் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒருசில காட்சிகளைப் பார்ப்போம்.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google