கம்பர் எனும் காலத்தை வென்ற கவிப்பேரரசு !

வெய்யோன் ஒளி, தன் மேனியின்
   விரிசோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும்
   இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறி
   கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பதோர்
   அழியா அழகுடையான்!

(1926, கங்கைப் படலம், அயோத்தியா காண்டம்)

இராஜபாளையம் எம்.எஸ். சுப்புலட்சுமி இசைப்பள்ளியின் ‘கம்பன் இசைத்தேன்’ என்ற youtube காணொலிப் பதிவிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடல் இது. பொதுத்தளத்தில் பதிவேற்றி, என்னைப் போன்றோர் கற்றுக்கொள்ள வழி செய்ததற்கு அவர்களுக்கு என் நன்றிகள்.

இது கம்பராமாயாணத்தின் அயோத்தியா காண்டத்தில் கங்கைப் படலத்தில் வரும் பாடல். காட்டுக்குச் செல்லும் இராமன், சீதையோடும் தம்பி இலக்குவனோடும் வழியில் அழகான காட்சிகளைக் கண்டு, கங்கைக்கரையை அடைகிறான்.  அங்கு நிகழும் காட்சிகளை உரைக்கும் படலம் என்பதால் ‘கங்கைப் படலம்’ என்று இதற்குப் பெயர்.

தமிழுக்கும் அமுதென்று பேர் என்று சொன்ன பாரதிதாசனார், அதே பாடலில்- தமிழுக்கு மதுவென்று பேர் என்றும் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன் என்றும் தமிழின் பெருமை பாடுகிறார். பாரதிதாசனாரின் வாக்குக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பற்பல தமிழ்ப் படைப்புக்களைக் கூறலாம். அவற்றுள் இன்று நாம் பார்க்கப்போவது கம்பர் கவிநயத்தைக் காலங்கடந்தும் பறைசாற்றும் கம்பராமாயணத்தைப் பற்றி. படிப்பவரை மயக்கத்தில் ஆழ்த்தி, தன்னிலை மறந்து மூழ்கச்செய்யும் அமுதும் மதுவும் தேனும் இணைந்த இனிமைமொழி தமிழ்மொழி என்பதைக் கம்பரின் இராமாவதாரத்தைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.  

கம்பராமாயணத்தைப் படிக்கையில், இயல்பாகக் கதைத் தலைவன் இராமன்மீது ஏற்படும் பற்றையோ மதிப்பையோ காட்டிலும், கம்பரின் தமிழ்மீது தீராக் காதல் ஏற்படும்.

தம் சுவைமிகு உவமைகளை அணிகளாக்கிப் பாடல்களைப் புனையும் வல்லமையால், இத்தகைய விந்தையை நிகழ்த்திக் காட்டுகிறார் கம்பர்.

நான் முதலில் பாடிய பாடலில், இராமனின் தோற்றச் சிறப்பைக் கம்பர் இயம்புகிறார்.

வெய்யோன்ஒளி, தன்மேனியின்
   விரிசோதியின் மறைய

இராமனின் மேனியின் ஒளி, வெய்யோன்/கதிரவனின் ஒளியையே  மறைத்துவிடும் அளவிற்கு மிளிர்கிறதாம்;

பொய்யோஎனும் இடையாளொடும்
   இளையானொடும் போனான்

இடை இல்லையோ என்றெண்ணுகின்ற அளவில் சிற்றிடையாளான சீதையோடும், தனக்கு இளையவனான இலக்குவனோடும் நடந்து செல்கிறான் இராமன்;

அடுத்து வரிசையாக, இராமனின் வடிவழகை நாம் காணச் செய்கிறார் கம்பர்-

மையோ மரகதமோ மறி
   கடலோ மழைமுகிலோ

மையோ, மரகதமோ, கரையிலே வந்தடிக்கிற கடலோ, மழை முகிலோ.. என்பவர்.. இதற்குமேல் உருவகங்களே இல்லை என்னிடத்தில் என்று நெகிழ்ந்தவராக-

ஐயோஇவன் வடிவென்பதோர்
   அழியா அழகுடையான்!

ஐயோ .. இதற்குமேல் என்ன சொல்வது.. இவன் அழியாத அழகுடைய வடிவைக் கொண்டவன் என்று வியக்கிறார்.

இப்படிப்பட்டச் சிறப்புப் பொருந்திய இராமன் கல்லிலும் முள்ளிலும் நடந்து செல்கிறானே.. ஐயோ ஏனிந்த நிலை என்று பொருள் சொல்பவர்களும் உண்டு. 

இப்போது சொல்லுங்கள்.. காப்பியத்தின் தலைவன் இராமனல்ல கம்பன்தான் என்று நான் நினைப்பது சரிதானே??

கம்பரின் காலம், சோழப் பேரரசரான மூன்றாம் குலோத்துங்கன் காலமான 12 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி ஆகும். இராமனின் கதையை முதலில் தமிழர்களுக்குச் சொன்னவர் கம்பர்தானா? வால்மீகி இராமாயணத்தைத் தழுவி, முழுமையான காப்பியமாக அளித்தவர்  கம்பர்தான். ஆனால், சங்கப் பாடல்களில், இராமாயணம் சார்ந்த தகவல்களைப் புலவர்கள் சிலர், சிறு துணுக்குகளாகத் தந்திருக்கிறார்கள்.

அகநானூறில் பாடல் எண் 70இலும், புறநானூறில் பாடல் எண் 378இலும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறிலும்  இராமாயணக் குறிப்புகளைக் காணமுடிகிறது.

புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை இங்கு பார்ப்போம். அந்தப் பாடல், ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பாடியது. அந்தப் புலவர் சொல்கிறார்-

போரில் வென்ற அரசனை நான் பாடியதில் பெரும் மகிழ்வுற்ற அரசன், நானும் என் பெரிய குடும்பத்தாரும் அதுவரைக் கண்டிராத பரிசுப் பொருள்களாகப் பல்வேறு அணிகலன்களை வழங்கினான்.  அவை வறுமையில் வாடும் எங்களுக்கு உரியவை அல்ல. அதனால் என் சுற்றத்தார் எதை எங்கு அணியவேண்டும் என்று அறிந்திருக்கவில்லை. விரலில் அணியவேண்டிய அணிகலனைக் காதில் மாட்டிக்கொண்டனர். காதில் அணியவேண்டியவற்றை விரலில் மாட்டிக்கொண்டனர். இடுப்பில் அணியவேண்டியவற்றைக் கழுத்திலும் கழுத்தில் அணியவேண்டியவற்றை இடுப்பிலும் இட்டுக்கொண்டனர்.

இது எப்படியிருந்தது?

கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு

(18-21, 378, புறநானூறு, எட்டுத்தொகை)

என்கிறார் புலவர்.

இராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை இராவணன் கவர்ந்து சென்றான். சீதை, இராமனுக்கு வழி தெரியவேண்டும் என்பதற்காக, தான் அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக ஆங்காங்கே நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றாள். அந்த நகைகளை எடுத்த குரங்குகள், எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் மனம்போல் அணிந்துகொண்டது போல் இருந்ததாம், புலவரின் சுற்றத்தார் செய்தது.

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் –

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே

(சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், ஆய்ச்சியர் குரவை)

என்று அரக்கரினம் போரில் தோற்று மடிய, பழமையான இலங்கையின் காவலை அழித்த இராமன் புகழைப் பாடி ஆடுகிறார்கள்.

அடுத்தக் காலக்கட்டத்தில், சைவம் வளர்த்த நாயன்மாரைப் போற்றிய பல்லவர்கள், திருமால்மீதும் பெரும்பற்றுக் கொண்டிருந்தார்கள். 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதலாம் மகேந்திரவர்மரின் மாமண்டூர் கல்வெட்டில், ‘வால்மீகி வண்ணித்தபடி பரதனை நாயகனாகக் கொண்ட நாடகம்’ பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது.  

பக்தி இலக்கியத்தில், சைவ நாயன்மார் சிவபெருமான் இராவணன் செருக்கை அடக்கியதை மறக்காமல் குறிப்பிடுகிறார்கள்.

வைணவம் வளர்த்த ஆழ்வார்கள் திருமால் பெருமை உரைக்கையில், இராமனைப் போற்றினர். அப்படி, திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் பாசுரங்களில் இராமன் குறித்த கருத்தையும் சொல்லையும் அப்படியே கம்பர் எடுத்தாண்டிருப்பதை தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார், தம் ‘கால ஆராய்ச்சி‘ நூலில் விளக்குகிறார்.

9 ஆம் நூற்றாண்டு தொடங்கும் முற்சோழர் காலத்துக் கோவில்களில், இராமாயணக் காட்சிகள், சிற்றுருவச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் சிற்பத்தொகுதி.  குறிப்பாக, தமிழகக் கோயில்களில் வாலி வீழ்த்தப்படுவதற்குக் கொடுக்கப்படும் முதன்மை நிலை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இராமாயணத்தில் வாலி வதத்தை வருந்தத்தக்க ஒரு நிகழ்வாக நம் முன்னோர்கள் நினைத்தார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

பல ஆண்டுகள் முன்பு, என்னுடைய கல்லூரி முதுகலைப் படிப்பில் கம்பராமாயணத்தின் ஆரண்யக் காண்டமும் கிட்கிந்தாக் காண்டமும் கற்பிக்கப்பட்டன. கிட்கிந்தாக் காண்டம் படித்து முடிக்கையில், ‘வாலி’ என்ற கதைமாந்தன் என்னைப் பெரிதும் பாதித்துவிட்டான். என் ஆய்வுக்காக, வாலியின் வழக்கறிஞராக மாறினேன். ‘வஞ்சிக்கப்பட்ட வாலி’ என் ஆய்வுத் தலைப்பானது.

வஞ்சிக்கப்பட்ட வாலியைப் பற்றி, மற்றுமொரு வலையொலிப் பதிவில் பேசுவோம்.

இப்படி, சங்ககாலம்தொட்டுத் தமிழர்கள் கேட்டுவந்த இராமாயணக் கதை, சிலப்பதிகாரக் காலத்தில் வழிபாட்டு நெறிகளுள் புகுந்து, திருமாலின் அவதாரப் பெருமையென அழுத்தமாகப் பதிந்துவிட்டது.  பத்திமைக்காலத்தில் ஆழ்வார்கள் திருமால் பெருமையோடு இராமகாதையின் சாரையும் இணைத்து வழங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக, 12 ஆம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில், திருமால் அவதாரமான இராமனின் கதையை- தம் காலத்தின் மிகச்சிறந்த காப்பியமாக,  அன்றைய தமிழ்க்கூறு நல்லுலகம் அதுவரைக் கண்டிராத வகையில் மாபெரும் படைப்பாக வழங்க விழைந்திருக்கிறார் கம்பர்.

இயல்பில் தமக்கு அமைந்த இணையில்லா தமிழ்மொழிப் புலமையும், எழுத்தாற்றலும், சந்தநயமும் பெரிதும் துணைநிற்க- வால்மீகியின் இராமாயணக் கதையைத் தமிழ்ப்படுத்துகிறார், கம்பர்.

இத்தனை மொழித் திறனும், படைப்பாற்றலும் கொண்ட கம்பர், தழுவல் கதையான இராமாவதாரத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்? தமிழர்கள் பல நூற்றாண்டுகள் கழிந்தபின்னரும் இனிக்க இனிக்கச் சுவைக்கும் வண்ணம் அவர் படைத்தது வேறொரு பகுதியில் நடைபெற்ற மூலக்கதையையா? என்ற கேள்விகள் என் மனதில் அவ்வப்போது தோன்றும்.

அவருடைய கற்பனை வளத்தையும், உவமை மற்றும் உருவக அணிகளில் சொற்களை மாலைகளெனக் கோர்த்து வழங்கும் இணையில்லாத் திறமையையும் காட்டிட, தம் மண்ணில் நிகழாத கதை ஒன்றை, மண்ணின் பண்பாட்டிற்கு ஏற்றாற்போல மாற்றித்தந்து உலகோர் வியக்கும் காப்பியம் படைக்கும் தேவைதான் என்ன?

ஆறு காண்டங்களில் கிட்டத்தட்ட 10,500 பாடல்கள் கொண்ட,  தேனினும் இனிமையான தமிழ்மொழியில் கம்பர் எழுதிய இராமாவதாரத்தில், முன்னிலையில் என் மனதில் நிற்பது கம்பரும் தமிழும்தான்.

இராமன் என்ற பாட்டுடைத் தலைவனுக்கு எதிராக, வாலியின் வழக்கறிஞராக நிற்க நான் முன்வந்ததும், பலரை விவரிக்கும் உவமைகள் பெருக்கெடுத்து ஓடும் இராமாயணப் பாடல்களில் சூர்ப்பணகையை வண்ணித்த பாடல் என் மனதில் பதிந்துபோனதும் – கம்பருடைய சொல்லாற்றலால்தான்.

ஆம். ஆரண்யக் காண்டத்தைப் படித்தபோது பதிந்துபோன ஒரு பாடல், இன்றும் என் மனதில் அடிக்கடி ஒலித்துக்கொண்டே இருக்கும் பாடல் – அது சூர்ப்பணகையின் நடையழகை விவரிக்கும் பாடல்.

பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.

(2762, சூர்ப்பணகையின் நடையழகு, சூர்ப்பணகைப் படலம், ஆரண்யக் காண்டம்)

இது, ஆரண்யக் காண்டத்தில் சூர்ப்பணகை அழகிய பெண்ணுருவில் தன்னை உருமாற்றிக் கொண்டு, இராமனிடம் செல்வதை விவரிக்கும் பகுதியான சூர்ப்பணகைப் படலத்தில் வரும் பாடல். கம்பருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் தேர்ந்தெடுத்த சொற்களைத் தொடுத்த மாலை போன்று அழகு பொலிபவை.

குறிப்பாக, இந்தப் பாடலின் சந்தநயம் மிகுந்த அழகு நிறைந்தது. அதனால்தான் இன்றுவரை என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அரக்கர்குலப் பெண்ணான சூர்ப்பணகையின் புதிய மாற்றுருவை, மென்மையான பெண்ணுருவை வண்ணிக்க – மெல்லின ‘ஞ’கரத்தைப் பயன்படுத்தி இப்பாடலைப் புனைந்துள்ளார் கம்பர்.

இந்தப் பாடலின் சுவையைப் பருகும்முன், இதற்கு முந்தையப் பாடல்களைப் பார்ப்போம். சூர்ப்பணகை இராமனைக் கண்டு, காமுற்று, அவனிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு பேச விழைகிறாள். ஆனால், அரக்க வடிவில் உள்ள தன்னை, இராமன் ஏற்க மறுப்பான் என்பதால் தன் தோற்றத்தை மாற்றிக் கொள்கிறாள்.

‘எயிறுடை அரக்கி, எவ்உயிரும் இட்டது ஓர்
வயிறுடையாள்’ எனமறுக்கும்; ஆதலால்,
குயில் தொடர் குதலை, ஓர்கொவ்வை வாய், இள
மயில் தொடர் இயலி ஆய், மருவல்நன்று எனா

(2760, சூர்ப்பணகை கோல வடிவம் கொள்ளுதல், சூர்ப்பணகைப் படலம், ஆரண்யக் காண்டம்)

‘கோரப் பற்களையுடைய அரக்கி, எல்லா உயிர்களையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடிய பெரிய வயிரை உடையவள்’ என்று என்னை இராமன் ஏற்க மறுக்கும் வாய்ப்பிருக்கிறது, எனவே,

குயிலைப் போன்ற கொஞ்சும் மொழி

கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாய்

இளமயில் போன்ற சாயலுடைய பெண்வடிவம் ஏற்றுச் செல்வது நல்லது என்று எண்ணுகிறாளாம் சூர்ப்பணகை.

எத்தனை உவமைகள் பாருங்கள்.

இதோடு கம்பர் நிறுத்தவில்லை.

மேலும் எப்படியெல்லாம் சூர்ப்பணகையை விவரிக்கிறார் பாருங்கள்..

பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா,
அங்கையின் ஆயமந்திரத்தை ஆய்ந்தனள்

தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளை மனத்தில் நினைத்து, தான் பெற்றிருந்த மந்திரத்தை ஓதினாள். ஓதியவள் –

திங்களின் சிறந்து ஒளிர்முகத்தள், செவ்வியள்,
பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள்

(2761, சூர்ப்பணகை கோல வடிவம் கொள்ளுதல், சூர்ப்பணகைப் படலம், ஆரண்யக் காண்டம்)

முழுமதியைக் காட்டிலும் ஒளிரும் முகம் உடையவளாக, அழகுடையவளாக, வானிலிருந்து ஒளி பரவ, புதிய வடிவில் வெளிப்படுகிறாள் சூர்ப்பணகை.

இராமனைச் சந்திக்கும் முன்பு, தன் புறத்தோற்றத்தில் இத்தனை மாற்றங்களைச் செய்கிறாள் அவள். இது கம்பர் உண்டாக்கிய மாற்றம். வால்மீகியின் இராமாயணத்தில், தன் இயல்பான தோற்றத்துடனேயே சூர்ப்பணகை இராமனைச் சந்திப்பதாக உரையாசிரியர் குறிப்புத் தருகிறார்.

காப்பியத்தில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தும் இடம் – சூர்ப்பணகை இராம இலக்குவரை அணுகுவதும், மூக்கு அறுபடுவதும். கதைத் தலைவி சீதை சிறையெடுத்துச் செல்லப்படுவதுமான மாறுபட்ட சூழல் உருவாகும் இடமல்லவா அது?

சிறந்த படைப்பாசிரியரான கம்பர், தம் சொல்வளத்தைப் பயன்படுத்தி, இந்தப் பகுதிக்குச் சுவை கூட்டுகிறார்.

புறத்தோற்றத்தில் அழகு நிறைந்தவளாக மாற்றம் பெற்ற சூர்ப்பணகை, உண்மையில் யார் என்பதைத்தான், முன்னரே நாம் பார்த்த ‘பஞ்சு ஒளிர் விஞ்சு குளிர்’ பாடல் இயம்புகிறது-

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க

செஞ் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி

இயற்கையில் மென்மையும், குளிர்ச்சியும், ஒளியும் பொருந்திய பஞ்சும் கொடியின் தளிரும் வருந்தும் வண்ணம் –

சிறந்த அழகுடைய தாமரை போன்ற பாதம் கொண்டவளாக;

அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்

அழகான சொற்களையுடைய இளமையான மயில் போலவும் அன்னம் போலவும் இருக்கும் சூர்ப்பணகை –

வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்

 மின்னுகின்ற வஞ்சிக் கொடி போலவும், நச்சுத் தன்மை பொருந்தியவளாகவும், தீமை செய்யும் பெண்ணாகவும் இராமன்முன் வந்தாள்.

அழகும் கவர்ச்சியும் நிறைந்த பலவற்றைச் சொன்னதன் இறுதியில்- வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – என்று எதிர்வினை ஆற்றவந்த கதைமாந்தரைத் தம் சொல்வலிமையால் வேறுபடுத்திக் காட்டுகிறார் கம்பர்.

எழில் உருவில் நஞ்சம் என வஞ்சம் நிறைந்தவளை நம் கண்முன் நிறுத்திட, உவமைகளை வாரி வாரி வழங்குகிறார்.

கதையின் எதிர்வினை ஆற்றும் பெண்ணுக்கு இவ்வளவு மனங்கவர் உவமைகளை அளித்து, சூழ்ச்சி நிறைந்த அந்த மாந்தரையும் நிலைத்து நிற்கச் செய்கிறார்.

கதைத் தலைவனாம் இராமனுக்கு இணையாக, அவனால் வீழ்த்தப்படும் இதர மக்களையும் படிப்பவர் எண்ணங்களில் நிறைந்து நிற்கச் செய்வது கம்பர் என்ற படைப்பாளரின் பாடல் இயற்றும் திறம்தான்.

கம்பர் கையாண்டுள்ள ஓசை நயம் மிகுந்த அடிகளும், உவமை அணிகள் நிறைந்த வண்ணனைகளும் ஏராளம் ஏராளம். படிப்பவர் மனங்களில் இனிக்க இனிக்க ஒலிக்கும் வகையில் காப்பியத்தில் இடம்பெறும் சொற்கள் அதனினும் ஏராளம். கிட்டத்தட்ட 10500 பாடல்கள் இல்லையா? அமுதும் தேனும் பெருக்கெடுத்து ஒடுவதைப் போல- தமிழ்ச் சொற்கள் கம்பன் கவிநடையில் குதூகலமாய் ஆடுவதை உணரலாம். கம்பராமாயணத்தின் ஒரு பகுதியைப் படித்துவிட்டு உறங்கச் சென்றால், கனவில் வருபவை கதைமாந்தர்கள் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். நீங்கள் கனவு காண்பது தமிழாகத்தான் இருக்கும்.

அதனால்தான் சொல்கிறேன், இராமன் என்ற கதைத் தலைவனைவிட, தம் படைப்பில் மிளிர்பவர், தமிழ்ப் படைப்புலகம் காலந்தோறும் வியந்து போற்றும் கம்பர்தான்.

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

என்று பாவேந்தர் பாரதிதாசனார் பாடிய தமிழின் பெருமை- கம்பர் போன்ற காலத்தை வென்ற கவிப்பேரரசர்களால்தான் மங்காது ஒளிர்கிறது; உலகின் தொன்மை மொழிகளில் ஒன்று என்றாலும், இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பொலிவுடன் விளங்கும் இளமைமொழியாக நம் தாய்மொழியாம் தமிழ் திகழ்கிறது.

இன்று கம்பரை ஓரளவு தெரிந்துகொண்டது போல, நேரம் உருவாக்கிக்கொண்டு, இல்லத்தினருடன், நண்பர்களுடன், பழந்தமிழ் படைப்புக்களைத் படித்தும் பகிர்ந்தும் நினைவு கூர்ந்தும் தமிழின்பம் பெற்றால்தான் என்ன?

நன்றி.

Podcast available on: Apple Google Spotify

கம்பர் எனும் காலத்தை வென்ற கவிப்பேரரசு !” இல் 3 கருத்துகள் உள்ளன

attraithingal -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி