உழைத்துப் பொருளீட்டிய சங்க காலப் பெண்கள்

சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர் – 2

‘சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்’ பற்றிய முந்தைய பதிவில், மதுரைக் காஞ்சியில் ஊர் அடங்கியபின் தம் கடையை அடைத்து உறங்கச் சென்ற மதுரை மாநகரத்துப் பெண்களைப் பார்த்தோம். நுகர்வோர் தேவைகளைப் புரிந்துகொண்டு- இடத்தைத் தெரிவு செய்தபின் கடையமைத்து- பொருட்களை வாங்கி விற்று- கணக்கு வழக்குகளைக் கையாண்டு வணிகம் செய்தவர்கள் இவர்கள். ஓரிடத்தில் அமர்ந்து, கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொண்டுப் பொருளீட்டிய இந்தப் பெண்கள் சமூகப் பொருளாதாரத்தின் சீரான இயக்கத்திற்கு உதவினர்.

சங்க காலப் பெண்கள் வேறு என்னென்ன பணிகள் செய்துப் பொருளீட்டினர்? அக்காலச் சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டில் அவர்கள் பங்கு என்னவாக இருந்தது?

மதுரைக் காஞ்சிப் பெண்களைப்போல ஓரிடத்தில் அமர்ந்து வணிகம் செய்யாமல், தம் நிலவளத்தின் பலனை மற்ற நிலப்பகுதிகளில் கொடுத்து, அந்த நிலத்தின் மாற்றுப்பொருளை வாங்கித் தொழில் செய்த பெண்கள் பலருண்டு. இந்தப் பெண்கள், திணைகளோடு இன்னல்கள் கடந்தும் சுறுசுறுப்புடன் நில்லாது ஓடிக்கொண்டே இருந்தவர்கள். இந்தப் பண்டமாற்று வணிகப் பெண்டிர், நிலங்களுக்கிடையிலான உணவுப் பகிர்வால் பொருளாதாரச் சமநிலைக்குத் தோள் கொடுத்தவர்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. உழைத்துப் பொருளீட்டிய அப்பெண்களில் சிலரைச் சந்திப்போமா?

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

சங்க காலப் பண்டமாற்று வணிகத்தை அழகுறக் காட்டும் இலக்கியப் பாடல்களில், நிகழ்வொன்றைப் பாடலால் விளக்கவரும் சங்கப் புலவர்கள், அந்நிகழ்வுக்குள் பல்வேறு காட்சிகளை வழங்குவார்கள். அப்படிப்பட்ட காட்சிகளுக்குள் வேண்டிய தகவல்களைப் பெற்றுத் தெளிவது அவரவர் திறனைப் பொறுத்தது. அப்படிப்பட்ட சுவையான காட்சிகளுக்கிடையில் பொதிந்த, உழைப்பால் பொருளீட்டும் பெண்கள் பற்றிய தெளிவான செய்திகளைச் சேர்ந்தே ரசிப்போம்.. வாருங்கள்.

பொருளீட்டும் பெண்கள் பலதரப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அவர்களுள், மீன் விற்றுப் பண்டமாற்றாக நெல்லையும் பயறையும் வாங்கும் மருத நிலத்துப் பெண்களையும், உப்பை விற்று நெல்லை வாங்கும் நெய்தல் நிலத்துப் பெண்களையும் இன்று பார்ப்போம்.

அகநானூற்றில் வரும் நக்கீரரின் பாடலில், தன் தமையன்மார் காலையில் பிடித்துக் கொணர்ந்த வாளை மீனைப் பாணனின் மகள் விற்கச் செல்கிறாள். 

நீண்ட மண்திட்டுக்களால் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது கடல்போலப் பாயும் காவிரியாறு. அதில் மீன்பிடிக்கச் சென்று, 

…………………………தன் ஐயர், 
காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு
……………………………………………………………
…………………………………………………………..
பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள்  
(நக்கீரர், அகநானூறு 126, வரிகள் 7-11)

என்கிறது பாடல்.

பொதுவாக, மீனை விற்றுச் செந்நெல் பெற்று வருவது வாடிக்கை என்பதைப் பல பாடல்களால் அறிகிறோம். ஆனால், இங்கே, செந்நெல்லின் முகவை கொள்ளாமல் அவள் என்ன பொருள் வாங்கி வந்தாளாம்? ‘கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்’- அதாவது- கழற்சிக்காய் என்றழைக்கப்படும் கழங்கு விதைகளைப் போல அளவில் பெரிதான முத்துக்களையும் அணிகளையும் பெற்று வருவாள் என்கிறார் புலவர். உழைப்பும், உழைப்பால் வந்த வருவாயும், வருவாய் தந்த துணிவும்- தான் விரும்பியதை வாங்கும் வலிமையையும் உரிமையையும் அவளுக்குத் தந்தனபோலும்.

படம்- நன்றி: kalarchikai,indiamart.com

அடுத்து, ஐங்குறுநூறு காட்டும் சில காட்சிகள். ஐந்து திணைகளின் நிகழ்வுகளை நூறு நூறு பாடல்களாக ஐந்து புலவர்கள் இயற்றியதன் தொகுப்பே ஐங்குறுநூறு. முதல் நூறு பாடல்களை இயற்றியவர் ஓரம்போகியார். பாடல்கள் 47,48,49 மூன்றும் தலைவி தலைவனிடம் கூறுவதாக அமைந்தவை. தன்னுடன் ஊடியிருக்கும் தலைவியின் கோபத்தைத் தணிக்க, தலைவன் பாணனை அனுப்புகிறான். அவளுடைய கோபம் தணிவதாக இல்லை. பின், பாணனைக் கூட்டிக்கொண்டு தானும் தலைவியிடம் பேச வருகிறான். அப்படியும் அவனை அவள் உள்ளே விடுவதாயில்லை. ‘நானும் என் தோழிகளும், நீயும் உன் பாணனும் சொல்லும் பொய்களெல்லாம் அறிவோம். நீ இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை’, என்று மிகவும் காட்டமாகச் சொல்லி அனுப்பிவிடுகிறாள். பாடல்களின் பொருள் இதுதான். ஆனால் இவற்றினூடே, பாணன் மகள் மீன் விற்றுப் பயறும் நெல்லும் கொணர்வது சொல்லப்படுகிறது.

முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன் பெருவட்டி நிறைய, மனையோள்
அரிகால் பெரும்பயறு நிறைக்கும் ஊர!
(ஐங்குறுநூறு 47, வரிகள் 1-3)

“முள்ளைப் போன்ற கூர்மையான பற்களையுடைய பாணனின் மகள் கொணர்ந்த கெடிற்று மீனுக்கு மாற்றாக மனையோள் ஒருத்தி, பெரிய வட்டிநிறைய பயறு கொடுக்கும் ஊரைச் சேர்ந்தவனே, உன் பொய்களை நாங்கள் அறிவோம்,” என்கிறாள் தலைவி.

அடுத்த பாடலில், 

வால் எயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள்
யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர!
(ஐங்குறுநூறு 48, வரிகள் 1-3)

என்று, வெண்மையான பற்களையுடைய பாணனின் மகள் கொணர்ந்த வரால் மீனுக்கு இல்லத்தரசி ஒருவர் வட்டிநிறைய வெண்ணெல் தந்த செய்தி கிடைக்கிறது. முந்தைய பாடலில் கெடிற்றுக்குப் பயறு; இங்கு வராலுக்கு வெண்ணெல்.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

49ஆவது பாடலில், அழகிய முடியும் மென்மையான நடையும்கொண்ட பாணன்மகள் கொண்டுவந்த சில மீன்களுக்கு நிறைய நெல் பெறுவதை ஓரம்போகியார் குறிப்பிடுகிறார் – 

அம் சில் ஓதி அசை நடைப் பாண்மகள், 
சில் மீன் சொரிந்து, பல் நெல் பெறூஉம் 
(ஐங்குறுநூறு 49, வரிகள் 1-2)

இப்படி, ஐங்குறுநூறு காட்டும் மருதநிலத்துப் பாணன்மகள், மீன் விற்றுப் பயறும் நெல்லும் பெற்று வருகிறாள். இந்தப் பாடல்களை வைத்து, தம் வீட்டு ஆடவர் வலையிட்டுப் பிடித்துவந்த மீன்களை மட்டுமே விற்று வருவார்கள் அக்காலப் பெண்கள் என்று நினைத்தால், அது தவறு.

ஐயூர் முடவனாரின் அகநானூற்றுப் பாடல், நாணும் நுண்கோலும் கொண்டு ஆற்றங்கரையில் பாணனின் மகள் வரால் மீன் பிடிக்கும் காட்சியைக் காட்டுகிறது. 

நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள்,
தான் புனல் அடைகரைப்படுத்த வராஅல்
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்
(ஐயூர் முடவனார், அகநானூறு 216, வரிகள் 1-4)

தான் பிடித்த மீனைக் கள் குடித்த தந்தைக்கு வஞ்சி மரத்தின் விறகில் சுட்டுத் தருகிறாளாம் அவள். ஆக, பிறர் கொணர்ந்த மீன்களை மட்டும் மகளிர் விற்பர் என்றோ பொருள் விற்பதுமட்டுமே அவர்கள் பணியாக இருந்ததென்றோ குறைவாக எடைபோட்டுவிடக்கூடாது; மீன் பிடிப்பதிலும் வல்லமையுடன் விளங்கினார்கள்.

அடுத்து, நெய்தல் நிலமகளிர் உப்பை விற்று நெல் பெற்று வந்ததை அகநானூறு கவினுற இயம்புகிறது. அம்மூவனாரின் இரண்டு பாடல்களில் பொதுவாக இருப்பது தலைவனின் காதல்; அதைத் தன் தோழனிடம் அவன் வெளிப்படுத்துகிறான். ஆனால், இருவேறு காட்சிகளில் இருவேறு உணர்வுகளைக் காணமுடிகிறது – ஒன்று, தலைவியுடன் இணைய முடியாத தலைவனின் வலி; மற்றொன்றில் ஏக்கம் தெரிந்தாலும் இளமையின் துள்ளல் விஞ்சி நிற்கிறது.

முதல் பாடலில் (அகநானூறு 140) தலைவன் தலைவியைப் பற்றித் தோழனிடம் கூறுகிறான். அவளுடைய தந்தை ஓர் உப்பு வணிகர். கடும் வெய்யிலால் பிளவுபட்ட குன்றுகளைத் தாண்டி, காளைகள் இழுக்கும் வண்டியில் உப்பை ஏற்றிக்கொண்டு விற்பனைக்குச் செல்பவர் அவர். உப்பு வணிகர்களை உமணர் என்று குறிப்பார்கள். எனவே, ’உமணர் காதல் மடமகள்’ என்று அழகாகத் தலைவியை விவரிக்கிறான் அவன். ஒருநாள், தான் வாழும் கடற்கரையையொட்டிய பரதவர் குடியிருப்பில் கைகளை வீசி வட்ட வளையல்கள் குலுங்க,

நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்
சேரி விலைமாறு கூறலின்,
(அம்மூவனார், அகநானூறு 140, வரிகள் 7,8)

“நெல்லுக்கு இணையாக வெண்கல் உப்பு வாங்கலையோ,” என்று கூவி உப்பு விற்கிறாள் அவள். அந்த ஒலியைக் கேட்டு நாயொன்று குரைக்கிறது. அதைப் பார்த்து, இரண்டு கயல்கள் சண்டையிட்டுக் கொள்வதுபோலக் காட்சியளிக்கும் அவள் கண்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றன. இதைப் பார்த்த தலைவனுக்கோ, அவளுடன் இணைந்திருக்க முடியவில்லையே என்று நெஞ்சம் வருந்துகிறது. எப்படி வருந்துகிறது?

‘அவளுடைய தந்தையின் வண்டி இருக்கிறதே… உப்பு விற்கக் கடினமான வழியில் செல்லும்போது அது மண்ணில் அடிக்கடி சிக்கிக்கொள்ளும். அப்படி மண்ணில் புதைந்த வண்டியை இழுக்கும் காளைகளின் வலியைப் போல எனக்குள் வலி ஏற்படுகிறது,’ என்று புலம்புகிறான் தலைவன்.

இங்கு, தலைவனின் காதல் நம்மை ஈர்க்கலாம்; அதைச் சுவைப்பட அளித்த அம்மூவனாரின் கவித்திறனைப் பாராட்டி நிற்கலாம்; பலவற்றிலிருந்துப் பிரித்து நாம் எடுத்துக் கொள்ளவேண்டியது – அந்தப் பெண் நெல்லுக்கு மாற்றாக உப்பை விலைகூறிக் கூவி விற்றுப் பொருளீட்டினாள் என்பதை.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)

இரண்டாவது பாடல் (அகநானூறு 390), புழுதி நிறைந்த பாதைகளில் குழுக்களாகக் கிளம்பிச் சென்று, தம்மிடத்தில் கிடைக்கும் உப்பைத் தொலைவிலுள்ள ஊர்களில் விற்கும் உமணர்களின் கடின வாழ்க்கையோடு தொடங்குகிறது. தலைவன் தோழனிடம் அன்றைய நிகழ்வைப் பகிர்கிறான்.

சுருண்ட கூந்தலுடைய அந்த உமணர் வீட்டுப் பெண், பொலிவுநிறைந்த எழிலுடன் பற்பல குடியிருப்புகளுக்குச் சென்றாள். சென்று – 

“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்!
கொள்ளீரோ?” எனச் சேரிதொறும் நுவலும்,
(அம்மூவனார், அகநானூறு 390, வரிகள் 8,9)

“நெல்லுக்குச் சமமாக உப்பு கிடைக்கும்…ஊராரே! வாங்க வாங்க வாங்குங்க..,”என்று வணிகம் செய்தாள்.

‘உழைத்து வியர்த்து உப்பு விற்றுக் கொண்டிருந்தவளை நான் வழிமறித்து, “மூங்கில் போன்ற தோள்களுடன் அழகு நிறைந்தவளே! உப்புக்கு விலை சொல்கிறாய்.. சரிதான்… உன் கடும் உழைப்பால் துளிர்க்கும் வேர்வையின் உப்புக்கு என்ன விலை?,” என்று கேட்டேன். மை தீட்டிய பெரிய கண்களால் வெள்ளை வளைகள் அணிந்த அந்தப் பெண் என்னை உற்று நோக்கி, ‘நீங்கள் யார் என்னை வழிமறிக்க?’ என்று கூறி, புன்னகைத்து நகர்ந்து சென்றாள். அவளுடைய அழகிலும் மாண்பிலும் என் நெஞ்சை இழந்தேன்,” என்று இளமைத் துள்ளலும் காதல் தவிப்பும் கலந்து பேசுகிறான் தலைவன். 

இப்படி, அகநானூறு மிகவும் சுவையான சூழலில் உப்பு விற்கும் மகளிரைப் படம்பிடிக்கிறது. படிக்கையில் மனதை மயக்கும் பலவித உணர்வுகளால் நாம் கட்டுண்டு நின்றுவிடுவோம். ஆனால், அந்த மயக்கத்தினூடே உழைக்கும் பெண்களின் வாழ்வும் வியர்வையும் நம்மை மலைப்பில் ஆழ்த்துவன.

மீன் விற்ற மருதநிலத்து மகளிரையும் உப்பு விற்ற நெய்தல்நிலத்து மகளிரையும் பார்த்தோம். குடவாயில் கீரத்தனார், தம் அகநாற்றுப் பாடலில் தந்தை மீன் பிடித்துவர, மகள் உப்பு விற்று நெல் வாங்கி வருவதையும் காட்டுகிறார்.

பெருங்கடல் பரப்பில் சேயிறா நடுங்கக்
கொடுந்தொழில் முகந்த செங்கோல் அவ் வலை
நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு
அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து,  
கொழு மீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
(குடவாயில் கீரத்தனார், அகநானூறு 60, வரிகள் 1-6)

தான் உப்புக்கு மாற்றாக வாங்கி வந்த நெல்லில் வெண்சோறு பொங்கினாள் மகள். பெரிய கடலில் சிவந்த இறால்கள் நடுநடுங்க தன் படகைச் செலுத்தி மீன் பிடித்து வந்த தந்தைக்கு, அவர் கொணர்ந்த அயிலை மீனைப் புளியிட்டுக் குழம்பாக்கிப் பரிமாறினாளாம்.

காதலும் வீரமும் சங்கப் பாடல்களின் முதன்மை கருப்பொருட்களாக இருக்கலாம். அவற்றிற்கிடையில், சேர்த்துக் கோத்துப் பின்னப்பட்டிருக்கும் சமூகச் செய்திகள்தான் பண்டைத் தமிழகத்தின் வரலாறு. ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு, அந்தச் சமூகம் இயல்பாக வாழ அவர்களுக்கு வழங்கிய வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டும்; அவர்கள் வாழ்ந்த ஏற்புடைய மற்றும் ஏற்றமிகு சமூகச் சூழலையும் புலப்படுத்தும். பண்டைத் தமிழகத்துப் பெண் தொழில்முனைவோர், இயல்பான பொறுப்புகளுடன் பொருளீட்டலும் இணைந்த தனி ஆளுமைகளாக வாழ்ந்ததைச் சங்கப் பாடல்கள் ஒளியூட்டிக் காட்டுகின்றன.

அடுத்துவரும் பதிவில், இன்றும் தமிழக அரசுக்குப் பெரும்பொருள் ஈட்டித்தரும் ஒரு தொழிலை, தம் காலத்தே சங்கப்பெண்கள் திறம்பட நடத்தியதைக் காட்டும் சுவைமிகு பாடல்களைப் பார்ப்போம்.

Podcast available on : 

Apple 

Spotify

Google

பின்னூட்டமொன்றை இடுக