2024ஆம் ஆண்டின் சித்திரை மாதத்தில் இரண்டு திருவிழாக்கள்- ஒன்று மதுரை மாநகரத்து மீனாட்சித் திருமணம்; மற்றொன்று இந்தியத் திருநாட்டின் மக்களாட்சித் திருவிழா. மேளச்சத்தம், பெருங்கூட்டம், ஒலிப்பெருக்கியில் தமிழ்முழக்கம் என்று ஆரவாரத்துடன் காத்திருப்பவர் ஆற்றிலிறங்கும் கள்ளழகர் மட்டுமல்ல; தேர்தல் களமிறங்கும் அரசியல்வாதிகளும்தான். போராட்டம், பட்டிமன்றம், கலந்துரையாடல், பரப்புரை என்று பலவாறாகப் பேசிப்பேசித் தேர்தல் நாட்கள் நெருங்கிவிட்டன. ஏப்ரல் மாதம்முதல் தேர்தல் காணும் இந்தியாவின் அரசியல் நிலையைப் பற்றித் தெளிவாகப் பேசத் திறமையானவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே, நாம் இங்கு அலசப்போவது இன்றைய அரசியல் அல்ல.

நன்றி- படம்: flagfoundationofindia.in
‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்’ என்று, அறவழியில் ஆட்சிசெய்து மக்களைக் காக்கும் மன்னன் இறைவனுக்கு இணையாகப் போற்றப்படுவான் என்கிறது வள்ளுவம். அறம் என்பது என்ன? ‘அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்’- பொறாமை, பேராசை, அளவில்லாக் கோபம், கடுஞ்சொல் ஆகியவை இல்லாமல் இருப்பதுதான் அறம் என்று அறத்திற்கு விளக்கம் தரும் வள்ளுவர், மனதால் குற்றமில்லாமல் இருப்பதை வலியுறித்துகிறார்.
சிலப்பதிகாரமும் கதையின் சூழலுக்குப் பொருந்துமாறு, ‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூவும்’ என்று அறத்தையே எடுத்தியம்புகிறது. இளங்கோவடிகளின் சொற்களில்தான் என்ன ஒரு வீச்சு! தவறிழைத்த ஆட்சியாளர்களுக்கு மிகஉயர்ந்த தண்டனை உயிர்நீத்தல் என்பதை, தவறாக நீதி வழங்கிய பாண்டியன் நெடிஞ்செழியன் மனம் வருந்தி உயிர்நீத்த செய்கையால் வலியுறுத்துகிறார். மனத்துக்கண் மாசிலனாக- மனதால் குற்றமில்லாமல் இருந்ததால்தான், அறியாது பிழை செய்தாலும் நெடுஞ்செழியன் தன் உயிரைக் கொடுத்து நீதியை நிலை நாட்டினார்.
இது அக்காலத்தே பதிந்திருந்த நற்பண்புகள் சார்ந்த அரசியல் தெளிவைக் காட்டுகிறது. சங்க கால அரசர் தம் வாழ்வுவழி உணர்த்திய பண்புகளின் நீட்சியே திருக்குறளும் சிலம்பும் உரைக்கும் அறம் சார்ந்த கருத்துகள்.
இன்றைய மக்களாட்சியில் அரசியல்வாதிகளைக் கட்டுக்குள் வைக்கப் பலவிதமான வழிமுறைகள் வைக்கப்படுகின்றன; அதைத் தந்திரமாகத் தாமே தளர்த்தி மக்களை முட்டாள்களாக்குவதில் அவர்கள் தேர்ந்திருப்பதையும் பார்க்கிறோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகும் மக்களாட்சியிலேயே இது வாடிக்கையாகிப் போனதென்றால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மன்னராட்சியில், அரசர் வாக்கே முதலும் இறுதியுமானதாக இருந்த சூழலில், கேள்விகள் கேட்டிருக்கத்தான் இயலுமா? மாற்றுக் குரல்கள் ஒலித்திருக்கத்தான் முடியுமா?
முடியும் என்பதைத்தான் தமிழ் இலக்கியங்கள் விளக்குகின்றன. ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் அமைத்துப் பல்வேறு எதிர்கருத்துக்களையும் தெரிந்துகொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டதுதான் பண்டைத் தமிழகத்து அரசுமுறை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் செழித்த தமிழ்மரபின் பெருஞ்சிறப்பு இது என்பது நாம் பெருமைகொள்ளவேண்டிய ஒன்று.
சங்க இலக்கியங்களுள் ஒன்றான புறநானூறிலுள்ள சில பாடல்கள், இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருந்தும் பலப்பலச் செய்திகளைத் தருகின்றன. புறநானூறு காட்டும் பழந்தமிழ் அரசர்களின் அரசியல் கோட்பாடுகள், நெறிமுறைகள், மாண்புகள், வழுவாது பற்றிக்கொண்ட ஒழுக்கங்கள் இன்றும் நாம் கற்கவேண்டிய பாடங்களாகத் தோன்றுகின்றன.
ஆள்பவர் தகுதி மற்றும் மனநிலை
மன்னரே புலவராகிப் பாடல்கள் புனையும்போது, நாட்டை ஆளும் பெருஞ்செயல் எப்படி இருக்கவேண்டும் என்று உணர்ந்துப் பாடியிருப்பார் இல்லையா? தொண்டைமான் இளந்திரையன் தெளிவாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் இப்படிச் சொல்கிறார்-
கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவல் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறு இன்றாகி ஆறு இனிதுபடுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்
பகைக் கூழ் அள்ளல் பட்டு, 5
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.
(பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன், புறநானூறு 185)
மரச்சட்டங்களோடு சக்கரங்கள் சரியாக இணைக்கப்பட்டிருக்கும் ஒரு வண்டி, தேர்ந்த வண்டியோட்டி இருந்துவிட்டால் உலகில் தடையின்றி நன்றாக இயங்கும். ஆனால் அந்த ஓட்டுநர், தேர்ச்சியில்லாத தகுதியில்லாதவராக இருந்தால், வண்டி தினந்தோறும் மண்ணில் சிக்கிச்சிக்கித் துன்பமும் வலியும் தந்துவிடும் என்கிறார். அதுபோல ஒரு நாடு சிறப்பாக வளர்வதற்கு, அதை ஆள்பவர்கள் திறனுடையவர்களாக இருப்பது மிகத் தேவை என்று பாடல் சொல்வது எவ்வளவு உண்மை!
சரி, நாட்டை ஆளும் தலைவரின் மனநிலை எப்படி இருக்க வேண்டுமாம்? சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலுக்கு நரிவெரூஉத்தலையார் எனும் புலவர் எளிமையாக எடுத்துக் கூறுகிறார்-
மன்னா, ’அளிதோ தானே, அது பெறல் அருங்குரைத்தே’- அதாவது, நாட்டை ஆளும் வாய்ப்பு மிக அரிதாகக் கிடைக்கக்கூடியது. அதனால்,
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா 5
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி,
(பாடியவர்: நரிவெரூஉத்தலையார், புறநானூறு 05)
அன்பும் அருளும் இல்லாமல் முடிவில்லாத நரகத்தை நாடுபவர்களோடு சேராமல், குழந்தையைப் பாதுகாப்பதுபோல நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று அழகாக அறிவுறுத்துகிறார்.
தேர்ச்சிபெற்ற ஓட்டுநர்போல நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்தும் தலைவர்கள் தேவை; அவர்கள் அன்போடும் அருளோடும் ஆட்சி புரியவேண்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால், தம்மைத் தேர்ந்தெடுத்த மக்கள்மேல் அன்பும் அக்கறையும் கொண்ட திறமை வாய்ந்த அரசியல்வாதி அதை எப்படிப்பட்ட சமூகச் சிந்தனையோடு வெளிப்படுத்த வேண்டும்? மக்கள் நலனுக்காக அவர் ஆற்றவேண்டிய கடமைகள் என்னென்ன?
மண்வளம் காப்போம்– உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
புலவர் குடபுலவியனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு, மற்ற மன்னர்களைத் தோற்கடித்து உலகில் புகழுடன் விளங்கிட இன்றியமையாத அறிவுரையொன்றை வழங்குகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கூறப்பட்ட இச்சொற்கள், இன்றளவும் நம் அனைவருக்குமான அறிவுரையாக இருப்பது பண்டைத் தமிழர் அறிவின் விரிவையும் இக்காலச் சமூகத்தின் பொறுப்பில்லாப் போக்கையும் நமக்குணர்த்துகிறது.
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே, 19
———————————————————
———————————————————
வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும் 25
இறைவன் தாட்கு உதவாதே
(பாடியவர்: குடபுலவியனார், புறநானூறு 18)
“மண்ணையும் நீரையும் இணைத்து உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவையான உணவை வழங்குபவர்கள் அதை விளைவிக்கும் உழவர்கள். உலகோருக்கெல்லாம் உயிர் கொடுப்பவர்கள் அவர்கள்தான். அவர்கள் நலன் காப்பது உன் முன்னுரிமை. ஒரு மன்னர் ஆளும் நிலப்பகுதி மிகப்பெரியதாக இருக்கலாம். ஆனால் அவை, விண்பொழியும் மழையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கும் வறண்ட நிலங்களாக இருந்தால், அவற்றால் எந்தப் பயனும் இல்லை,” உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதால், உழவர்களுக்கு உதவும் வகையில் வளமான மண்ணைப் பெருக்க வேண்டியது நல்ல ஆட்சியாளரின் கடமை என்று உரைக்கிறார் புலவர்.
மேலும் அவர், “செழியனே! நான் சொல்வதைத் தவிர்க்காது கேட்டு உடனடியாகக் காலம் தாழ்த்தாது வேண்டியது செய்”, என்று மிகமிகத் தேவையான கருத்தொன்றைத் தெளிவுபடுத்துகிறார்.
நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே. 30
உலகிற்கு நீர் இன்றியமையாதது என்பதால், எந்த மன்னர் வீணாகப் பாய்ந்துச் செல்லும் நீரைத் தடுத்து நீர்நிலைகளில் தேக்கி வைத்துப் பயிர்களைக் காத்து மண்வளம் பேணுவாரோ, அவரே பலரைப் போரில் வென்றதால் அடையும் புகழைவிடச் சிறப்பெய்துவார், என்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நீர்ப்பாசனத் திட்டம் வகுத்து நீர்வளம் பெருக்கி மண்வளம் பேணவேண்டிய தேவையை ஆணித்தரமாக இயம்புகிறார் குடபுலவியனார். இந்த வரிகளால் தூண்டப்பட்டாவது நாம் பொறுப்புடன் செயலாற்றினால், வரும் தலைமுறை பயனடையும்.
அளவோடு வரி
அன்போடும் அக்கறையோடும் ஆட்சி செய்ய அடுத்து என்ன தேவை?
அன்போடும் மக்கள்நலனில் அக்கறையோடும் செயல்படவேண்டிய அரசு, தான் விதிக்கும் வரியால் மக்கள் துன்புறாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமாம். பாண்டியன் அறிவுடைநம்பியைப் பாடிய பிசிராந்தையார், அளவில்லாமல் வரி விதிப்பது மக்களுக்கு எவ்வளவு துன்பம் தரும் என்பதை விளக்குகிறார்.
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, 5
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத், 10
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
(பாடியவர்: பிசிராந்தையார், புறநானூறு 184)
அறிவுடைய ஆட்சியாளர்கள் நெறியறிந்து சரியானவற்றிற்கு மட்டுமே மக்களிடம் வரி பெற்றால், அவர்களும் முறையாகச் செலுத்துவார்கள்; கோடி கோடியாக வரியும் கிட்டும், நாடும் வளமாகச் செழிக்கும்; ஆனால், எப்போதும் தவறாக வழிநடத்தும் உடனிருப்போர் சொல்கேட்டு, ஆட்சியாளர்கள் மக்கள்பால் அன்பில்லாது வரிமேல் வரிவிதித்துத் துன்பப்படுத்தினால், யானை புகுந்த நிலத்தில் விளைந்தவை அழிந்து ஏதும் மிஞ்சாததுபோல, நாட்டுக்கும் ஏதும் கிட்டாது உலகும் கெட்டுப் போகும் என்கிறார். அளவில்லாமல் வரி விதித்து மக்களின் சுமையைக் கூட்டும் ஆட்சியாளரின் செயல், உழைத்த நிலத்தின் விளைச்சலை அழிக்கும் யானையின் முரட்டுத்தனத்தைப் போன்றது என்று அழுத்தமாகச் சுட்டுகிறார் புலவர்.
செல்வத்துப் பயனே ஈதல்
அடுத்து, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாருடைய பாடல், ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் தலைக்குமேல் ஏறும் ஆணவத்தைத் தகர்க்கும் பாடல்-
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி,
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே, 5
பிறவும் எல்லாம் ஓரொக்குமே,
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே
(பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், புறநானூறு 189)
கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் அனைவருக்கும் பொதுவானது என்றுணராமல் வெண்கொற்றக் குடையின்கீழ் ஆள்பவராக இருந்தாலும், இரவும் பகலும் உறங்காமல் விலங்குகளை வேட்டையாடும் கல்வியறிவில்லாதவராக இருந்தாலும்- உண்பதற்கு ஒருநாழி அளவு உணவுதான் வேண்டும்; உடுப்பதற்கு இரண்டு துணிகள்தான் வேண்டும்; பிறப்பும் இறப்பும் ஒன்றுதான். அதனால், இருப்பதைப் பிறருக்குக் கொடுத்து உதவுவதுதான் செல்வத்தின் பயன், என்கிறார்.
மண்ணை வாழவைக்கும் மக்கள் தகுதி
ஆள்பவர்கள் செய்யவேண்டியவை என்னென்ன என்று சொன்னால் போதுமா? ஆளப்படுகிற மக்களுக்குப் பொறுப்புகள் இல்லையா? ஔவையார் அதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார்.
நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ,
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
(பாடியவர்: ஔவையார், புறநானூறு 187)
நாம் வாழும் நிலப்பகுதி, நாடாகவோ காடாகவோ பள்ளத்தாக்காகவோ மலைப்பகுதியாகவோ- எப்படி இருந்தாலும், அந்நிலத்தில் வாழும் மக்களாகிய நாம் நல்லவர்களாக, நற்பண்புகளும் முயற்சியும் உழைப்பும் பெற்றவர்களாக, பொறுப்புணர்வும் குடிமக்களின் உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்ளும் விழிப்புணர்வும் கொண்டிருந்தால், எந்த நிலமும் சிறப்புற்று விளங்கும், என்கிறார்.
தேர்ந்த வண்டியோட்டியைப் போல் தகுதியுடையவர்கள், குழந்தையைப் பாதுகாப்பதுபோல நாட்டைக் காப்பவர்கள், வரி என்ற பெயரில் அன்பில்லாமல் மக்கள் சுமையைக் கூட்டாதவர்கள், நீர்நிலைகள் கட்டி மண்வளம் பெருக்கி உழவர்களை ஆதரிப்பவர்கள் என்று ஆள்பவர்கள் திறன்களோடு, ஆளப்படுவோரும் ஓளவை கூறிய திறனுடையோராக இருப்பது ஒரு நாட்டுக்கு மிகமிக முக்கியம் இல்லையா?
குறையின்றி மக்களை ஆண்டும், குறைவின்றிக் குடிகளுக்கு வழங்கியும், தவறுகளை இடித்துரைத்த சான்றோர் மற்றும் புலவர்கள் சொற்களுக்குச் செவிமடுத்து மதிப்பளித்தும் நாட்டை ஆண்டவர் கோவாகிய மன்னர். அவர் வாழ்ந்த அரண்மனை, கோயில் (கோவின் இல்லம்) என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் இறைவனுக்காக எழுப்பப்பட்ட தளங்கள் அப்பெயரிலேயே வழங்கப்பட்டது, தமிழகத்துக்கே உரிய வேறுபட்ட சிந்தனைக் களம்தான்.
சித்திரையில் வாட்டியெடுக்கும் வெப்பத்தைவிடச் சூடுபிடித்திருக்கும் தேர்தல் களத்தில், நம் சூழலுக்குப் பொருந்தும் புறநானூற்றுச் செய்திகளைச் சுருக்கமாகப் பார்த்தோம். மன்னராட்சியில் அழுத்தமாக உரைக்கப்பட்ட இந்தத் தகுதிகளை, மக்களாட்சியிலும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோள்களாகக் கொள்ளமுடிகிறது என்பது வியப்பில் ஆழ்த்தும் செய்திதானே!
நன்றி.
Podcast available on :