முந்தைய பகிர்வில், மதுரைக்காஞ்சி வழியாகப் பாண்டிய நாட்டு வளத்தைப் பார்த்தோம். இனி மதுரை மாநகரைச் சுற்றி வருவோம்.. வாருங்கள்.
மதுரை மாநகர் எப்படி இருந்தது?
782 அடிகள் கொண்டது மதுரைக்காஞ்சி. அதில், 327ஆவது வரியில் தொடங்கும் மதுரையின் சிறப்பு, 699ஆவது வரியில் நிறைவடைகிறது. 372 வரிகளில் மதுரை நகரை நமக்குச் சுற்றிக் காட்டுகிறார் ஆசிரியர்.
புத்தேள் உலகம் கவினிக் காண்வர
மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை (698 – 699)
வானுலகத்தில் உள்ளவர்கள் வியந்து காணும் அழகும், மிகுந்த புகழும் எய்திய பெரிய சிறப்பையுடையது மதுரை. 372 வரிகளில் அம்மாநகரின் அமைப்பையும் பலதரப்பட்ட மக்களையும் அவர்கள் வாழ்க்கை சார்ந்த பல்வேறு காட்சிகளையும் நம் கண்முன் கொணர்ந்து நிறுத்துகிறார் புலவர் மாங்குடி மருதனார். இன்றுபோல் புகைப்படங்கள், காணொலி, குறும்படம் போன்ற வெளிப்பாட்டு ஊடகங்கள் இல்லாத காலத்தில், சொற்களால் நம் கைப்பிடித்துக் கூட்டிச் சென்றுக் காட்டுகிறார் ஆசிரியர்.
மதுரையின் அகழியும் மதில்களும் மாடங்களும் வாயிலும் வீடுகளும் தெருக்களும் எப்படி இருந்தன?

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)
- மண் உற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கு – நீலமணி போன்ற நீரையுடைய ஆழமான கிடங்கு,
- விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை- வான் அளவு உயர்ந்த மதில்,
- நெய்படக் கரிந்த திண்போர்க் கதவு – நெய்யை ஊற்றியதால் கருத்த-திண்மையான கதவு,
- மழை ஆடும் மலையின் நிவந்த மாடம்- முகில் உலவும் மலைபோன்ற உயர்ந்த மாடங்கள்,
- வையை அன்ன வழக்குடை வாயில்- வையை ஆறுபோல் மக்கள் பயன்படுத்தும் பெரிய வாயில்,
- சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல் – மெல்லிய இசையாக ஒலிக்கும் சில்லென்ற தென்றல் வீசும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்கள்,
- யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு – ஆறு கிடந்ததுபோன்ற அகலமான நெடிய தெருக்கள்,
நம் கண்முன் காட்சி மெல்ல விரிவடையத் தொடங்குகிறது.
அப்படியே நடந்து சென்றால், நாளங்காடியில்- உணவுப் பொருட்கள் விற்பவர்கள் மற்றும் கூடைகளில் பூக்கள் மற்றும் பூமாலைகள் விற்பவர்கள் இருக்கிறார்கள்; பலவித சிறுவணிகர்கள் தத்தம் பொருட்களை விற்கிறார்கள். கூந்தல் நரைத்த தொல் முதுபெண்டிரும் உழைத்துப் பொருளீட்டுகிறார்கள்.
நாள்பொழுதில் விழாவைக் கண்டுகளிக்க, செல்வந்தர்கள் வருகிறார்கள். அவர்கள் பளிச்சென்ற ஆடைகளுடன் பொன்னால் அழகு செய்யப்பட்ட வாளையும், மலர் மாலைகளையும், மார்பில் முத்து மாலையும் அணிந்திருக்கிறார்கள்.
செல்வமகளிர், மணிகளையுடைய பொற்சிலம்பும், பொன்னால் செய்த அணிகலன்கள், வளையல்கள் மற்றும் ஒளியுடைய காதணிகள் அணிந்து வருகிறார்கள். அவர்கள் பூசியிருக்கும் வாசனைப் பொருட்களின் நறுமணம் தெருவெங்கும் பரவியிருக்கிறது.
இவர்களோடு குலமகளிர், பரத்தையர், பிள்ளை பெற்ற மகளிர், தாய்மையடைந்த பெண்கள் தத்தம் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் அவரவர் வழிபாட்டு நெறிகளைச் சச்சரவின்றிக் கடைபிடிக்கின்றனர் – பெளத்த பள்ளியும் அந்தணர் பள்ளியும் சமணர் பள்ளியும் தத்தம் முறைகளில் செயல்படுகின்றன.
இது மட்டுமா?
சிறந்த கொள்கையுடைய அறம் கூறும் அவையம்- நீதி மன்றங்கள், அன்பும் அறனும் ஒழியாது காக்கும் அமைச்சர்கள், அறநெறி பிழையாது சிறந்த நாடுகளின் பண்டங்களை விற்கும் வணிகர்கள், நாற்பெரும் குழுவினர் என்று பலதரப்பட்டோர் வாழும் தெருக்களைக் காணமுடிகிறது.
அப்படியே தெருக்களில் தொடர்ந்து நடந்து சென்றால், கடலில் கிடைத்த சங்கினை அறுத்து வளையல் செய்பவர்கள்; அழகிய மணிகளில் துளை இடுபவர்கள்; பொன்னைச் சுட்டு நகைகளைச் செய்வோர்; பொன்னைக் கல்லில் உரசிப் பார்த்துத் தரம் பார்ப்போர்; துணி விற்பவர்கள்; கச்சுக்களை முடிப்பவர்கள்; செம்புப் பொருட்களை எடையிட்டு வாங்குபவர்கள்; மலர் விற்பவர்கள், நறுமணச் சாந்து விற்பவர்கள் என்று பல்வேறு தொழில் செய்வோரைக் காணமுடிகிறது.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)
அங்கே, கூர்மையான அறிவுடைய ஓவியக் கலைஞர்கள் ஓவியம் தீட்டுகிறார்கள்; சிறிதும் பெரிதுமான மடித்த துணிகளை, அவற்றை நெய்து வந்த வணிகர்கள் விற்பனை செய்கிறார்கள்.
சாறும் மணமும் நிறைந்த பலாச் சுளையும் மாம்பழமும், பல்வேறு வடிவிலான காய்களும், பழங்களும், கீரைகளும், இனிப்பான சாறுடைய கற்கண்டுத் துண்டுகளும், கீழே விளைந்த கிழங்குகளும் கலந்து, சோற்றினைக் கொடுப்போர் கொடுக்க, பெற்றுக் கொள்பவர்கள் உண்ணுகிறார்கள்.
இப்படியே அந்தி நேரம் முடிந்து இரவு வந்து, இரவில் முதல், இடை, கடைச் சாம நிகழ்வுகளைக் காட்டுகிறார் ஆசிரியர். அடுத்து, பொழுது புலர்கிறது. விடியற்காலையில் மதுரை எப்படி இருக்கிறது?
அந்தணர்கள் வேதம் பாட, யாழ் வாசிப்பவர்கள் மருதப் பண்ணை இசைக்க, யானைப் பாகர்கள் யானைக்குக் கவளம் ஊட்ட, தேரில் கட்டப்படும் குதிரைகள் புல்லை உண்டு கனைக்கின்றன. பண்டங்கள் விற்கும் கடைகளில் தரையை மெழுகுகிறார்கள். கள்ளை விற்பவர்கள் விலை கூறி விற்கிறார்கள். இல்லத்துப் பெண்கள் தங்கச் சிலம்புகள் ஒலிக்க நடந்து வந்து, தத்தம் வீடுகளின் கதவுகளைத் திறக்கிறார்கள்.
இதுதான் மாங்குடி மருதனார் காட்டிய ‘புத்தேள் உலகம் கவினிக் காண்வர மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை (698 – 699)’- வானுலகத்தில் உள்ளவர்கள் வியந்து காணும் அழகும், மிகுந்த புகழும் அடைந்த சிறப்பையுடைய மதுரை மாநகர். ஊரைச் சுற்றி வந்த உணர்வு எப்படி இருந்தது என்று நீங்கள்தான் கூறவேண்டும்.
அடுத்த பகுதியில், மதுரைக்காஞ்சியில் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒருசில காட்சிகளைப் பார்ப்போம்.
நன்றி.
Podcast available on :