தமிழின் தொன்மை இலக்கியங்களான எட்டுத் தொகை-பத்துப் பாட்டு நூல்கள், அக்காலத்தே செழித்திருந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டையும் அதன் சிறப்புக்களையும் எண்ணியெண்ணிக் களிப்படையச் செய்பவை; படிக்கப் படிக்கச் சிந்திக்கத் தூண்டுபவை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மண்ணின் நிகழ்வுகளை நேரலைபோல நமக்குக் காட்டுபவை.
சங்க இலக்கியங்கள் மீது அதைப் படிப்பவர்களுக்குத் தீராத ஈர்ப்பு வருவது எதனால்? அவரவர் பார்வைக்கேற்ப காரணங்கள் பலவாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் முதன்மையான காரணம், அவை உங்களையும் என்னையும் போன்ற இயல்பான மக்களின் அன்றாட வாழ்வு சார்ந்த படைப்புக்கள் என்பதுதான். நாம் வாழும் சமூகத்தில் நம் அண்டை வீட்டாரையும், தெருவில் வசிப்போரையும், ஊர்க்காரர்களையும்; சிரிப்பு, அழுகை, கோபம், அச்சம், காதல் என்ற அவர்களின் பலவித உணர்வுகளையும் காட்டும் நம் மண்ணின் இலக்கியங்கள், நமக்குப் பல கதைகள் சொல்லுகின்றன.
அப்படி, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புலவர் மாங்குடி மருதனார் பாடியது. வாழ்வின் நிலையாமையை முன்னுரிமை கொண்டு பாடும் இப்படைப்பு, காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு, இரவு ஆகிய வேளைகளில் மதுரை மாநகரின் வெவ்வேறு காட்சிகளை மிகுந்த சுவையுடன் உரைக்கிறது. அந்தக் காட்சிகளினூடே ஆசிரியர் மாங்குடி மருதனார் வியப்பூட்டும் பற்பல தகவல்களை அளிக்கிறார்.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)
வாழ்வின் நிலையாமையைக் கூறும்பொருட்டு இயற்றப்பட்ட இலக்கியத்தில் காட்டப்படும் மதுரை நகரின் செழிப்பையும் மன்னன் பெருமையையும் கேட்கும்போது, அங்கு வாழாது போனோமே என்று மனம் வருந்துகிறது; வாழ்ந்திட நெஞ்சம் ஏங்குகிறது. சரி, அப்படிப்பட்ட காட்சிகள்தான் என்னென்ன?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியத்தில் நாம் காணும் காட்சிகளை-
- மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்
- மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகர்
- மதுரைக்காஞ்சியில் வியக்க வைக்கும் சில செய்திகள்
என்று மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பகிரலாம் என்று நினைக்கிறேன்.
முதலில் மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்.
பாண்டிய நாட்டின் செழிப்பைக் கூறுகையில் –
மழைதொழில் உதவ மாதிரம் கொழுக்க,
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயன் எதிர்புநந்த,
நோய் இகந்து நோக்கு விளங்க (10-13)
என்கிறார் புலவர். உழவருக்கு மழை உதவ, நிலமும் மரமும் பயன்களை அள்ளி வழங்க, நோய்களின்றி மக்கள் மகிழ்வுடன் விளங்கிய நாட்டின் தலைவனாம் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். தொல்முது கடவுள் சிவனின் வழித்தோன்றல் அவர் என்று உரைக்கிறார் புலவர். இதனிடையில் இன்றும் நாம் ஏங்கும் ஒன்றைச் சொல்கிறார்- ‘தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய’ எனும்போது, ஒரே விதைப்பில் விதைகள் ஆயிரம் ஆயிரமாகப் பயன்தரும் வளமான மண்ணை ஆண்ட குடி பாண்டியர் குடி என்பது தெளிவாகிறது.
நெடுஞ்செழியன் ஆண்ட தமிழ்மண்ணின் எல்லைகள் என்னவாக இருந்தன?
தென்குமரி வட பெருங்கல்
குணகுட கடலா எல்லை (70-71)
தெற்கில் குமரிக் கடலும் வடக்கில் பெரிய மலையும் எல்லைகளாக இருந்தன. இங்கே பெரிய மலை என்பது திருவேங்கட மலை என்பது அனைவரும் அறிந்ததுதானே? கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லைகளாகக் கொண்டு, கொற்றவர் தம் கோனாக விளங்கிய மன்னர் அவர்.
பாண்டிய நாட்டின் ஐவகை நிலங்களின் காட்சிகளை வரிசையாக விவரிக்கிறார் ஆசிரியர்.
மருத நிலத்தில்-
களிறு மாய்க்கும் கதிர்க் கழனியைக் (247-248) காண்கிறோம். அதாவது, யானைகளையே மறைக்கும் அளவிற்குக் கதிர்கள் வயல்களில் வளர்ந்துள்ளன.

நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு)
அந்நிலத்தில் எழும் பலவித ஒலிகளுக்கு இடையில் நாம் கேட்பது-
கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை (258)- கரும்பு ஆலைகளின் ஓசையும்;
தளிமழை பொழியும் தண்பரங்குன்றில் கலிகொள்சும்மை ஒலிகொள்ஆயம் (263-264)
முகில்கள் மழையைப் பொழியும் குளிர்ச்சி பொருந்திய திருப்பரங்குன்றத்தில் விழாக்களின் ஒலி நம் செவிகளை நிறைக்கிறது.
முல்லை நிலத்தில் –
தினை எள் மற்றும் வரகின் கதிர்கள் முற்றி விளைந்து நிற்கின்றன.
பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி
மடக்கண் பிணையொடு மறுகுவன உகள (275-276)
மிகவும் அழகான, சிறிய தலையையுடைய நெளவி மான் தன் பெண் மானுடன் சுழன்றுத் துள்ளி விளையாடுகிறது.
குறிஞ்சி நிலத்தில் ஒரே ஆரவாரமாக இருக்கிறது-
தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை விரட்டும் ஒலியும், தளிர்களை மேயும் காட்டுப் பசுவைக் கானவர் விரட்டும் ஓசையும், தான் தோண்டிய குழியில் விழுந்த ஆண் பன்றியை மலைக்குறவன் கொல்லும் ஒலியும், வேங்கை மரத்தின் பெரிய கிளைகளில் நறுமண மலர்களைப் பறிக்கும் பெண்கள் ‘புலி புலி’ என்ற கூவிக்கொண்டே பறிக்கும் ஒலியும் சேர்ந்து, வெள்ளை அருவியின் ஒலி மலையில் எதிரொலிக்கிறது.
வறண்ட பகுதியான பாலை நிலத்திலோ-
அருவிகள் இல்லாது அழகிழந்து நிற்கிறது பெரிய மலை, வைக்கோல்போல் ஊகம்புல் நிறைந்துகிடக்க உலர்ந்திருக்கிறது காடு, சூறாவளிக் காற்று கடல் போல் ஓங்கி ஒலிக்கிறது. அந்தச் சூழலில், இலையால் வேய்ந்த குடிசையில்- மான் தோல் படுக்கையில்- இளைஞர்கள், தங்கள் கைகளில் வில்லினை ஏந்திக் கள்வர் வராமல் காக்கிறார்கள்.
நெய்தல் நிலத்திலோ-
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்து உடன்கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப(321-324)
சிறந்த மரக்கலங்களைக் கடலில் இயக்குபவர்கள் பெரிய நாடுகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் தாங்கள் கொணர்ந்த குதிரைகளை விற்று, இங்கிருந்து அணிகலன்களைக் கொண்டு செல்லும் வளமான வணிகம் ‘வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப’- நாள்தோறும் சிறப்பாக நடைபெறுகிறது.
மதுரைக்காஞ்சியின் வரிகளைப் படிக்கும்போது நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அத்தனையும் வரலாற்றுத் தரவுகள். தமிழகத்தின் வளமான நிலங்களில் என்னென்ன விளைந்தன? தினை, எள், வரகு, மூங்கில் நெல், வெண்கடுகு, வெண்ணெல்லும்; இஞ்சி, மஞ்சள், மிளகு, இனிய புளி, வெள்ளுப்பும்; அகிலும் சந்தனமும்; கீரையும் கிழங்கும்; பலாவும் மாங்கனியும் …. என்று பெரிய பட்டியலிடலாம்.
இப்படி, சிவனின் வழிவந்தவன்-திருவில் பாண்டியனின் வழித்தோன்றல் என்று மன்னனைச் சுட்டி, யானை-குதிரை-தேர்-வீரர் படைகளின் வலிமையைப் பாராட்டி, நாட்டின் நால்திசை எல்லைகளைக் காட்டி, போர் வெற்றிகளைக் குறிப்பிட்டுக் கொற்றவர்களுக்கெல்லாம் கோனாக இருக்கும் நெடுஞ்செழியன் பெருமை கூறித் தொடங்குகிறது மதுரைக்காஞ்சி. இலக்கிய நெறியுடன் வரலாற்றுத் தகவல்களின் பெட்டகங்களாக விளங்குவது தமிழ் இலக்கியங்களின் சிறப்பு.
இந்த முதல் பகுதியை அடுத்து, மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகரையும் மதுரைக்காஞ்சியில் வியக்க வைக்கும் சில செய்திகளையும் வரும் பதிவுகளில் பார்ப்போம்.
நன்றி.
Podcast available on :