‘அற்றைத் திங்கள்- வலையொலியில் தமிழொலி’ – ஓர் அறிமுகம்


வலையொலிப் பதிவு

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கும் குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !
(பாரதிதாசனார், தமிழின் இனிமை)

என்ற பாரதிதாசனாரின் அடிகள் சொல்லும் இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள். ‘அற்றைத் திங்கள்’ வலையொலிப் பக்கத்தில் உங்களை வரவேற்கிறேன்.

என் வலையொலிப் பக்கத்தின் முதல் பதிவு… அறிமுகப் பகிர்வு இது.

‘அற்றைத் திங்கள்’ என்று பெயர் சூட்ட என்ன காரணம் என்று முதலில் சொல்லணும்
இல்லையா? இன்றைய பகிர்வு முழுவதும் அதைப் பற்றியதுதான்.

உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ் – மொழி மட்டுமல்ல, ஒரு பண்பாடு.

சமீபத்திய கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாய்வுப் பணிகளைப் பாருங்கள்-

. பொதுக் காலத்துக்குப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுத்தறிவு
பெற்றிருந்தது தமிழ்ச் சமூகம் என்பது தெரிகிறது;

. பொதுக் காலத்துக்குக் குறைந்தது 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே, கொற்கை ஒரு
துறைமுகமாகச் செயல்பட்டு வந்ததும், அக்காலத்திலேயே வெளிநாடுகளில் வணிகச்
செல்வாக்குப் பெற்றிருந்தது தமிழகம் என்பதும் தெரிய வருகிறது;

. சிவகளையில் கிடைத்த நெல்மணிகளின் காலம், பொதுக் காலத்துக்கு முன் 1155 ஆண்டுகள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம், தமிழரின் நாகரிகம் இன்றிலிருந்து குறைந்தது 3200 ஆண்டுகள்
முற்பட்டது என்று அறியும்போது உள்ளம் பூரித்துப் போகிறது.

சரி, தொன்மை, பழமை என்பதை வைத்து நாம் அறியும் செய்திதான் என்ன?
அதற்கு இவ்வளவு சிறப்பிடம் தரத்தான் வேண்டுமா?
இந்த உலகம் மிக வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த அதிவேகப்
பயணத்தில், இனம், மொழி சார்ந்த பூரிப்பில் மெதுவாகப் பயணிப்பது… வேகத்தைக் குறைத்துக் கொண்டு மெதுவாகப் பயணிப்பது தேவையா?
என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

தமிழ்மொழியின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பழமையையும், இன்றும் நம் வாழ்வுடன் இயைந்த தன்மையையும், நான் எப்படி
பார்க்கிறேன்?
ஒரு சில பார்வைகளை உங்கள்முன் வைக்கிறேன்.

அ. சங்கப் பாடல்கள் காட்டும் சமூக வாழ்வை இன்றைய நம் வாழ்க்கைமுறையோடும் தொடர்புப்படுத்திப் பார்க்கமுடிகிறது

ஆ. மிகப் பழங்காலந்தொட்டுச் செழித்திருந்த அயல்நாட்டு வணிகம் குறித்த தகவல்களைப் பாருங்கள். அவை நம்மை வியக்க வைக்கின்றன.

அகழ்வாய்வுகளும் சங்க இலக்கியச் சான்றுகளும் சொல்லும் ரோம வணிகம்-
பல்லவர் காலத்தில் வளர்ந்து, இடைக்காலச் சோழர் காலத்தில் விண்ணளவு உயர்ந்த தென்கிழக்காசிய வணிகம்-
என்றிவை, தமிழர்கள் வலிமையான பெருங்கடல்களை வணிகக் குளங்களாகப் பயன்படுத்தியதைப் பறைசாற்றுகின்றன.

இ. இலக்கியங்கள் கூறும் கூத்தும் பாட்டும் வழிபாட்டு நெறிகளும் இதர கலைகளும், இன்றும் வளமாக நம்மிடையே உலவக் காண்கிறோம்.

ஈ. அன்று வழக்கில் இருந்த பண்டிகைகளை, விழாக்கோலத்துடன் இன்றும் தொடர்ந்து நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

உ. பிறமொழி கலப்பில்லாமல் தமிழ் பேசுவது அரிதாகிவிட்டது இன்று. ஆனாலும் கூட,
ஈராயிரம் ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட இலக்கியச் சொற்களும், தொடர்களும் பாக்களும் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன. அவற்றை நம்மால் புரிந்து கொள்ளவும் முடிகிறது.

நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வு, உயர்த்திய பண்பாடு, வளர்த்த மொழி, பரப்பிய வணிகம், உண்ட உணவு, உணர்ந்த காதல், உழைத்துச் செழிக்கச்
செய்த நானிலம், வென்ற போர்கள், இழந்த அரசுகள், இத்தனையும் இதற்கு மேலுமான வரலாறைக் கண்ட தமிழ் மண், 3200 ஆண்டுகாலத்
தொடர்ச்சியாக இன்னமும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது, இதே தமிழகத்தில்!
தமிழ் மொழியோ, இளமை மாறாது வாழும் மொழியாகத் திகழ்கிறது.

ஒரு சமூகத்தின் தொடர்ச்சி, பண்பாட்டின் தொடர்ச்சி, மண் சார்ந்த வரலாற்றின் தொடர்ச்சி – இத்தனை நீண்ட காலஎல்லையைக் கடந்தும்
உலகெங்கும் இடையூறற்றுப் பரவி நிற்பதை என்னவென்று சொல்வது!!

இத்தகு தொன்மை இனத்தின் எச்சங்களான நாம்- மொழி, பண்பாடு, வரலாறை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுச் செல்லும், பாதுகாத்துக் கொடுத்துச் செல்லும் பண்பாட்டுப் புரவலர்கள் என்று நான் நினைக்கிறேன்.

இத்தனைச் சிறப்புடைய தொன்மைத் தமிழின் ஒரு சொற்றொடர், இன்றும் நம்மிடையே உலவி வரும் சொற்றொடர்தான், என் வலையொலிப் பக்கத்தின் பெயராக அமையவேண்டும் என்று நினைத்தேன்.

சங்க இலக்கியத்தில், எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான புறநானூறில், கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னரின் மகள்கள் அங்கவை, சங்கவை.
அங்கவையும் சங்கவையும் புனைந்த பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் ஒன்று.

பெண்பாற் கவிஞர்களும், இளமையிலேயே பாடல் இயற்றும் திறன் வாய்த்தவர்களும் இருந்த சமூகம் தமிழ்ச் சமூகம் என்பதை எடுத்துக்காட்டும் சிறப்புப் பாடல் இது.

‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்ற இந்தப் பாடலின் தொடக்கச் சொற்றொடரையே, என் வலையொலிப் பதிவின் பெயராகச் சூட்டினேன்.

இப்போது நான் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.. முன்பின் அறிமுகமில்லாத நம்மை இணைப்பது தமிழ்தான்.

வீட்டில் பேச்சுமொழியாக, நூல்களில் எழுத்துமொழியாக, ஓங்கி ஒலிக்கும் மேடைமொழியாக, நாள்தோறும் கேட்கும் ஊடகமொழியாக உலவிவரும் தமிழ், இளமை மாறாத இனிமை மொழியாக இன்ப மொழியாக இருக்கக் காரணம் நாம்தான்.

தமிழை வாசித்தும் நேசித்தும் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துப்போகிற நம் பற்றுடைய மனப்பாங்குதான் தமிழ் மொழியின், பண்பாட்டின், தமிழர் வரலாற்றின் தொடர்ச்சிக்கான காரணங்களுள் அடிப்படையானவை எனலாம்.

தமிழை வளர்க்கும் நற்பெயர் நமதென்றால், அதை வளர்க்காத குறையும் நம்முடையதுதானே?

தமிழ் என்ற மொழியும் பண்பாடும் நம் வேர்கள். அந்த வேர்களை, விழுதுகளான நம் பிள்ளைகள் இறுகப் பிடிக்கச் செய்வது நம் கைகளில்தான் உள்ளது.

இல்லையெனில், மரபு மாற்றுப் பயிர்போல, அடையாளம் இல்லாச் சமூகத்தை விட்டுச் செல்லும் பழியும் நம்மையே சேரும்.

நான் படித்து, கேட்டு, வியந்த – மொழி, இலக்கியம், வரலாறு, கலைகள், ஆளுமைகள் போன்ற ஆர்வமான பல தகவல்கள் குறித்த ஒலிப்பதிவாக இந்த வலையொலிப் பகிர்வை வழங்க விழைகிறேன்.

வாங்க சேர்ந்தே பயணிப்போம்!

உலகமெனும் அகண்ட இந்த நிலப்பரப்பில், 3000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஒலித்துவரும் தாய்மொழியை, அடுத்த தலைமுறைக்குப் பெருமிதத்துடன் கொண்டு செல்வோம்!!

Podcast available on:   Apple   Google   Spotify