அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்


அனைவருக்கும் அன்னையர்நாள் நல்வாழ்த்துக்கள்.

ஒரு நாளைக் குறித்து வைத்துக்கொண்டு அன்னையைக் கொண்டாடும் வழக்கம் நம் சமூகத்தில் இல்லை. ஆனால், அன்னைக்கும் தந்தைக்கும் என்றுமே மதிப்பளித்து உயர்நிலையில் போற்றும் பண்பு நமக்கிருக்கிறது.

மலையிடைப் பிறவா மணியும், அலையிடைப் பிறவா அமிழ்தும், யாழிடைப் பிறவா இசையும் சிலப்பதிகார ஆசிரியருக்கு அரியவற்றுடன் ஒப்பிடப் பயன்பட்டன. மாறிவரும் காலச்சூழலில், மலைத்தேனும் கடல்முத்தும் அருகிப்போனதோடு, மரநிழலும், மழைத்தூரலும், பனைநுங்கும்கூட அரிய பொருட்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்றுவரை வெய்யிலும் காற்றும், பூவின் மணமும், கடல் உப்பும், கன்னல் சாறும், தெங்கின் இளநீரும் இயல்பாகக் கிடைப்பதுபோல் தாயின் அன்பையும் அணைப்பையும் எவ்வளவு வயதானாலும் நேரம் கேட்டுப்பெறும் தேவையில்லை நம் வாழ்க்கை முறையில். இன்னொரு பார்வையில், எளிதாகக் கிடைத்திடும் எதையும் கொண்டாடும் கட்டாயமில்லை நமக்கு. தாய்மையும் சிலவேளைகளில் அப்படிப்பட்டதுதான்.

இன்றைய நாளைப் பயன்படுத்தி, சங்கப் பாடல்கள் என்னும் சாளரம் வழியாகப் பழங்காலத் தமிழகத்து அன்னையர் எப்படி இருந்தார்கள் என்று பார்க்கத் தோன்றியது. இலக்கியம் நமக்குக் காட்டும் பலப்பல அன்னையருள் சிலரை இன்று காண்போம். இருவர், மகனைப் போருக்கு அனுப்பிவிட்டுத் தாமும் வீரத்தையே அணிகளாகப் பூண்டவர்கள். மற்றவர்கள், மணமுடித்துச் சென்ற மகள் குறித்துக் கவலைப்படும் பாசமிகு தாய்மார். இன்றும் நம்மால் தொடர்புபடுத்திக் கொள்ளமுடிகிற உணர்வுப் புதையல் சங்க இலக்கியம்.

இந்தப் பாடல்களும் காட்சிகளும் நம்மில் பலரும் அறிந்தவைதான். ஆயினும், எத்தனைமுறை வாசித்தாலும் இவர்கள் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகிறார்கள்.

முதலில் ஒரு புறநானூறுக் காட்சியைப் பார்ப்போம். பாடலைப் பாடியவர் காவற்பெண்டு என்ற பெண்பாற் புலவர். அந்தத் தாயின் மகனைத் தேடிச் சிலர் வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டின் தூணைப் பிடித்திக் கொண்டு அவர்கள் ‘உன் மகன் எங்கே?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் கூறும் விடை என்ன?

சிற்றில் நற்றூண் பற்றி,  “நின் மகன்
யாண்டு உளனோ?” என வினவுதி; என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே, 
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.

புறநானூறு 86;  பாடியவர்: காவற்பெண்டு

சிற்றில் நற்றூண் பற்றி,  “நின் மகன் யாண்டு உளனோ?” என வினவுதி– என் சிறிய இல்லத்தில் நல்ல தூணைப் பிடித்துக் கொண்டு “உன் மகன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்கிறாய்.  

என் மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்– என் மகன் எங்கு இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது.  

ஓரும் புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறோ இதுவே – புலி இருந்துவிட்டுப் போன கல் குகையைப் போன்றது அவனைப் பெற்ற என் வயிறு –

தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே– வீரம் மிகுந்த என் மகன் எங்கே இருப்பான்? போர்க்களத்தில் இருப்பான், அங்கு போய்த் தேடுங்கள்,

என்கிறார் அந்தத் தாய்.

மகன் எங்கே என்று ஏளனமாகக் கேட்ட கேள்வியால் கோபத்தில் சொன்ன விடையாகவும் இப்பாடலைக் கொள்ளலாம். அல்லது, போருக்கு மகனை அனுப்புவதைத் தம் நாட்டுப்பற்றுடைக் கடமையாகக் கருதிய புறநானூற்றுத் தாய், விடை பகர்ந்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள் என்றும் கொள்ளலாம். அவனைத் தேடி இங்கே ஏன் வந்தாய்? போ போ போர்க்களத்தில்தான் இருப்பான்…வேறெங்கே இருப்பான் என்று இயல்பாகச் சொல்லிவிட்டார்போலும்.

ஆனால், புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறோ இதுவே- புலி இருந்துச் சென்ற குகையென மகனைச் சுமந்த கருவறையைக் குறிக்கும் அத்தாயின் வீரப் பண்பை என்னவென்று சொல்வது!

அடுத்து வருவதும் ஒரு புறநானூறு காட்சி.

கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்து வாய்வடித்த வேல் தலைப் பெயரித்,
தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்,
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி,
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, 
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி,
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

புறநானூறு 295; பாடியவர்: ஔவையார்

போர்க்களத்தில் மகன் இறந்துவிட்டான். இறந்துபோன தன் மகனைக் காண ஓடோடி வருகிறார் அவனுடைய தாய்.

அவன் எப்படிப் போரிட்டிருந்தான்?

கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்து வாய்வடித்த வேல் தலைப் பெயரி
– கடல் துள்ளி எழுந்தாற்போல, தீ கக்கும் தன் வேலைப் பகைவர்களை நோக்கி எறிந்து கொண்டும்,

தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்– வேலும் அம்பும் நிறைந்த போர்க்களத்தில் தன் படையினரை வழிநடத்திக் கொண்டும்,

வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி– முன்னேறி வந்த எதிர்ப் படையினரைத் தடுத்தும் விலக்கியும் போரிட்டான்.

இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, 
சிறப்புடையாளன்
– அப்படிச் சிறப்புறப் போரிட்ட அந்த வீரன் வீழ்த்தப்பட்டான்.

சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி,
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே- புறமுதுகு இடாமல் நெஞ்சு நிமிர்த்திப் போரிட்ட அந்த இளம் வீரனின் தாய்;

சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி– அப்படிச் சிறப்பாகப் போரிட்டு இறந்த, போற்றுதலுக்குரிய தம் மகனின் உயர்ந்த மாண்பைக் கண்டு மகிழ்ந்தார்;

அந்தப் பெருமிதத்தில்- வாடு முலை ஊறிச் சுரந்தன – அவருடைய வாடிய முலைகளிலும் பால் சுரந்ததாம்.

சங்கத் தாய்மாரின் மனத்திண்மையைப் படம்பிடித்துக் காட்டும் பாடல்கள் இவை.

காதலும் வீரமும்தானே சங்கப் பாடல்களின் சாரம்.. முதலில் வீரத்தைப் பார்த்தோம், இனி காதலைப் பார்ப்போம்.

தன் காதலனுடன் சென்றுவிட்ட மகளைப் பிரிந்த தாயின் வாட்டம், திருமணம் முடித்துக் கணவன் வீட்டில் தனியாகப் பொறுப்புக்களை மகள் எப்படி நல்லவண்ணம் நிறைவேற்றுவாளோ என்ற பதைபதைப்பு, பொருள்வளத்துடன் தன் வீட்டில் வளர்ந்த மகள் வசதியின்றித் துன்பப்படுவாளோ என்ற தவிப்பு என்று சங்ககாலத் தாயின் துடிதுடிப்பு நம்மை நெகிழச் செய்யும் அன்புப் போராட்டம்.

நற்றிணையில் ஒரு பாடல்-

அந்தத் தாயின் மகள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள்.


ஒரு மகள் உடையேன் மன்னே, அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்,
இனியே தாங்கு நின் அவலம் என்றிர், அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே, 
உள்ளின் உள்ளம் வேமே, உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

நற்றிணை 184, பாடியர் பெயர் கிடைக்கவில்லை

ஒரு மகள் உடையேன் மன்னே, அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்

எனக்கு இருப்பதோ ஒரே ஒரு மகள்; அவளும் போரில் மிகுந்த வலிமையையும் கூரிய வேலையுமுடைய ஒரு இளைஞனோடு பாலை நிலத்திற்குச் சென்றுவிட்டாள். 

இனியே தாங்கு நின் அவலம் என்றிர், அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே

இனி உன்னுடைய துன்பத்தைத் பொறுத்துக் கொள் என்கிறீர்கள்.  அது எப்படி முடியும் அறிவு உடையவர்களே?  சொல்லுங்கள், என்கிறார் பெண்ணைப் பெற்ற அந்தத் தாய்.

………………………………………………….உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே

மை தீட்டிய கண்ணின் மணியில் வாழும் பாவை வெளியே நடந்து வந்ததுபோல, என்னுடைய அழகிய இளைய மகள் விளையாடிய நீலமணியைப் போன்ற நொச்சி மரத்தையும் திண்ணையையும் பார்க்கும்போதெல்லாம்,

உள்ளின் உள்ளம் வேமே– என் உள்ளம் வெந்து போகும் என்று வருந்துகிறார்.

உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள்
– தன் மகள் பிரிந்து சென்றது, தன் கண்ணின் பாவை தனியே வெளியேறி நடந்தது போலத் தெரிந்ததாம் அந்தத் தாய்க்கு.

எவ்வளவு அழகாக அந்தத் தாயின் உணர்வைச் சொற்களில் வெளிப்படுத்திவிட்டார் ஆசிரியர்!

மற்றோர் இல்லத்தில், காதலனுடன் சென்ற மகள் திரும்பி வந்து அந்தக் காதலனின் வீட்டிலே இருக்கிறாள். தலைவனின் வீட்டில் பெண்ணுக்குச் சிலம்பு கழிக்கும் சடங்கை நடத்திவிட்டார்கள். அதை அறிந்த தாயின் மனத்தவிப்பைக் காட்டுகிறார் இந்த ஐங்குறுநூறு பாடலில், ஆசிரியர் ஓதலாந்தையார்.

நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ, மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?

ஐங்குறுநூறு 399, ஓதலாந்தையார்

நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ

உங்கள் வீட்டில் என் மகளுடைய சிலம்பு கழிக்கும் நோன்பை நடத்திவிட்டீர்கள்.  எங்கள் மனையில் அவளுடைய திருமணத்தை நடத்தலாம் என்று சொன்னால் என்ன? என்று கேட்கிறார்.

யாரிடம் சொன்னால் என்ன?

வென்வேல் மையற விளங்கிய கழலடி

வெற்றி வேலையும் வீரக் கழல்களையும் காலில் அணிந்த,

இது தலைவனைப் புகழ்வதுபோல இருக்கிறது இல்லையா? அடுத்துச் சொல்கிறார்-

பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?– பொய்யில் வல்லவனான அந்த இளைஞனின் தாய்க்கு நீங்கள் சொன்னால்தான் என்ன? எங்கள் மனையில் அவளுடைய திருமணத்தை நடத்தலாம் என்று…. என்று, தன் மகளின் திருமணத்தைத் தங்கள் வீட்டில் நடத்த விழையும் அந்தத் தாய் துடிக்கிறார்.

அடுத்து வரும் சுவையான குறுந்தொகைக் காட்சியில், கணவன் வீட்டுக்கு வாழச் சென்றுவிட்ட மகள் எப்படி மனையறம் பேணுகிறாள் என்று காணத் தவிக்கும் தாயைக் காட்டுகிறார் ஆசிரியர் கூடலூர் கிழார்.

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்,
குவளை உண்கண் குய் புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்,
இனிதெனக் கணவன் உண்டலின், 
நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே. 

குறுந்தொகை 167; பாடியவர்: கூடலூர் கிழார்

தன் மகளும் மருமகனும் இல்லறம் நடத்தும் பாங்கினைக் கண்டுவரச் செவிலித்தாயை அனுப்புகிறார் தலைவியின் அன்னையான நற்றாய். மகள் இருக்கும் ஊருக்குச் சென்று, திரும்பி வரும் செவிலித்தாய், தான் கண்டவற்றை விளக்குகிறார்.

அவர் கண்ட காட்சிதான் என்ன? மகள் அடுக்களையில் சமைத்துக் கொண்டிருந்தாள்.

முளி தயிர் பிசைந்த என்று தொடங்குகிறது பாடல்- உரைய வைத்த தயிர் நன்றாக.. ஏன் அளவிற்கு அதிகமாகவே புளித்துவிட்டது- அந்த முற்றிய தயிரைப் பிசைந்த-

காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்– காந்தள் மலரின் இதழைப் போன்ற தன் மெல்லிய விரல்களை அணிந்திருக்கும் ஆடையில் துடைத்துக் கொண்டாள் அந்தப் பெண்;

குவளை உண்கண் குய் புகை கழும– குவளை மலரைப் போன்ற மையிட்டக் கண்களில் தாளிப்பின் புகையைப் பொறுத்துக் கொண்டு உணவு சமைத்தாள்;

அடுத்து, தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்– தானே கலந்துச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பைக் கணவனுக்குப் பரிமாறினாள்;

புளிப்பு கூடுதலாகிப் போன அந்தக் குழம்பை உண்ட அவள் கணவன் என்ன சொன்னான்? நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த செவிலித்தாய்க்கு என்ன நடக்கப் போகிறதோ என்று முதலில் அச்சமும் படபடப்பும்; அடுத்து, செவிலித்தாய் உரைக்கக் கேட்ட தலைவியின் தாயின் மனப் போராட்டத்தைச் சொல்லவா வேண்டும்?

புளித்தக் குழம்பை உண்ட தலைவன் –

இனிதெனக் கணவன் உண்டலின், 
நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே
. 

நன்றாக, சுவையாக இருக்கிறது என்று அவன் உண்டதால், மலர்ந்தது தலைவியின் முகம்.

அந்தப் பெண்ணின் முக மலர்வினால் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் இரண்டு அன்னையர்- ஒருவர் அவளை ஈன்ற நற்றாய்; மற்றவர் அவளை வளர்த்த செவிலித்தாய்.

மழைச்சாரலென மனம் மயக்கும் தாயன்பின் சாறைப் பிழிந்து சங்க இலக்கியக் காட்சிகள் நம்மைச் சங்க காலத்துக்குக் கொண்டுபோவது உண்மைதானே?

தாய்மை உணர்வையும், தாயின் ஈடில்லா அன்பையும் பொறுமையையும் புரிந்துகொள்ள மொழி தேவையில்லைதான். ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் என் மண்ணில் தாய்மார் எப்படி இருந்தனர்? எப்படி அன்பு பாராட்டினர்? உறவு சார்ந்த சமூகச் சூழல் எப்படி இருந்தது? என்ற பலதரப்பட்ட மரபுசார் தகவல்களுக்கும் என் மொழி எனக்குத் தேவை.

தொன்மையான நம் சமூகத்தின் தொன்மையான மரபுகளைப் புரிந்துகொள்ள- நம் முன்னோர் விட்டுச்சென்ற இலக்கியக் கடிதங்களைப் படித்திட நம் மொழி நமக்குத் தேவை.

நன்றி.

Podcast available on : 

Apple 

Spotify

Google

‘புலம்பெயர்தல்’ – இன்றும் ஒலிக்கும் பண்டைத் தமிழ்ச்சொல்


ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் சந்திக்கிறோம்.. நாடுவிட்டு நாடு பணியிடம் மாறிவந்ததால் தொடர்ந்து பதிவுகளைத் தர இயலாமல் போனது.

இந்த இடமாற்றம் பற்றியதுதான் இன்றைய பதிவு.

இப்படி நாடுவிட்டு நாடுசென்று வாழ்வு அமைத்துக் கொள்வதைத் தமிழில் எப்படிக் குறிக்கிறோம்?  ‘புலம்பெயர்தல்’ என்று சொல்கிறோம். இன்றும், புலம்பெயர்ந்த இந்தியர்கள்/ புலம்பெயர் தமிழர்கள் என்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம் இல்லையா?

பொதுவாக, வெளிநாடுவாழ் இந்தியர்/ அயலகத் தமிழர் ஆகிய சொற்களை அரசுகள் பயன்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது.  ‘புலம்பெயர் தமிழர் நலவாரியம்’ அமைக்கப்படுவது குறித்தும் செய்திகளைச் சமீபத்தில் கண்டோம்.

இன்றும் நம்மிடையே புழங்கிவரும் ‘புலம்பெயர்தல்’ என்ற சொல் என் மனதில் தங்கிப்போனது.

‘புலம்பெயர்தல்’ எவ்வளவு பழமையானது என்பதைவிட, ‘புலம்பெயர்தல்’ என்ற சொல் எவ்வளவு பழமையானது என்று தேடத் தோன்றியது. ஏனென்றால், தமிழர்கள் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்குச் சென்றதும், வேற்றுநாட்டவர் தமிழகத்தில் வாழ்ந்ததும் சங்ககாலம் தொட்டு இருந்துவந்ததுதான். இலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுக்கள் வழியாகவும் இதை அறிந்துகொள்ளமுடிகிறது.

தமிழறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள், ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது’ என்று கூறியதாகக் கட்டுரைகளில் வாசித்தேன். ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு : கோவை-சிறப்பு மலரில், அவருடைய ‘செம்மொழி வரையறைகளும் தமிழும்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையைப் படித்தபோது, செம்மொழிக்கான பண்புகளாக – ‘தொன்மை, தொடர்ச்சி, செழுமை வளம்’ ஆகியவற்றை அவர் குறிப்பிட்டிருந்தது தெரிந்தது.

தமிழ்மொழி இன்றும் நம்மிடையே வழக்கொழியாது இருப்பதற்கு அதன் தொடர்ச்சியே முதன்மைப் பங்கு வகிக்கிறது. அப்படி, தொடர்ந்து நாம் பயன்படுத்தும் எண்ணிலடங்காச் சொற்களுள் ‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லின் தொன்மையை இன்று பார்ப்போம்.

மக்கள், தாம் வாழுமிடம்விட்டு வேறோர் இடம் புலம்பெயர்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கல்வி, வேலை, வணிகம், போர் என்று பட்டியலிடலாம். தொல்காப்பியரும்-

‘ஓதல் பகையே தூதிவைப் பிரிவே’ 

என்று பிரிவு ஏற்படும் சூழல்களைக் காட்டுகிறார்.

நாம் இங்கு பார்க்கப்போவது, சங்கப் பாடல்களில் ‘புலம்பெயர்தல்’ என்னும் சொல்லாட்சி எப்படிப்பட்ட சூழல்களில் எல்லாம் வருகிறது என்பதைத்தான்.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் ஒரு பாடல். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பொருள் ஈட்டுவதற்காகப் பிரியும் தலைவனிடம் தோழி, பிரிவின் துன்பம் குறித்துக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

தன் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து

பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி

நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி

அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும் இன்னாது ஆகும்

(நற்றிணை 183)

என்பன முதல் சில வரிகள்.

மருத நிலத்து உமணர் – அதாவது உப்பு வணிகர்கள், தம் நாட்டில் விளைந்த நெல்லை, கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தில் உள்ள உப்பிற்கு விலையாகக் கொடுப்பார்கள். அதாவது, நெல்லை உப்புக்குப் பண்டமாற்றாகக் கொடுத்து வாங்குவார்கள்.  உப்பு வாணிபத்தில் ஈடுபடும் உமணர்,  தம் சுற்றத்தாரோடு நிலவுபோன்ற வெள்ளை மணலில், நீண்ட வழித்தடத்தில் வண்டிகளைக் கட்டிக்கொண்டு, நிலம்விட்டு மற்ற நிலத்திற்குப் புலம்பெயர்ந்துச் செல்வார்களாம். அப்படி அவர்கள் புலம்பெயர்ந்து செல்வதுகண்டு, அந்த ஊரில் இருப்பவர்கள் வருந்துவார்களாம். அதுபோல, உன் பிரிவால் தலைவி துன்பப்படுவாள் என்று தோழி கூறுகிறாள். 

ஒக்கலொடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும் இன்னாது ஆகும்

சுற்றத்தாரோடு புலம்பெயர்ந்து உமணர் போவது துன்பம் தரும், எனுமிடத்தில் ‘புலம்பெயர்தல்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து வரும் அகநானூற்றுப் பாடலைப் பாருங்கள்.

வேம்பற்றூர் குமரனார் எழுதிய பாடல், தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, தன் தோழிக்குச் சொல்வதாக அமைகிறது பாடல்.

முனை புலம்பெயர்த்த புல்லென் மன்றத்துப்

பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய்

வினை அழி பாவையின் உலறி,

மனை ஒழிந்து இருத்தல் வல்லுவோர்க்கே

(அகநானூறு 157)

என்று முடிகிறது பாடல். தலைவன் சென்றுள்ள கொடிய வழியைப் பாடலின் தொடக்க வரிகள் விளக்குகின்றன. பிரிந்து செல்லும் முன் தலைவன் தலைவிக்கு ஊக்கம்தரும் சொற்களைச் சொல்லிச் சென்றிருக்கிறான். அதைத் தலைவி தோழிக்குச் சொல்கிறாள்.

அச்சம் தரும் வழியில் தனியாகச் சென்ற நம் தலைவர் என் மனதிற்கு ஆறுதல் அளிக்க, முன்பெல்லாம் என்ன சொல்லுவார் தெரியுமா?

‘போர் நிகழ்கிறது. ஊரில் நலமாக வாழ்ந்தவர்கள் எல்லாம் தம் இடம் பொருள் இழந்து பாதுகாப்பான இருப்பிடம் நோக்கிப் புலம்பெயர்ந்துப் போய்விட்டனர். அதனால் பொலிவிழந்து காணப்பட்டது ஊர்மன்றம். எல்லோரும் புலம்பெயர்ந்து போன பிறகும், ஊர்மன்றத்தில் வைக்கப்பட்ட பெண்சிலை ஒன்று இருக்கும். அது மழை பெய்யும்போது நெகிழ்ந்தும், வெய்யில் காய்கையில் வெளுத்துப்போயும் தனியாக நிற்கும். 

அந்த மன்றத்துப் பொலிவிழந்த பாவைபோல, வீட்டில் தனித்திருக்க யாரால் முடியும்? உன்னைப் போன்று மனவலிமை உடையவர்களால் மட்டும்தான் அது முடியும்’, என்று தலைவர் என்னிடம் சொல்வார். ஆனாலும் அவரைப் பிரிந்து தனியாக நாட்களை என்னால் கழிக்க இயலவில்லை, என்று தலைவி புலம்புகிறாள்.

முனை புலம்பெயர்த்த புல்லென்மன்றத்து’

மக்கள் புலம்பெயர்ந்து சென்றதால் பொலிவிழந்த மன்றம் என்கிறது பாடல்.

புலம்பெயர்தலைத் தேடப் போய், பாடலின் இனிமையில் மயங்கிவிட்டோம் பாருங்கள்.

மற்றுமோர் அகநானூற்று பாடல், மாமூலனார் பாடியது. 

கோடு உயர் பிறங்கல் குன்றுபல நீந்தி,
வேறுபுலம்படர்ந்த வினைதரல் உள்ளத்து
ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய

(அகநானூறு 393)
என்று தொடங்கும் பாடல் அது.

இங்கே, புல்லி என்ற மன்னன் ஆளுகின்ற வேங்கடமலை பற்றிய வண்ணனையைக் காணமுடிகிறது.

வேங்கட மலையின் வளமும், நாட்டுப்புற வாழ்வும் தனியாக மற்றொரு பதிவில் பார்க்கவேண்டிய தகவல்கள். 

கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அதாவது – உயர்ந்த சிகரங்களையுடைய, பாறைகள் நிறைந்த குன்றுகள் பலவற்றைக் கடந்து சென்று, 

வேறுபுலம்படர்ந்த வினைதரல் உள்ளத்து- அதாவது – வேறொரு நாட்டில் பொருள் தேடும் எண்ணத்தோடு – 

புலம்பெயர்ந்து செல்லும் தலைவன், உன்னை மறவாது திரும்பி வருவான், என்று பிரிவினால் வருந்தும் தலைவிக்குத் தோழி கூறுவதாக அமைகிறது பாடல்.

இதுவரை நாம் படித்த எட்டுத்தொகைப் பாடல்கள் மூன்று. இரண்டில் பொருள் ஈட்டுவதற்காக இடம் மாறுவது ‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லால் காட்டப்பட்டது. ஒன்றில், போரினால் ‘புலம்பெயர்ந்ததைப்’ பார்க்கமுடிந்தது.

இன்றும் புழக்கத்தில் உள்ள ‘புலம்பெயர்தல்’ என்ற சொல், பத்துப்பாட்டில் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது?

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடை, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடியது.

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇப்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இன நிரை வேறுபுலம்பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி

(நெடுநல்வாடை 1-5)

என்று பாடலின் தொடக்கமே, வெள்ளப் பெருக்கால் தம் இடத்தைவிட்டு வேறோர் இடம் நகரும் இடையர்களைக் காட்டுகிறது.

பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்-

வானம் புதிய மழையை அளவில்லாது பொழிந்ததை வெறுத்த வளைந்த கோல்களையுடைய இடையர், 

ஏறுடை இன நிரை வேறுபுலம்பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி

தம் காளைகளை வேறு நிலங்களில் மேயவிட்டு, புலம்பெயர்ந்து, தனிமையில் கலங்கித் தவித்தனராம்.


அடுத்து, மலைபடுகடாம் – ‘புலம்பெயர்வைப்’ பயன்படுத்துகிறது. 

மலைபடுகடாம் ‘கூத்தராற்றுப்படை’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். நன்னன் வேண்மான் என்ற மன்னனின் நாட்டுச்சிறப்பு, போர்த்திறன், மலைவளம் போன்றவை விவரிக்கப்படுகின்றன மலைபடுகடாமில்.

ஆற்றுப்படை நூல் இல்லையா? ஒரு பாணர் வறுமையில் வாடும் மற்றொரு பாணரை மன்னரிடம் சென்று, தாம் பெற்றதுபோல் செல்வத்தைப் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார். தம் இடத்தைவிட்டுப் பிரிந்து, செல்வம் பெற்றுவரும் பொருட்டு, புலம்பெயர்ந்து மன்னரை நாடிச் செல்வார்கள் கலைஞர்களான கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியரும்.

பற்பல இசைக்கருவிகள் குறித்தும்,  எள், இஞ்சி, அவரை, தயிர், நாவல் பழம், வெண்கடுகு போன்ற உணவுப் பொருட்கள் குறித்தும் தகவல்கள் நூலில் காணமுடிகிறது.

மன்னன் நன்னனின் மலைநாட்டை நோக்கிச் செல்லும் வழித்தடம் எப்படி இருக்கும்? ஒரு சிறிய எடுத்துக்காட்டைப் பாருங்கள்.

பெரிய பெரிய அரண்கள் இருக்கும். பின்னி வைத்ததுபோல் கொடிகள் நிறைந்த சிறுகாட்டைக் கடக்க வேண்டும். யானைகள் போரிடுவதைப் போன்று நெருங்கிக் கிடக்கும் பாறைகள் நிறைந்த மழைக்காடுகள் இருக்குமாம். 

அப்படிப்பட்ட பாதையைக் கடந்து செல்லும்போது – 

பண்டு நற்கு அறியாப் புலம்பெயர்புதுவிர்

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்

(மலைபடுகடாம் 392 – 393)

என்று அறிவுறுத்துகிறார் ஆற்றுப்படுத்தும் பாணர்.

பண்டு நற்கு அறியாப் புலம்பெயர்புதுவிர்

முன்பு பாதையை நன்கு அறியாததால் வழிதவறிப் போன – புலம்பெயர்ந்த புதியவர்களான நீங்கள், (புலம்பெயர்புதுவிர்)

மறுபடி அதே சரியான இடத்திற்கு வந்துவிட்டால், அப்படியே சென்றுவிடாதீர்கள்.

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்-

குழப்பத்தைக் கொடுத்த அந்தச் சந்தைத் துடைத்து, அடுத்து அவ்வழியில் வருபவர்களுக்கு உதவியாக, ஊகம்புல்லைக் கட்டி வையுங்கள், என்கிறார் ஆற்றுப்படுத்தும் பாணர்.

அடுத்து, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலையைப் பார்ப்போம். பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. இதே ஆசிரியர், பத்துப்பாட்டு நூல்களில் மற்றொன்றான பெரும்பாணாற்றுப்படையையும் பாடியுள்ளார். 

காவிரியின் சிறப்பு, சோழநாட்டின் பெருவளம், காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, இரவுநேர நிகழ்ச்சிகள், ஏற்றுமதி, இறக்குமதி, விழா நீங்காக் கடைவீதி, ஊரில் வாழும் உழவர்கள், வணிகர்கள், பல நாட்டினர் ஒன்றுகூடி வாழும் பாங்கு, என்று பல்வேறு வரலாற்றுச் செய்திகளைக் கண்முன் காட்டும் நூல் பட்டினப்பாலை. 

வணிகர் சிறப்பைச் சொல்லுகையில் – 

நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்,
கொள்வதூஉம் மிகை கொடாது,  கொடுப்பதூஉங் குறைகொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி துவன்று இருக்கை

(பட்டினப்பாலை 207-212)

நடுநிலைகொண்ட நல்ல நெஞ்சினர், பழிச்சொல்லுக்கு அஞ்சி உண்மை பேசினர், தம் பொருட்களையும் பிறர் பொருட்களையும் ஒன்றாகக் கருதினர், வாங்கியவற்றைக் கூடுதலாகக் கொள்ளாமல் கொடுத்தவற்றைக் குறைவாகக் கொடுக்காமல், பலப்பலப் பண்டங்களை விலைப்பேசி விற்கும், வளம் சேர்க்கும் தொன்மையான வணிகர் இருப்பிடம், என்று மிக அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.

காவிரிப்பட்டினத்தின் வணிகர் பகுதி எப்படி இருந்ததாம்?

பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர் முதுவாய் ஒக்கல்,
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள்கலந்துஇனிதுஉறையும்முட்டாச் சிறப்பின் பட்டினம் 

(பட்டினப்பாலை 213-218)

வெவ்வேறு  நாடுகளில் பலப்பலக் குழுக்களாக வாழ்ந்து பழகிய அறிவார்ந்த சுற்றத்தார் ஒன்றுகூடி, திருவிழாக்கோலம் பூண்ட தொன்மையான ஊர்போல் காட்சி அளித்ததாம் காவிரிப்பூம்பட்டினம் .

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் 

பழியில்லா நாடுகளிலிருந்து, பலப்பல மொழிகள் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து வணிகத்தின் பொருட்டு, காவிரிப்பூம்பட்டினத்தில் இனிமையாகக் கலந்து வாழ்ந்தனராம். அத்தகைய குறையில்லாச் சிறப்புடையது புகார் நகரம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பிழைப்புத் தேடி, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர், அதுவும் இணக்கமாக வாழ்ந்தனர் என்ற செய்தி நமக்குத் தெரியவருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட, தமிழகத்தின் வரலாற்றுச் செய்தி இது.

‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லும் உண்டு; பிறநாட்டவருடன் கூடிப் பன்னாட்டுச் சமூகமாக  அன்றே வாழ்ந்த சான்றும் உண்டு.

சங்ககாலத்தை அடுத்துவரும் சிலப்பதிகாரத்தில், பட்டினப்பாலையை ஒட்டிய வரிகளைக் காணமுடிகிறது.

புகார் காண்டத்தில் இந்திரவிழவு ஊரெடுத்த காதையில், புகார் நகரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரு பிரிவுகளாக இருந்ததை விளக்குகிறார் ஆசிரியர் இளங்கோவடிகள்.

மருவூர்ப்பாக்கத்துக் காட்சிகளைப் பாருங்கள் – 

வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கண் காலதர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்                     

(சிலப்பதிகாரம், புகார் காண்டம், இந்திரவிழவு ஊரெடுத்த காதை, 7-10)

திறந்தநிலை மேல்மாடங்களும், வியத்தகு பண்டகசாலைகள் அல்லது கிடங்குகளும், மானின் கண்போன்ற அகண்ட சாளரங்கள் கொண்ட மாளிகைகளும் இருந்தன. காண்போர் கண்களை அகலவிடாமல் கட்டிப்போடும் அழகிய யவனர் இருப்பிடங்களும் புகார் நகரில் இருந்தன.

அதோடு, 

கலம்தரு திருவின் புலம்பெயர்மாக்கள்

கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்

(சிலப்பதிகாரம், புகார் காண்டம், இந்திரவிழவு ஊரெடுத்த காதை, 11-12)

கடல் வழியாகச் செல்லும் கலங்களில் பலப்பல நாடுகளிலிருந்து பொருட்களைக் கொண்டு வருவோரும் கொண்டு செல்வோருமாக  – புலம்பெயர்ந்துப் பற்பல நாட்டவர் செல்வம் கொழிக்கக் காவிரிப்பூம்பட்டினத்தில் கலந்து மகிழ்ந்து வாழ்ந்த கடலோரப் பகுதிகளை இளங்கோவடிகள் கண்முன் நிறுத்துகிறார். ‘புலம்பெயர் மாக்கள்’ என்று நாம் தேடும் சொல்லையே பயன்படுத்துகிறார்.

புகார் நகரம் குறித்த- 

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம்பெயர்மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் 

என்னும் பட்டினப்பாலை வரிகளும்

கலம்தரு திருவின் புலம்பெயர்மாக்கள் கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்

என்னும் சிலப்பதிகார வரிகளும் எவ்வளவு ஒத்திருக்கின்றன பாருங்கள். 

இப்படி, பல நாட்டவருடன் பரந்த மனத்துடன் கூடி வாழ்ந்த பன்மைச் சமூகமாகத்தான் பண்டைத் தமிழகத்தை இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். 

பட்டினப்பாலை தவிர்த்த சங்க இலக்கியங்களில் – 

  • நற்றிணையில் மருத நிலத்து உமணர் நெய்தல் நிலத்திற்குப் புலம் பெயர்ந்தனர்
  • அகநானூறில் ஒரு பாடலில் போரால் புலம் பெயர்ந்தனர்; மற்றொரு பாடலில் பொருளீட்டப் புலம் பெயர்ந்தனர்
  • நெடுநல்வாடையில் வெள்ளப் பெருக்கால் புலம் பெயர்ந்தனர்
  • மலைபடுகடாமில் பொருள் வேண்டி மன்னரிடம் செல்வோர் புலம் பெயர்ந்தனர்

என்று பார்த்தோம். 

பட்டினப்பாலையிலும் சங்ககாலத்துக்குப் பின்வந்த சிலம்பிலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வாணிபம் புலம் பெயர்தலுக்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. குறிப்பாக, பன்னாட்டவர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்த மேம்பட்ட சமூகச்சூழலைப் பெருமிதத்துடன் அறிந்துகொள்கிறோம்.

ஆக, சங்ககால நூல்களிலும் காப்பியக்காலச் சிலப்பதிகாரத்திலும் இன்றும் வழக்கிலுள்ள ‘புலம்பெயர்தல்’ எனும் சொல்லே இடம் பெயர்தலுக்குப் பயன்பட்டுள்ளது.

எனவே, தமிழ் இன்னும் வாழும் மொழியாக இருப்பது அதன் தொன்மையால் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியாலும்தான். அந்தத் தொடர்ச்சிக்குத் தேவை நாம் தமிழ்மொழியை வேற்றுமொழிக் கலப்பில்லாமல் பயன்படுத்துவதுதான்.

நன்றி.


Podcast available on:   Apple   Google    Spotify