வள்ளுவம் போற்றுவோம்; மக்களைப் பேணுவோம்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்   
    (மக்கட்பேறு 04)

தம்முடைய மக்களின் சிறு கைகளால் பிசைந்து கூழாக்கப்பட்ட உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிடச் சுவையானதாம்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு 
  (மக்கட்பேறு 05 )

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அவர்களின் மழலைமொழி கேட்பது, செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
     (மக்கட்பேறு 06)

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை உணராதவரே, குழலின் இசை இனிமையானது என்றும் யாழின் இசை இனிமையானது என்றும் கூறுவர்.

இவை, அறத்துப்பால் – இல்லறவியலில் – ‘புதல்வரைப் பெறுதல்’ அல்லது ‘மக்கட் பேறு’ என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் மழலைச் செல்வங்களைப் பற்றிக் கூறுவது.

அதிகாரத்தின் முதல் குறளிலேயே, இவ்வுலகில் அடைகிற பேறுகளிலெல்லாம் சிறந்தது மக்களைப் பெறுவது என்று தெளிவுபடுத்தி விடுகிறார்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற  
       (மக்கட்பேறு 01)

என்கிறார்.

பிள்ளைகள் மிகச்சிறந்த செல்வங்கள்தான்…. ஐயமில்லை. ஆனால், எப்படிப்பட்ட பிள்ளைகளால் பெற்றோர் பெரும்பேறுடையவர்கள் ஆகிறார்கள்?

அறிவறிந்த மக்கட்பேறு என்று உரைக்கிறார் வள்ளுவர்.

அறிவில் சிறந்த பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லையாம்.

சரி, ‘பெற்றோர்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?

செல்வம் பெற்றோர்; கல்வி பெற்றோர்; வலிமை பெற்றோர்; பெரும்பதவி பெற்றோர்; அழகு பெற்றோர்; நிம்மதி பெற்றோர்; இன்பம் பெற்றோர் – என்று நீண்ட பட்டியலைத் தரலாம்.

ஆனால், ‘பெற்றோர்’ என்ற சொல் குறிப்பது மக்களைப் பெற்றவரைத்தானே!!

அறிவறிந்த மக்கட்பேறு என்று வள்ளுவர் சொல்லிவிட்டார்;  அவர்களை அறிவறிந்தவர்களாக, நன்மக்களாக வளர்ப்பது எப்படிபட்ட பெரும் பொறுப்பு??

பெற்றவராக, குறிப்பாகத் தாயாக- திருக்குறளை நான் எப்படி பார்க்கிறேன்? சிறுவயதுமுதல் குழந்தைகளுக்குப் புகட்டவேண்டிய பண்பாட்டுப் பாடங்களை உள்ளங்கை நெல்லிக்கனியென வள்ளுவம் உரைப்பதைத்தான் இன்று பகிர இருக்கிறேன்.

திருக்குறள் ஒரு கடல். அதில் மூழ்கி முத்தெடுக்க ஒரு பிறவி போதாது. ஒவ்வொரு வயதுக்கும், ஒவ்வொரு பணிக்கும், ஏன் பிணிக்கும் ஏற்ற தகவல் உண்டு திருக்குறளில். வாழ்வின் பல்வேறு சூழல்களில் நம்மோடு பயணித்து, தோள் கொடுக்கும் தோழன் வள்ளுவர் என்றே சொல்லலாம்.  

குழந்தை வளர்ப்பில் நான் கற்றுக்கொண்ட குறள்கள் என்னென்ன? குழந்தைக்குக் கற்றுக்கொடுத்த குறள்கள் என்னென்ன? அடிப்படை வாழ்க்கைப் பண்புகளை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவும், என்னைச் வளர்த்துக் கொள்ளவும் நான் பயன்படுத்திய குறள்கள் எவை? ‘பெற்றோர்’ என்ற பொறுப்பில் கடந்துவந்த சில ஆண்டுகளை, பின்னோக்கிச் சென்றெண்ணிப் பார்த்தேன்..

அதன் விளைவுதான் இந்தப் பகிர்வு.

முன்பெல்லாம், திருக்குறள் அதிகாரங்களைச் சொல்லிக் கொடுப்பதும், குடும்பமாகக் குறள்களை மனப்பாடம் செய்து சொல்லிப் பார்ப்பதும் விளையாட்டுபோல் செய்து கொண்டிருந்தோம்.

அடுத்த நிலையில், நமக்குப் பணிகள் கூடிப்போக, பிள்ளை பெரிய வகுப்புக்குள் செல்ல, மூன்று மூன்று குறள்களாக மனதில் பதிய வைக்க முயற்சித்தோம். சுவற்றில் சார்த்திய, அளவில் பெரிய வெண்பலகையில் எழுதிவைத்து, மூன்று குறள்களைப் பொருளோடு புரிந்துகொண்டு, அவ்வப்போது மறுபயிற்சி செய்தோம்.

இப்போது இந்த மூன்று குறள் பயிற்சிதான் தொடர்கிறது.

சரி, வெவ்வேறு காலக்கட்டங்களில் கற்றுக்கொண்ட, கற்றுக்கொடுத்த குறள்களைப் பார்ப்போமா?

முதல் இரு அதிகாரங்களான கடவுள் வாழ்த்தும் வான்சிறப்பும் கற்றுக்கொடுத்த பிறகு, வாழ்வின் இன்றியமையாத ஒன்றை விளக்கும் அதிகாரத்திற்குத் தாவினேன்- அது அன்புடைமை.

கொஞ்சி அணைத்து மகிழ்ந்தவாறு நாங்கள் கற்றது –

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்  
     (அன்புடைமை 01 )

உள்ளத்து அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க இயலுமா? நம் அன்புக்குரியவர்கள் துன்பப்படுவதைக் காணும்போது, கண்ணீர்த்துளியாக அந்த அன்பு வெளிப்படும், என்கிறார் வள்ளுவர்.

அன்பின் சிறப்பைச் சொல்லும் மற்றொரு குறள்-

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு  
    (அன்புடைமை 10)

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும். அன்பு இல்லாதவர்களின் உடம்பு- எலும்பைத் தோல்போர்த்திய வெற்றுடம்பே ஆகுமாம்.

நாங்கள் சொல்லிக் கொடுத்த முதல்சில எண்ணங்களில், ‘அச்சம் தவிர்’ என்பது ஒன்று. ஆனால், ஓர் எண்ணத்திற்கு மறுபக்கம் உண்டு என்பதைச் சிந்திக்கச் செய்பவர் வள்ளுவர். அச்சம் தவிர்த்தால்மட்டும் போதாது; அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சுவதே நலம் பயக்கும், என்கிறார் இந்தக் குறளில்.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
       (அறிவுடைமை 08)

அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமை, அஞ்ச வேண்டுவனவற்றுக்கு அஞ்சுவதே அறிவுடையவரின் செயலாகும், என்பது இதன் பொருள்.

இதையே குழந்தைக்குப் பலவிதமாய்ச் சொல்லிக் கொடுக்கையில்- தவறு செய்வதற்கு அஞ்ச வேண்டும், அப்படியே நிகழ்ந்தாலும் பெற்றோரிடம் மறைப்பது தவறு என்று சொல்லிக் கொடுத்தேன்.

அதன் தொடர்ச்சியாக, பொய் என்னும் தவறை ஏன் செய்யக்கூடாது? என்ற கேள்வி வந்து விழுந்தது….பொய் சொன்னால் என்ன ஆகும்?

எனக்கு மிகவும் பிடித்த குறள்களுள் இதுவும் ஒன்று.

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
     (வாய்மை 03)

ஒருவன் தன் நெஞ்சம் அறிந்து பொய்ச் சொல்லக்கூடாது, அப்படிப் பொய் சொன்னால் தன் நெஞ்சமே தன்னை வருத்தும் என்கிறார் வள்ளுவர். இது எவ்வளவு உண்மை!!

அடுத்து வரும் குறள்கள், பள்ளிப் பருவத்தில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டவை. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கற்றல் எப்படி இருக்க வேண்டும்?

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக    
   (கல்வி 01)

கற்பவற்றை குறைகள் இல்லாதவண்ணம் கற்றுக்கொள்ள வேண்டும்; கற்றபின் அதன்படி நடக்கவும் வேண்டும். சரிதானே!!

வாழ்வில் உயர்வு காண்பது எப்படி?

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
      (ஊக்கமுடைமை 05)

 நீர்ப்பூக்களின் காம்பின் நீளம் அவை நிற்கும் நீரின் அளவைப் பொறுத்தே இருக்கும்; அதுபோல, மக்களின் ஊக்கத்தின் அளவைப் பொறுத்ததே வாழ்க்கையின் உயர்வு.

ஒழுக்கம் வாழ்வில் எவ்வளவு இன்றியமையாதது?

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும் (ஒழுக்கமுடைமை 01)

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தரும் என்பதால், அது உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

அடுத்து, நாம் எப்படிப் பேசவேண்டும்?

இனிமையாகப் பேசுதல் பற்றிச் சொல்லித் தருகையில் வந்த குறள்கள் இவை –

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய்கவர்ந் தற்று   (இனியவைகூறல் 10)

இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிடுத்து கடுமையான சொற்களைக் கூறுதல், கனிகள் இருக்கும்போது அவற்றைவிட்டுவிட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது…

இது எவ்வளவு பொருள்பொதிந்தது?

இனிய சொல் பற்றிப் பேசினோம்.. சிறந்த சொல் எது?

எனக்கு மிகவும் பிடித்த குறள்களுள் மற்றொன்று- 

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து    (சொல்வன்மை 05)

ஒரு சொல்லைச் சொல்லும் முன்பு, அந்தச் சொல்லைக் காட்டிலும் சிறந்த சொல் இல்லை என்பதை அறிந்தபின்னரே அதைப் பயன்படுத்த வேண்டுமாம்.

இந்தக் கலையில் தேர்ந்ததால்தான் வள்ளுவர் நமக்குத் திருக்குறள் என்னும் பெட்டகத்தை வழங்கினார்.

இனிமையாகப் பேச வேண்டும், மிகச் சரியான சொற்களையே பயன்படுத்த வேண்டும், அப்போ.. பேசிக்கொண்டே இருக்கலாமா? அதுதான் இல்லை.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு    (அடக்கமுடைமை 07)

என்று தலையில் குட்டுகிறார் வள்ளுவர்.

எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவை அடக்கிக் காக்கவேண்டும். இல்லையெனில், அவரவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

எதற்கு அஞ்ச வேண்டும் எதற்கு அஞ்ச வேண்டாம்; இனிமையாகப் பேச வேண்டும் ஆனால், நாவடக்கம் தேவை என்று சொன்ன வள்ளுவர், எதை மறக்கக்கூடாது எதை மறந்தால் நல்லது என்பதையும் விளக்கிவிடுகிறார்-

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று      (செய்ந்நன்றி அறிதல் 08)

ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்துவிடுவதே அறம் ஆகும்.

ஆக, தீயவற்றை- அது நம்மால் விளைந்ததோ பிறரால் நிகழ்ந்ததோ-  அப்போதே மறந்துவிடவேண்டுமென்று கூறுகிறார்.

குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் மறக்கக்கூடாத பண்புகளில் ஒன்று- நன்றி.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது     (செய்ந்நன்றி அறிதல் 02)

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

வீட்டிலேயே எடுத்துக்கொள்வோம்.  தண்ணீர் தருவது, அடுப்பை அணைப்பது, மின்விசிறி சுழலவிடுவது, அவசரமாகக் கிளம்புகையில் தேவையானவற்றை எடுத்துத் தருவது.. என்று எண்ணற்ற, சிறுசிறு வேலைகள்மூலம் பிள்ளைகள் நமக்குச் செய்யும் இந்தக் ‘காலத்தினால் செய்த உதவிக்கு’, நாம் அவர்களை நன்றி பாராட்ட மறக்கவே கூடாது.

பெரியவர்கள் உரைக்கும் நன்றி, பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை மட்டும் ஏற்படுத்தாது, தம் நற்செயலுக்குக் கிடைத்த மதிப்பால் வரும் பெருமை, பிறருக்கு உதவும் மனப்பாங்கையும் ஏற்படுத்தும். ஆக, அந்த நன்றியால் பிள்ளைக்கு ஏற்படும் ஊக்கம், சமூகத்தில் உரிய நேரத்தில் உதவும் பாங்கையும், உரிய நேரத்தில் தமக்கு உதவியவரை மதிக்கும் மனதையும் பிள்ளைகளுக்குத் தரும் இல்லையா? 

ஈகை – அதாவது வரியவருக்கு/இல்லாதவருக்குக் கொடுத்து உதவுதல் இன்றியமையாத பண்புகளுள் ஒன்றல்லவா? அதையே வள்ளுவர் தம் தெளிவான வாக்கால் எப்படி உரைக்கிறார் பாருங்கள்.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்         (ஈகை 05)

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்- அதாவது- உண்ணாநோன்பு இருப்பவர்களுடைய ஆற்றல்- தம் பசியைப் பொறுத்துக்கொள்வது.

ஆனால், அந்த வலிமையைவிட/ஆற்றலைவிடச் சிறந்தது எது? பசியால் வாடும் மற்றவருடைய பசியை மாற்றுகின்ற ஆற்றல் இருக்கிறதே.. அதுவே சிறந்த ஆற்றல். உண்ணாநோன்பு இருப்பவரின் ஆற்றல் அதற்கு அடுத்த நிலையில்தான் என்கிறார் வள்ளுவர்.

இதுவரை, பெற்றோராக எங்கள் நோக்கில், பிள்ளைக்குத் தரவேண்டிய வாழ்க்கைப் பண்புகள் சிலவற்றை, வள்ளுவம் வாயிலாகத் தமிழோடு நாங்கள் கலந்து தரமுயன்றதைப் பகிர்ந்து கொண்டேன்.

‘அறிவறிந்த மக்கட்பேறு’ என்று அறிவில் சிறந்த பிள்ளைகளைப் பற்றி வள்ளுவர் கூறினார் என்று பகிர்வின் தொடக்கத்தில் பார்த்தோம் இல்லையா?

வள்ளுவர், பிள்ளைகள் அறிவில் சிறந்தவர்களாய் இருக்கவேண்டும் என்பதை எவ்வளவு வலியுறுத்துகிறார் தெரியுமா?

முதலில், மக்களை அறிவில் சிறந்தவர்களாக ஆக்கும் சூழலை அளிப்பது பெற்றோர் கடமைதானே?

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்    (மக்கட்பேறு 07)

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க உதவி, கற்றவர் அவையில் முந்தியிருக்கும்படிச் செய்வது.

அப்படி அறிவுடையவர்களாகப் பிள்ளைகள் விளங்குவதன் பயன் என்ன?

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது    (மக்கட்பேறு 08)

என்கிறார்.

தம் மக்கள் அறிவுடைமை, மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் தம்மின் இனிது, என்று பொருள்கொள்ள வேண்டும் என்று பெரும்பான்மையான  உரையாசிரியர்கள் கூறுகிறார்கள்.

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட, உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

உண்மைதானே, அறிவுடையவராகப் பிள்ளைகள் திகழ்வது சமூகத்திற்கே நன்மை பயக்கும் அல்லவா?

கல்விக்கும், அறிவுக்கும், சான்றோராக விளங்குவதற்கும், தமிழ்ச் சமூகம் அன்றிலிருந்து இன்றுவரை முதன்மைநிலை அளித்துவரும் தொடர்ச்சியை இது காட்டுகிறது.

இதற்கு அடுத்த நிலையில்,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்     (மக்கட்பேறு 09)

தன் மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோன் என அறிவுடையோர் சொல்லக் கேட்க தாய், பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியை விடப் பெருமகிழ்ச்சி அடைவாள்.

கல்வியில் சிறந்து விளங்கும் குழந்தைகள், அளவிட இயலாத மகிழ்வைத் தாய்க்குத் தருகிறார்கள். அந்த அளவிட இயலாத மகிழ்ச்சியை வள்ளுவர் ‘ஈன்ற பொழுதின்’ என்ற சொற்றொடரில் தந்து மனமுருகச் செய்கிறார்.

சரி, பிள்ளைகளின் பொறுப்புதான் என்ன?

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்      (மக்கட்பேறு 10)

மகனோ மகளோ தம் பெற்றோருக்குச் செய்யத்தக்க கைம்மாறு, இவர்களைப் பிள்ளைகளாகப் பெற என்ன தவம் செய்தாரோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் வகையில் வாழ்வில் உயர்வதுதான்.

பதின்பருவத்தில் பிள்ளைகள் இருக்கும் வீட்டில், இந்த மூன்று குறள்களை எழுதி வைத்தால் – பெற்றோர் பிள்ளைகளிடையே பிணைப்பு பெருகும், பொறுப்பும் புரியும் என்று நினைக்கிறேன். இது என் பார்வை.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்

‘மக்கட் பேறு’ அதிகாரத்தில் வள்ளுவர் சொன்னவற்றை இப்போது முழுமையாகப் பார்ப்போம்-

பிள்ளைகளின் மெய்த்தீண்டல் இன்பம், சொல்கேட்டல் இன்பம் என்றார். சரி, குழந்தைகளாகவே கொஞ்சிக் களித்தால் வாழ்வு சிறக்குமா?

அடுத்த நிலைக்கு உயரவேண்டும் இல்லையா?

அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்;

அதற்குரிய சூழலைப் பெற்றோர் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.

அப்படி, அறிவறிந்த மக்களாய்ப் பிள்ளைகள் திகழும்போது, ஈன்ற பொழுதினும் மகிழ்வடைகிறது பெற்றவர் மனது, என்று குறித்தார்.

இத்தனையையும் சொன்ன வள்ளுவர், இனிப்புத் தமிழ்க் கலந்து நடைமுறை நோக்கில் ஓர் எண்ணத்தை அழுத்தமாக உரைக்கிறார்.

இந்தக் குறள் வள்ளுவம் எக்காலத்திற்கும் பொருந்தும்.. உலகத்து மாந்தர்க்கெல்லாம் பொருந்தும்…. ‘பொதுமுறை’ என்பதைக் காட்டுவது –

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்      (மக்கட்பேறு 03)

தம்மக்களே தம்முடைய செல்வம், அவர்கள் நாம் பெற்ற பேறு, என்று சொல்வதெல்லாம் சரிதான். சொல்லிக்கொண்டே, கொஞ்சி மகிழ்ந்துகொண்டே, வசதிகள் கொடுத்துக்கொண்டே இருந்தால் போதுமா? அந்த மக்களுடைய செல்வம், அவரவருடைய செயல்கள்/முயற்சிகளின்  பயனால்தான் வந்து சேரும், என்கிறார்.

நம் அடுத்தத் தலைமுறைக்கு-

தேவையென்று நாம் நினைப்பவற்றை, தேவையென்று அவர்கள் கேட்பவற்றை, நாம் சிறார்களாய் இருந்தபோது நம் மனம்மயங்கிக் கிடைக்காதவற்றை – என்று பலவற்றை அவரவர் வசதிக்கேற்பத் தந்து வளர்க்கிறோம். கட்டுப்பாடுகளும் விதிக்கிறோம்.  

நற்பண்புகளும், நல்லொழுக்கமும், பெற்றோர் அரவணைப்பும் பொதுவானவை.

வசதியான வளர்ப்புச் சூழலும், அதற்கேற்ற வாய்ப்புக்களும் கூடிய வாழ்க்கை சிலருக்கு;

ஆனால், கடினச் சூழலும், போராட்டங்களும் கூடிய வாழ்க்கை வேறு பலருக்கு.

பெற்றோர் கொடுப்பது எதுவென்றாலும், அவரவர் மேன்மை அவரவர் செயல்கள்/முயற்சிகளால்தான் –  அயரா உழைப்பும், தளராக் குறிக்கோளும், சோர்வில்லா எண்ணங்களும், அடங்கா வேட்கையும், அகலா ஊக்கமும், கவனம் சிதறா ஆற்றலும் கொண்டு, தம் வாழ்வுப் பாதையில் உயர்வு காண்பது பிள்ளைகள் கையில்தான் உள்ளது.

பிள்ளைகள் வாழ்வில் வெற்றிபெறும் உளவியல் தத்துவத்தை, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமாய் வள்ளுவர் இந்தக் குறளில் எளிமையாகச் சொல்லிவிட்டார் பாருங்கள்..

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்

நம் வாழ்வின் மிகவும் பொறுப்பு நிறைந்த காலத்தின் எண்ணாவோட்டங்களைப் படம்பிடித்துக் காட்டும் வள்ளுவர், நிறைகளோடு சிறந்த அறிவுரைகளையும் வழங்குகிறார்.

இப்படி, நம் வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் உற்ற துணையாவது வள்ளுவம். அதற்கு எடுத்துக்காட்டாகப் பகிர நினைத்த ஒரு சிறுதுளிதான் இந்தப் பதிவு.

தமிழர் வாழ்வு சிறக்க, வருங்காலம் தமிழோடு சிறக்க, திருக்குறளைப் போற்றிப் பேணுவதும், நம் பிள்ளைகளுக்கு அதன் அருமை பெருமைகளைச் சொல்லித் தருவதும் நம் கடமை இல்லையா??

நன்றி.

Podcast available on:  Apple Google Spotify