தாய்லாந்தில் இரு தமிழ்க் கல்வெட்டுக்கள்

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்.   

ஈழத் துணவும் காழகத் தாக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு

(பட்டினப்பாலை 184-193)

இதென்ன, பலப்பலப் பொருட்களின் நீண்ட பட்டியல்போல இருக்கிறதே என்கிறீர்களா? ஆம், இவையனைத்தும் துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினத்துத் தெருக்களில் பற்பல நாடுகளில் இருந்து வந்து குவிந்திருக்கும் பண்டங்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு, சோழநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இவை.

சங்க இலக்கியங்களில், பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலை தரும் செய்தியைத்தான் பார்த்தோம். சோழன் கரிகால்  பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது பட்டினப்பாலை.

உண்மையில், கரிகாற் பெருவளத்தான் அரசாண்ட தமிழகத்தின் சோழநாடு, பெரும் வளத்தோடு செழித்திருந்ததை எவ்வளவு அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் புலவர்!

கடல் மூலமாக வந்த குதிரைகள் காணப்படுகின்றன;  உள்நாட்டு வணிகர்களின் கரிய மிளகு மூட்டைகள், வடமலையில் விளைந்த பொன்னும் மணியும், குடகுமலையில் தோன்றிய சந்தனமும் அகிலும் நிரம்பியுள்ளன; அதோடு, கங்கைக்கரையில் விளைந்தவையும் காவிரியில் விளைந்தவையும் குவிந்திருக்கின்றன; ஈழத்து உணவும் காழகத்துப் பொருட்களும் வந்து இறங்கியிருக்கின்றன. இப்படி, அரியவையும் பெரியவையுமாகப் பண்டங்கள் புகார் வீதியில்  நிறைந்து இருந்தனவாம்.

கடல்வழி வந்த குதிரைகள் அரபு நாட்டுத் தொடர்பைக் குறிப்பதாக அறிஞர்கள் உரைக்கிறார்கள். ஈழத்து உணவு புரிகிறது, இங்கே காழகம் என்பது மலேயப் பகுதியின் கடாரமாக இருக்கலாம் என்று சிலரும் இன்றைய மியான்மார் பகுதியாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்களும் சொல்கிறார்கள்.

பொதுக்காலத்துக்கு முன்பிருந்தே தமிழரின் ரோமானிய மற்றும் அரபு வணிகம் தழைத்து விளங்கியதை இலக்கியங்கள் வாயிலாகவும் வரலாற்றுச் சான்றுகள் மூலமாகவும் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தென்கிழக்காசியா உடனான தமிழகத்தின் தொடர்பு குறித்த செய்திகளை உறுதியாகக் கூறும் நேரடிச் சான்றுகள் குறைவாகவே இருந்தன.

பொதுக்காலத்தின் முதல் சில நூற்றாண்டுகளில், தென்கிழக்காசியாவுடனான தமிழர் தொடர்பிலான கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கத் தொடங்குகின்றன.

அவற்றில், இன்றைய தாய்லாந்து நாட்டுப் பகுதியில் கிடைத்த இரண்டு கல்வெட்டுக்கள் குறித்து இன்று பேசுவோம்.

முதல் கல்வெட்டின் காலம்- பொதுக்காலம் 3-4 ஆம் நூற்றாண்டு; மற்றொரு கல்வெட்டின் காலம் பொதுக்காலம் 9 ஆம் நூற்றாண்டு.

தமிழர்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்ததைக் காட்டும் அந்த இரு கல்வெட்டுக்களின் கூடுதல் சிறப்பு, அவையிரண்டும் தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் என்பது. கடல் கடந்து மற்றொரு நாட்டில் குடியேறிய நம் முன்னோர், அங்கு தாம் வாழ்ந்ததற்கான ஆவணத்தையும் விட்டுச் சென்றிருக்கின்றனர்.

அவர்கள் தமிழர்கள்தான் என்று நாம் எப்படி அறுதியிட்டுச் சொல்கிறோம்?

அவர்கள் செய்த வணிகத்தாலா? அவர்கள் விட்டுவந்த பொருட்களாலா? இவற்றைக்கொண்டு, கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகள் முன்பு வாழ்ந்த இனத்தின் அடையாளத்தை ஆய்வுகளால் ஓரளவுக்கு உறுதிசெய்ய முடியும்.

ஆனால், ஐயமின்றி அவர்கள் தமிழர்கள் என்பதற்கான அடையாளம் – அவர்கள் கல்லில் பதித்துச்சென்ற தம் தாய்மொழிதான்.

நாம் பார்க்கப் போகிற முதல் கல்வெட்டு, இன்றைய தாய்லாந்தில் உள்ள ‘கிராபி’ என்ற மாநிலத்தில்- ‘குவான் லுக் பட்’ என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்.

அது ஒரு பொற்கொல்லர் அல்லது பொன் வணிகருடைய உரைகல். அதாவது, தங்கத்தின் தரத்தை உரசிப் பார்க்க, பொற்கொல்லர்கள் பயன்படுத்துவார்கள் இல்லையா…. அந்தக் கல். அதில், ‘பெரும்பதன் கல்’ என்ற பொரிப்பு காணப்பட்டது. பண்டைய நூற்றாண்டுகளில் தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்திய ‘தமிழ் பிராமி’ வரிவடிவத்தில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு அது.  அதன் காலம், பொதுக்காலம் 3-4 ஆம் நூற்றாண்டு.

அந்த இடத்தைச் சுற்றி, பொன்துகள்களும் கிடைத்தன. அங்கு ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், அங்கு பொன்வணிகம் நடந்து வந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

ஆக, இந்தக் கல்வெட்டைக் கொண்டு ஆய்வாளர்கள் கண்டறிந்து சொன்னது- பொதுக்காலம் 3-4 ஆம் நூற்றாண்டில் அப்பகுதியில் குடியேறி வாழ்ந்துவந்த தமிழர்கள், பொன்வணிகம் செய்திருக்கவேண்டும். 

அந்தக் கல் – ‘பெரும்பதன்’ என்ற பெயருடைய வணிகரின் உரைகல். தாம் தங்கத்தை உரசிப்பார்த்த அந்த உரைகல்லில் தம் பெயரைச் செதுக்கிச் சென்றிருக்கிறார் அவர்.

இன்றும், நம் வீட்டுப் பாத்திரங்களில் பெயர்களைப் பொரித்துவைக்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. அது ஓர் இயல்பான பழக்கம்போல் தோன்றினாலும், இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழர் பண்பாட்டின் தொடர்ச்சி என்பது வியக்கவைக்கும் உண்மை.

‘பெரும்பதன்’ என்ற அந்த வணிகர் செய்த ஒரு சிறிய செயல் – தம் உரைகல்லில் பெயரைச் செதுக்கிவைத்தது. அந்தச் செயல், இன்றும் நாம் பெருமிதம் கொள்ளும் வகையில், தமிழர் கடல்கடந்து வாழ்ந்ததை உறுதிசெய்யும் சிறப்புமிகுந்த வரலாற்று நிகழ்வாக அமைந்துவிட்டது பாருங்கள்!

இன்று, நம் நாட்டிலும் சரி, புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் சரி, அந்நாட்டின் தாய்மொழியிலோ, நம் அலுவல் மொழியிலோ, அல்லது பெரும்பான்மையோர் புழங்கும் மொழியிலோ எழுதுவதும் பேசுவதும், வாழ்க்கை ஓட்டத்தில் எளிதென்று சிலரும் உயர்வென்று சிலரும் எண்ணுகிறோம். 

பெரும்பதன் என்ற அந்தத் தமிழர் நினைத்திருந்தால், தாம் வாழ்ந்த நாட்டின் மொழியிலோ, புழங்கிய பொது மொழியிலோ எழுதியிருக்கலாம். அவர் எழுதிய மொழி தாய்மொழி தமிழ் என்றதனால்தான்- அது, தமிழர் அங்கு வாழ்ந்த அடையாளத்தை உறுதியாக உலகிற்குச் சொல்லும் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.

அந்தக் கல்வெட்டு, அந்தமான் கடலை ஒட்டிய தாய்லாந்தின் மாநிலமான கிராபியில் உள்ள ‘ப்ரா குரு அந்தோன் சங்கரகிட்’ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 

நாம் இன்று தெரிந்துகொள்ளப்போகும் அடுத்த கல்வெட்டு – பொதுக்காலம் 9 ஆம் நூற்றாண்டில் தாய்லாந்தின் ‘தகோபா’ அல்லது ‘தக்குவாபா’ என்ற பகுதியில் கிடைத்த தமிழ்க் கல்வெட்டு.

முந்தைய கல்வெட்டு கிடைத்த தென் தாய்லாந்துப் பகுதியில் உள்ள மற்றோர் ஊர்தான் தகுவாபா . சிதிலமடைந்த அந்தக் கல்வெட்டு கூறும் செய்தி என்ன?

தாங்கள் வாழ்ந்த இடத்தில் அமைத்த குளத்தைப் பற்றிக் குறிப்புத் தருகிறார்கள் அங்கு வாழ்ந்த வணிகர்கள்.

அந்தப் பகுதியில் வாழும் ‘மணிக்கிராமத்தார்க்கும்’ அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் ‘சேனாவரையர்க்கும்’ பயன்படுமாறு ‘ஸ்ரீஅவனிநாரணம்’ என்ற பெயரில் குளம் ஒன்று வெட்டப்பட்டது. அந்தக் குளத்தை வெட்டியவர் பெயர் ‘நாங்கூர் உடையான்’. 

இந்தக் கல்வெட்டில் கிடைக்கும் பெயர்கள் – மணிக்கிராமத்தார், சேனாவரையர், நாங்கூர் உடையான், ஸ்ரீஅவனிநாரணன். இந்தப் பெயர்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன தொடர்பு?

மணிக்கிராமம் என்பது, கடல்கடந்து பற்பல நாடுகளுக்குச் சென்ற தமிழக வணிகக் குழுக்களுள் ஒன்று.

சேனாவரையர் என்போர், அவர்களுக்குப் பாதுகாப்புக்கென்று உடன் இருந்தோர்

நாங்கூர் உடையான் குளத்தை வெட்டியவர் பெயர் – ஊர்ப்பெயரோடுகூடிய  நல்ல தமிழ்ப் பெயர் 

அந்தக் குளத்துக்கு அவர்கள் சூட்டிய பெயர்தான், அந்தக் கல்வெட்டின் காலத்தைக் கூறும் கூடுதல் சான்றாக இன்றுவரை நிற்கிறது.

குளத்தின் பெயர் – ‘ஸ்ரீ அவனிநாரணம்’.

பொதுக்காலம் 9 ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தில் ஆட்சிசெய்த பல்லவ மன்னர் மூன்றாம் நந்திவர்மரின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றுதான் ‘அவனிநாரணன்’ என்பது.

குடிபெயர்ந்து வாழ்ந்த நாட்டில் தாங்கள் வெட்டிய குளத்திற்கு, தம் சொந்த மண்ணில் தம்மை ஆளும் மன்னர் பெயரைச் சூட்டி வாழ்ந்து வந்திருக்கிறார்கள் தமிழக வணிகர்கள்.

தாம் செல்லும் இடங்களுக்கு, குழுக்களாகக் குடிபெயரும் ஊர்களுக்கு, தங்களுடைய சொந்த ஊர்ப் பெயர்களைச் சூட்டி வாழ்வது, தமிழரின் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. தமிழகம் தாண்டி, இன்னும் தமிழ்ப் பெயர்கள் தாங்கி நிற்கும் ஊர்களே அதற்குச் சான்று.

இன்று தகோபா என்று அழைக்கப்படும் ஊரின் முந்தைய பெயர் ‘தக்கோலா’வாக இருந்திருக்கவேண்டும் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. ஆனால், தகோபாவுக்குப் பக்கத்தில் உள்ள ‘த்ராங்’ என்ற பகுதியே தக்கோலாவாக இருக்கும் என்கிறார்கள் வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்த்திரி உள்ளிட்டோர். தமிழ்நாட்டில், பல்லவத் தலைநகர் காஞ்சிக்கு அருகில் ‘தக்கோலம்’ என்ற ஊர் இன்றும் இருப்பது நம்மில் பலர் அறிந்ததுதானே?

தாய்லாந்தின் தகோபா பகுதியில், அவ்வூரின் வரலாற்றுப் பெயரான ‘தக்கோலா’ என்ற பெயரில் இன்றும் தங்கும் விடுதிகள் இருக்கின்றன.

சரி, புலம்பெயர்ந்த நாட்டில் ஒரு குளம் வெட்டி, அதற்கு அந்நாட்டு மன்னர் பெயரைச் சூட்டாமல், தம் மன்னர் பெயரைச் சூட்டி மகிழ்ந்த அந்த வணிகக் குழுவினர், தம் மண்ணின் வேறு என்ன சான்றுகளை அங்கு விட்டுச்சென்றார்கள்?

தமிழ்க் கல்வெட்டு கிடைத்த பகுதியில், பல்லவ பாணியிலான மூன்று சிற்பங்கள் கிடைத்தன. அவற்றுள், முதன்மைச் சிற்பம் திருமால் சிற்பம்.

கூடுதலாக, அந்த இடத்தைச் சுற்றியும் பொன்துகள்கள் நிரம்பக் கிடைத்தன. அங்கும் பொன் வணிகம் நடந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

ஆக, தக்கோலம் என்று புலம்பெயர்ந்த ஊருக்குப் பெயரிட்டு, வழிபாட்டுக்குரிய கோயில் கட்டி, குளமும் வெட்டி,  தம் மன்னர் பெயரைக் குளத்திற்குச் சூட்டி, மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்திருக்கிறார்கள் மணிக்கிராமத்தார் என்ற தமிழக வணிகக் குழுவினர்.

அந்தச் சிற்பங்களைத் தாய்லாந்தின் ‘நாகோன் சி தம்மரத்’ அருங்காட்சியகத்தில் இன்றும் காணலாம்.   

இந்தக் கல்வெட்டு, கடல்கடந்து சென்ற தமிழர் பெருமையைச் சொல்கிறது. வரலாற்று நோக்கில் பற்பல சான்றுகளைத் தருகிறது.  தென்கிழக்காசியாவில், அக்காலத்தில் தமிழக வணிகர்களின் செல்வாக்கை மிகத் தெளிவாகக் காட்டும் கல்வெட்டு இது.

ஆனால், இவற்றுள் முதன்மையானதாகத் தோன்றுவது – அவர்கள் எழுதிச் சென்ற மொழி. அங்கு வாழ்ந்த இனக்குழுவினர் ‘தமிழர்’ என்பதை உலகிற்குச் சொல்லும் முதன்மை ஆவணம் அவர்கள் பயன்படுத்திய தாய்மொழியான தமிழ்தான்.

ஒரு சமூகத்தின் அடையாளம் மொழியொடு பின்னிப் பிணைந்தது. அந்த அடையாளத்தை ஒதுக்கிவிட்டு, நாம் விட்டுச்செல்லும் எச்சங்கள், தெளிவில்லாத வரலாறையே காட்டும்.

விதைக்கும் விதை மரமாவதுதானே நோக்கம்?

இன்று நம்மில் பலர், மரபு மாற்றத்தில் வேரையே தொலைந்துபோகச் செய்வது சரியா?   

இன்று மட்டுமல்ல, நாளைய தலைமுறைக்கும் பெரும்பதன் போன்ற எண்ணிலடங்கா பலர் தேவை என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்தானே?

நன்றி.