சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்
(ஔவையார்)
என்று ஔவையார் எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
சித்திரம் வரைவது கைப்பழக்கம்;
செம்மையாகத் தமிழ்ப் பேசுவது- நாவின் பழக்கம்;
எக்காலமும் பயன்படுமாறு உள்ளிருத்திக் கொள்ளும் கல்வி – மனப்பழக்கமாம்.
இன்று நாம் பேசும் தமிழ், பெரும்பாலும் கலப்புத் தமிழ்தான். ஆங்கிலச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் கலந்து பேசுவதே இயல்பான பேச்சுவழக்கு என்று பலரும் கருதும் வருந்தத்தக்கச் சூழலைக் காண்கிறோம்.
இடையிடையே ஒலிக்கும் அந்தத் தமிழாவது சரியான உச்சரிப்பில் உள்ளதா?
இந்தப் பகிர்வில் நாம் பார்க்கப் போவது ஔவை சொன்ன நாப்பழக்கத்தைப் பற்றித்தான்.
ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுக்கும் மையங்கள் – ‘நுனிநாக்கு ஆங்கிலம் பேச வேண்டுமா? எங்களிடம் வாருங்கள்’ என்று விளம்பரப்படுத்துவதைக் காண்கிறோம்.
நுனிநாக்கு ஆங்கிலம் என்பது மற்றவரைக் கவரும்வண்ணம் ஆங்கிலத்தைப் பேசும் முறையைச் சொல்கிறது. ஆனால், ஒரு சொல் அல்லது தகவல் ‘நுனி நாக்கில் உள்ளது’ என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் – ‘tip of my tongue’ என்று வரும்.
வாய்வரை வந்துவிட்டது ஆனால் மறந்துவிட்டேன்’ என்பதையே அத்தொடர் குறிக்கிறது.
இன்றைய பகிர்வு இதைப் பற்றியதல்ல. நுனிநாக்கு ஆங்கிலம் பற்றியதும் அல்ல.
நுனிநாக்கு ஆங்கிலம்போல் நுனிநாக்கில் தமிழைப் பேசுவது சரியா என்பதுதான் இன்றைய பதிவு.
பேச்சுமொழி தவிர, நாள்தோறும் நம் காதுகளில் ஒலிக்கும் பல்வகைத் தமிழ் உண்டு- வானொலியில் பண்பலைத் தமிழ், தொலைக்காட்சியில் தொகுப்பாளர் தமிழ், செய்தித் தமிழ் என்பதுபோல்.
மகிழ்ச்சியூட்டும் ஒருசில நிகழ்வுகளை விடுத்து, ஔவை சொன்ன நாவில் பழகிய செம்மையான தமிழ் – தேடினாலும் கிடைப்பதில்லை.
தமிழ்வழிக் கல்வி இன்று அருகிவிட்டது;
தமிழ் கற்ற பெற்றோர் வீட்டில் தமிழ்ப் பேசுவதில்லை;
ஆங்கிலவழியில் கல்வி கற்கும் பிள்ளைகளில் பெரும்பாலானோருக்குத் தமிழ்ப் பேசும் தேவை இல்லவே இல்லை.
குறைந்தது, பள்ளியில் தமிழ் படிக்காத முதல் தலைமுறை, பெற்றோர் வீட்டில் பேசுவதைக் கேட்டாவது உச்சரிப்புப் பிழையின்றிப் பேசினார்கள். இப்போது, அந்த வாய்ப்பும் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.
இதற்கெல்லாம் ஏன் வருந்த வேண்டும்? மொழி என்பது தகவல் தொடர்புக் கருவிதானே? என்று உங்களில் பலர் நினைக்கலாம்.
ஆனால், நமக்குப் பயன்படும் பற்பல மொழிகளை அதே எண்ணத்துடன் நாம் பார்ப்பதில்லையே? வெளிநாட்டு மொழிகளைக் கற்கும்போது உச்சரிப்பில் எடுத்துக்கொள்ளும் அக்கறை, நம் வாயிலாக அடுத்தத் தலைமுறைக்குச் செல்லவேண்டிய நம் அடையாளமான தாய்மொழியைப் பழக்கும்போதும் இருக்கலாமே என்பதுதான் என் ஆதங்கம்.
சரி, நாப்பழக்கத்தை எப்படி வளர்ப்பது?
சரியான உச்சரிப்பை எப்படிப் பழகுவது?
தமிழ் மொழியின் ஒலிகள் எப்படி வந்தன, அவற்றை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பது குறித்து, நம் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் சொல்வதைக் கொஞ்சம் பார்ப்போம்.
தொல்காப்பியத்திற்கு முந்தைய நூல்கள் எதுவும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான், தமிழில் இதுவரைக் கிடைத்துள்ள நூல்களில் மிகத் தொன்மையானது தொல்ககாப்பியம் என்கிறோம்.
இலக்கியத்துக்குத்தானே இலக்கணம் வகுக்க இயலும்? தமக்கு முன்பிருந்த இலக்கியங்களில் இருந்து மொழிக்கான இலக்கணத்தை உருவாக்கினார் தொல்காப்பியர்.
தொல்காப்பியரின் காலம், பொதுக்காலத்துக்கு முன் 500 முதல் 300 ஆண்டுகளுக்குள் இருக்கலாம் என்று ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள்.
கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்குமுன், தெளிவான விளக்கங்களுடன் நம் மொழிக்கான இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட மொழியைத் தவறாக உச்சரிப்பது மொழிக்கொலை என்றுதானே சொல்லவேண்டும்?
நம் பிள்ளைகள் கெட்ட சொல் ஏதாவது சொன்னால், அவர்களைத் திட்டினாலும் நமக்கு நன்றாகத் தெரியும் – அவர்கள் அந்தக் கெட்ட சொல்லை உருவாக்கவில்லை- தாம் கேட்ட சொல்லைத்தான் பயன்படுத்தினார்கள் என்று.
அதேபோல்தான், ஒழுங்காகத் தமிழ்ப் பேசாத சமூகம், தமிழ் எழுத்துக்களை ஒழுங்காக உச்சரிக்காத சமூகம் – தவறான உச்சரிப்பைக் கேட்டு அதையே தொடரும் தலைமுறையைத்தானே உருவாக்கும்?
தொல்காப்பியர், தாம் இயற்றிய தொல்காப்பியத்தில்- எழுத்ததிகாரத்தில் – ‘பிறப்பியல்’ என்று தனி இயலில் எழுத்துக்களின் ஒலிப்புமுறை பற்றிக் கூறுகிறார்.
மிகமிக எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார்.
எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் உறுப்புகளாகத் தொல்காப்பியர் எட்டு உறுப்புகளைக் குறிப்பிடுகின்றார்.
தலை, கழுத்து, நெஞ்சு. பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகியவை அவை.
அண்ணம் என்பது மேல்வாயைக் குறிக்கிறது.
தொல்காப்பியத்தின் நூற்பாக்களையும் அவற்றின் விளக்கத்தையும் கூற முயற்சிக்கிறேன்.
பன்னீர் உயிரும் தம் நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்
12 உயிர் எழுத்துக்களும் மிடற்றுப் பிறந்த வளியின்– அதாவது, தொண்டையில் இருந்து பிறந்த காற்றால் ஒலிக்கும்.
அவற்றுள்,
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்
வாயைத் திறந்த நிலையில், அ ஆ இரண்டும் ஒலிக்கும்.
இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன
அவைதாம்,
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய
இ ஈ எ ஏ ஐ என்ற ஐந்தும் – மேல்வாய்ப் பல்லின் அடியை நாவிளிம்பு பொருந்தப் பிறக்கும்.
அடுத்த நூற்பாவை விளக்கவே தேவையில்லை-
உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்
என்கிறார் தொல்காப்பியர்.
சரி மெய்யெழுத்துக்களின் ஒலி எப்படி பிறக்கிறது?
நாவின் அடி மேல்வாயின் அடிப்பகுதியைச் சென்று பொருந்தும்போது க், ங் ஆகியவை பிறக்கின்றன.
ககார ஙகாரம் முதல் நா அண்ணம்
அண்ணம் என்பது மேல்வாயைக் குறிக்கிறது.
நாவின் இடைப்பகுதி, அண்ணத்தின் (மேல்வாயின்) இடைப்பகுதியைச் சென்று பொருந்தும் நிலையில் ச், ஞ் இரண்டும் பிறக்கின்றன.
சகார ஞகாரம் இடை நா அண்ணம்
நாவின் நுனி, அண்ணத்தின் நுனிப்பகுதியைச் சென்று பொருந்துகின்ற நிலையில் ட், ண் இரண்டும் பிறக்கின்றன.
டகார ணகாரம் நுனி நா அண்ணம்
மேல்வாய்ப் பல்லினது அடிப்பகுதியை நாவின் நுனியானது நன்கு பரந்து ஒற்றும்போது ‘த்’, ‘ந்’ என்னும் மெய்கள் பிறக்கின்றன.
அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம்
மேல் இதழும் கீழ் இதழும் ஒன்றோடு ஒன்று இயைந்து பொருந்திட, ‘ப்’, ‘ம்’ என்பவை பிறக்கின்றன.
இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம்
நாவின் நுனி, அண்ணத்தைச் சென்று நன்கு ஒற்றும் போது ‘ற்’ ‘ன்’ என்னும் மெய்கள் தோன்றும்.
அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்
இனி, இடையின மெய்களுக்குச் செல்வோம். யரலவழள இடையினம் இல்லையா?
யகர மெய்– மேல்வாயை நாவின் அடிப்பகுதி சேரும் போது, கழுத்தில் இருந்து எழும் காற்று மேல்வாயைச் சென்று அடையப் பிறக்கும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும்
நீங்களும் பொறுமையாகக் கேட்டோ படித்தோ இவற்றை ஒப்புநோக்கிப் பாருங்களேன். எவ்வளவு துல்லியமாக ஒலிகள் குறித்து நம் பழந்தமிழ் நூல் விளக்கியுள்ளது என்பது புரியும்.
மேல்வாய் நுனியை நாக்கின் நுனி வருடும் போது ர், ழ் மெய்கள் தோன்றுகின்றன.
நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்
மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் ஓரமானது (விளிம்பு) தடித்துப் பொருந்தும் (ஒற்றும்) போது லகர மெய் தோன்றும்; மேல்வாயை நாவின் ஓரமானது தடித்துத் தடவ (வருட) ளகர மெய் தோன்றும்.
நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்
ல, ள இரண்டு எழுத்துக்களுக்கும் உச்சரிப்பு வேறுபாடுகளை அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.
மேற்பல் கீழ் இதழோடு இயைந்து பொருந்த வகர மெய் தோன்றுகிறது
பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும்
இதுதான் தொல்காப்பியர் விளக்கிய உயிர் மற்றும் மெய் எழுத்துக்களின் ஒலிப்புமுறை.
இதுவரை, இலக்கணம் குறித்த இந்த ஒலிப்பதிவைப் பொறுமையாகக் கேட்டமைக்கு நன்றி.
ஒவ்வொரு மொழிக்கும் அம்மொழிக்குரிய ஒலிப்புமுறை உண்டு. அதை மனதில் வைத்து அந்த மொழியைப் பேசினால்தானே அழகு?!
நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி வெற்றி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்வோம்;
தாய்மொழி தமிழ் பன்னெடுங்காலம் தழைத்தோங்கிட, ஔவை சொன்னபடி நாவைப் பழக்கிக் கொள்ளலாமே.
நன்றி.
உதவிய நூல்கள்-
தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – பிறப்பியல், அழகப்பா பல்கலைக்கழகம்
மெய்யெழுத்துகளின் பிறப்பு, tamilvirtualuniversity
உயிரெழுத்துகளின் பிறப்பு, tamilvirtualuniversity
Podcast available on: