அனைவருக்கும் அன்னையர்நாள் நல்வாழ்த்துக்கள்.
ஒரு நாளைக் குறித்து வைத்துக்கொண்டு அன்னையைக் கொண்டாடும் வழக்கம் நம் சமூகத்தில் இல்லை. ஆனால், அன்னைக்கும் தந்தைக்கும் என்றுமே மதிப்பளித்து உயர்நிலையில் போற்றும் பண்பு நமக்கிருக்கிறது.
மலையிடைப் பிறவா மணியும், அலையிடைப் பிறவா அமிழ்தும், யாழிடைப் பிறவா இசையும் சிலப்பதிகார ஆசிரியருக்கு அரியவற்றுடன் ஒப்பிடப் பயன்பட்டன. மாறிவரும் காலச்சூழலில், மலைத்தேனும் கடல்முத்தும் அருகிப்போனதோடு, மரநிழலும், மழைத்தூரலும், பனைநுங்கும்கூட அரிய பொருட்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்றுவரை வெய்யிலும் காற்றும், பூவின் மணமும், கடல் உப்பும், கன்னல் சாறும், தெங்கின் இளநீரும் இயல்பாகக் கிடைப்பதுபோல் தாயின் அன்பையும் அணைப்பையும் எவ்வளவு வயதானாலும் நேரம் கேட்டுப்பெறும் தேவையில்லை நம் வாழ்க்கை முறையில். இன்னொரு பார்வையில், எளிதாகக் கிடைத்திடும் எதையும் கொண்டாடும் கட்டாயமில்லை நமக்கு. தாய்மையும் சிலவேளைகளில் அப்படிப்பட்டதுதான்.
இன்றைய நாளைப் பயன்படுத்தி, சங்கப் பாடல்கள் என்னும் சாளரம் வழியாகப் பழங்காலத் தமிழகத்து அன்னையர் எப்படி இருந்தார்கள் என்று பார்க்கத் தோன்றியது. இலக்கியம் நமக்குக் காட்டும் பலப்பல அன்னையருள் சிலரை இன்று காண்போம். இருவர், மகனைப் போருக்கு அனுப்பிவிட்டுத் தாமும் வீரத்தையே அணிகளாகப் பூண்டவர்கள். மற்றவர்கள், மணமுடித்துச் சென்ற மகள் குறித்துக் கவலைப்படும் பாசமிகு தாய்மார். இன்றும் நம்மால் தொடர்புபடுத்திக் கொள்ளமுடிகிற உணர்வுப் புதையல் சங்க இலக்கியம்.
இந்தப் பாடல்களும் காட்சிகளும் நம்மில் பலரும் அறிந்தவைதான். ஆயினும், எத்தனைமுறை வாசித்தாலும் இவர்கள் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகிறார்கள்.
முதலில் ஒரு புறநானூறுக் காட்சியைப் பார்ப்போம். பாடலைப் பாடியவர் காவற்பெண்டு என்ற பெண்பாற் புலவர். அந்தத் தாயின் மகனைத் தேடிச் சிலர் வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டின் தூணைப் பிடித்திக் கொண்டு அவர்கள் ‘உன் மகன் எங்கே?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் கூறும் விடை என்ன?
சிற்றில் நற்றூண் பற்றி, “நின் மகன்
புறநானூறு 86; பாடியவர்: காவற்பெண்டு
யாண்டு உளனோ?” என வினவுதி; என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே,
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.
சிற்றில் நற்றூண் பற்றி, “நின் மகன் யாண்டு உளனோ?” என வினவுதி– என் சிறிய இல்லத்தில் நல்ல தூணைப் பிடித்துக் கொண்டு “உன் மகன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்கிறாய்.
என் மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்– என் மகன் எங்கு இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது.
ஓரும் புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறோ இதுவே – புலி இருந்துவிட்டுப் போன கல் குகையைப் போன்றது அவனைப் பெற்ற என் வயிறு –
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே– வீரம் மிகுந்த என் மகன் எங்கே இருப்பான்? போர்க்களத்தில் இருப்பான், அங்கு போய்த் தேடுங்கள்,
என்கிறார் அந்தத் தாய்.
மகன் எங்கே என்று ஏளனமாகக் கேட்ட கேள்வியால் கோபத்தில் சொன்ன விடையாகவும் இப்பாடலைக் கொள்ளலாம். அல்லது, போருக்கு மகனை அனுப்புவதைத் தம் நாட்டுப்பற்றுடைக் கடமையாகக் கருதிய புறநானூற்றுத் தாய், விடை பகர்ந்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள் என்றும் கொள்ளலாம். அவனைத் தேடி இங்கே ஏன் வந்தாய்? போ போ போர்க்களத்தில்தான் இருப்பான்…வேறெங்கே இருப்பான் என்று இயல்பாகச் சொல்லிவிட்டார்போலும்.
ஆனால், புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறோ இதுவே- புலி இருந்துச் சென்ற குகையென மகனைச் சுமந்த கருவறையைக் குறிக்கும் அத்தாயின் வீரப் பண்பை என்னவென்று சொல்வது!
அடுத்து வருவதும் ஒரு புறநானூறு காட்சி.
கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,
புறநானூறு 295; பாடியவர்: ஔவையார்
வெந்து வாய்வடித்த வேல் தலைப் பெயரித்,
தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்,
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி,
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய,
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி,
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.
போர்க்களத்தில் மகன் இறந்துவிட்டான். இறந்துபோன தன் மகனைக் காண ஓடோடி வருகிறார் அவனுடைய தாய்.
அவன் எப்படிப் போரிட்டிருந்தான்?
கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்து வாய்வடித்த வேல் தலைப் பெயரி– கடல் துள்ளி எழுந்தாற்போல, தீ கக்கும் தன் வேலைப் பகைவர்களை நோக்கி எறிந்து கொண்டும்,
தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்– வேலும் அம்பும் நிறைந்த போர்க்களத்தில் தன் படையினரை வழிநடத்திக் கொண்டும்,
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி– முன்னேறி வந்த எதிர்ப் படையினரைத் தடுத்தும் விலக்கியும் போரிட்டான்.
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய,
சிறப்புடையாளன்– அப்படிச் சிறப்புறப் போரிட்ட அந்த வீரன் வீழ்த்தப்பட்டான்.
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி,
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே- புறமுதுகு இடாமல் நெஞ்சு நிமிர்த்திப் போரிட்ட அந்த இளம் வீரனின் தாய்;
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி– அப்படிச் சிறப்பாகப் போரிட்டு இறந்த, போற்றுதலுக்குரிய தம் மகனின் உயர்ந்த மாண்பைக் கண்டு மகிழ்ந்தார்;
அந்தப் பெருமிதத்தில்- வாடு முலை ஊறிச் சுரந்தன – அவருடைய வாடிய முலைகளிலும் பால் சுரந்ததாம்.
சங்கத் தாய்மாரின் மனத்திண்மையைப் படம்பிடித்துக் காட்டும் பாடல்கள் இவை.
காதலும் வீரமும்தானே சங்கப் பாடல்களின் சாரம்.. முதலில் வீரத்தைப் பார்த்தோம், இனி காதலைப் பார்ப்போம்.
தன் காதலனுடன் சென்றுவிட்ட மகளைப் பிரிந்த தாயின் வாட்டம், திருமணம் முடித்துக் கணவன் வீட்டில் தனியாகப் பொறுப்புக்களை மகள் எப்படி நல்லவண்ணம் நிறைவேற்றுவாளோ என்ற பதைபதைப்பு, பொருள்வளத்துடன் தன் வீட்டில் வளர்ந்த மகள் வசதியின்றித் துன்பப்படுவாளோ என்ற தவிப்பு என்று சங்ககாலத் தாயின் துடிதுடிப்பு நம்மை நெகிழச் செய்யும் அன்புப் போராட்டம்.
நற்றிணையில் ஒரு பாடல்-
அந்தத் தாயின் மகள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள்.
நற்றிணை 184, பாடியர் பெயர் கிடைக்கவில்லை
ஒரு மகள் உடையேன் மன்னே, அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்,
இனியே தாங்கு நின் அவலம் என்றிர், அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே,
உள்ளின் உள்ளம் வேமே, உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.
ஒரு மகள் உடையேன் மன்னே, அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்
எனக்கு இருப்பதோ ஒரே ஒரு மகள்; அவளும் போரில் மிகுந்த வலிமையையும் கூரிய வேலையுமுடைய ஒரு இளைஞனோடு பாலை நிலத்திற்குச் சென்றுவிட்டாள்.
இனியே தாங்கு நின் அவலம் என்றிர், அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே
இனி உன்னுடைய துன்பத்தைத் பொறுத்துக் கொள் என்கிறீர்கள். அது எப்படி முடியும் அறிவு உடையவர்களே? சொல்லுங்கள், என்கிறார் பெண்ணைப் பெற்ற அந்தத் தாய்.
………………………………………………….உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே
மை தீட்டிய கண்ணின் மணியில் வாழும் பாவை வெளியே நடந்து வந்ததுபோல, என்னுடைய அழகிய இளைய மகள் விளையாடிய நீலமணியைப் போன்ற நொச்சி மரத்தையும் திண்ணையையும் பார்க்கும்போதெல்லாம்,
உள்ளின் உள்ளம் வேமே– என் உள்ளம் வெந்து போகும் என்று வருந்துகிறார்.
உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள்– தன் மகள் பிரிந்து சென்றது, தன் கண்ணின் பாவை தனியே வெளியேறி நடந்தது போலத் தெரிந்ததாம் அந்தத் தாய்க்கு.
எவ்வளவு அழகாக அந்தத் தாயின் உணர்வைச் சொற்களில் வெளிப்படுத்திவிட்டார் ஆசிரியர்!
மற்றோர் இல்லத்தில், காதலனுடன் சென்ற மகள் திரும்பி வந்து அந்தக் காதலனின் வீட்டிலே இருக்கிறாள். தலைவனின் வீட்டில் பெண்ணுக்குச் சிலம்பு கழிக்கும் சடங்கை நடத்திவிட்டார்கள். அதை அறிந்த தாயின் மனத்தவிப்பைக் காட்டுகிறார் இந்த ஐங்குறுநூறு பாடலில், ஆசிரியர் ஓதலாந்தையார்.
நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
ஐங்குறுநூறு 399, ஓதலாந்தையார்
எம் மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ, மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?
நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ
உங்கள் வீட்டில் என் மகளுடைய சிலம்பு கழிக்கும் நோன்பை நடத்திவிட்டீர்கள். எங்கள் மனையில் அவளுடைய திருமணத்தை நடத்தலாம் என்று சொன்னால் என்ன? என்று கேட்கிறார்.
யாரிடம் சொன்னால் என்ன?
வென்வேல் மையற விளங்கிய கழலடி
வெற்றி வேலையும் வீரக் கழல்களையும் காலில் அணிந்த,
இது தலைவனைப் புகழ்வதுபோல இருக்கிறது இல்லையா? அடுத்துச் சொல்கிறார்-
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?– பொய்யில் வல்லவனான அந்த இளைஞனின் தாய்க்கு நீங்கள் சொன்னால்தான் என்ன? எங்கள் மனையில் அவளுடைய திருமணத்தை நடத்தலாம் என்று…. என்று, தன் மகளின் திருமணத்தைத் தங்கள் வீட்டில் நடத்த விழையும் அந்தத் தாய் துடிக்கிறார்.
அடுத்து வரும் சுவையான குறுந்தொகைக் காட்சியில், கணவன் வீட்டுக்கு வாழச் சென்றுவிட்ட மகள் எப்படி மனையறம் பேணுகிறாள் என்று காணத் தவிக்கும் தாயைக் காட்டுகிறார் ஆசிரியர் கூடலூர் கிழார்.
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
குறுந்தொகை 167; பாடியவர்: கூடலூர் கிழார்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்,
குவளை உண்கண் குய் புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்,
இனிதெனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே.
தன் மகளும் மருமகனும் இல்லறம் நடத்தும் பாங்கினைக் கண்டுவரச் செவிலித்தாயை அனுப்புகிறார் தலைவியின் அன்னையான நற்றாய். மகள் இருக்கும் ஊருக்குச் சென்று, திரும்பி வரும் செவிலித்தாய், தான் கண்டவற்றை விளக்குகிறார்.
அவர் கண்ட காட்சிதான் என்ன? மகள் அடுக்களையில் சமைத்துக் கொண்டிருந்தாள்.
முளி தயிர் பிசைந்த என்று தொடங்குகிறது பாடல்- உரைய வைத்த தயிர் நன்றாக.. ஏன் அளவிற்கு அதிகமாகவே புளித்துவிட்டது- அந்த முற்றிய தயிரைப் பிசைந்த-
காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்– காந்தள் மலரின் இதழைப் போன்ற தன் மெல்லிய விரல்களை அணிந்திருக்கும் ஆடையில் துடைத்துக் கொண்டாள் அந்தப் பெண்;
குவளை உண்கண் குய் புகை கழும– குவளை மலரைப் போன்ற மையிட்டக் கண்களில் தாளிப்பின் புகையைப் பொறுத்துக் கொண்டு உணவு சமைத்தாள்;
அடுத்து, தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்– தானே கலந்துச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பைக் கணவனுக்குப் பரிமாறினாள்;
புளிப்பு கூடுதலாகிப் போன அந்தக் குழம்பை உண்ட அவள் கணவன் என்ன சொன்னான்? நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த செவிலித்தாய்க்கு என்ன நடக்கப் போகிறதோ என்று முதலில் அச்சமும் படபடப்பும்; அடுத்து, செவிலித்தாய் உரைக்கக் கேட்ட தலைவியின் தாயின் மனப் போராட்டத்தைச் சொல்லவா வேண்டும்?
புளித்தக் குழம்பை உண்ட தலைவன் –
இனிதெனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே.
நன்றாக, சுவையாக இருக்கிறது என்று அவன் உண்டதால், மலர்ந்தது தலைவியின் முகம்.
அந்தப் பெண்ணின் முக மலர்வினால் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் இரண்டு அன்னையர்- ஒருவர் அவளை ஈன்ற நற்றாய்; மற்றவர் அவளை வளர்த்த செவிலித்தாய்.
மழைச்சாரலென மனம் மயக்கும் தாயன்பின் சாறைப் பிழிந்து சங்க இலக்கியக் காட்சிகள் நம்மைச் சங்க காலத்துக்குக் கொண்டுபோவது உண்மைதானே?
தாய்மை உணர்வையும், தாயின் ஈடில்லா அன்பையும் பொறுமையையும் புரிந்துகொள்ள மொழி தேவையில்லைதான். ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் என் மண்ணில் தாய்மார் எப்படி இருந்தனர்? எப்படி அன்பு பாராட்டினர்? உறவு சார்ந்த சமூகச் சூழல் எப்படி இருந்தது? என்ற பலதரப்பட்ட மரபுசார் தகவல்களுக்கும் என் மொழி எனக்குத் தேவை.
தொன்மையான நம் சமூகத்தின் தொன்மையான மரபுகளைப் புரிந்துகொள்ள- நம் முன்னோர் விட்டுச்சென்ற இலக்கியக் கடிதங்களைப் படித்திட நம் மொழி நமக்குத் தேவை.
நன்றி.
Podcast available on :