ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி பன்னாட்டு மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. பன்னாட்டு மகளிர் நாள் உருவான வரலாறு பற்றி ஐ.நா.வின் இணையதளம் என்ன சொல்கிறது?
முதன்முதலில் 1848இல் அமெரிக்காவின் நியுயார்க் மாகாணத்தில் சமூக, பொருளாதார, அரசியல், மதம் சார்ந்த உரிமைகள் கோரிப் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். அடுத்து, 1908ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் நாள், துணி ஆலைகளில் பணியாற்றிய பெண்கள், தங்கள் பணிச்சூழலில் மாற்றம் வேண்டிப் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 1909 முதல் அமெரிக்காவிலும், ஐரோப்பாவில் டென்மார்க், நெதர்லாந்து முதலிய பல நாடுகளிலும் பெண்கள் தத்தம் உரிமைகளுக்காகப் போராடினர். 1917இல் ரஷியாவில் பெண்கள் போராடியதன் விளைவாக அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1975ஆம் ஆண்டு, பன்னாட்டு மகளிர் ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. அந்த ஆண்டுமுதல், மார்ச் 8ஐப் பன்னாட்டு மகளிர் நாளாக ஐ.நா. அறிவித்தது.
பெண்களுக்கான சம உரிமை, முன்னேற்றம், கல்வி போன்ற பலப்பலத் தேவைகளை இன்றளவும் போராடியே பெறவேண்டிய சூழலில், தமிழின் சங்ககால இலக்கியங்கள் பெண்களை எப்படிக் காட்டுகின்றன? பெண்பாற் புலவர்கள் மிகுந்திருந்த நாடு; இளம்பெண்கள் அங்கவையும் சங்கவையும் பாடலியற்றிய பண்பாடு; வெண்ணிக்குயத்தி என்ற குயவர்வீட்டுப் பெண் கவிபாடிய பண்பாடு- அப்பெண்பாற்புலவரை வெண்ணிக்குயத்தியார் என்று மாண்புடன் விளித்த சமூகம் நம்முடையது.
இலக்கியங்களில் தலைவியென்றும் தோழியென்றும், தாயென்றும் செவிலித் தாயென்றும் உறவின்வழி அறியப்படும் பெண்கள்; உறவல்லாத பரத்தையர் என்று இவர்களை ஒரு வகையில் வைப்போம். இவர்கள் தவிர, பாடும் பாடினியும், ஆடும் விறலியும், இசைக் கலைஞர்களும் ஒரு வகை என்போம். இவர்கள் அல்லாத பல பெண்களையும், அவர்தம் இயல்புகளையும், பணிகளையும், தொழில்களையும் நம் இலக்கியங்கள் காட்டுகின்றன.
இன்று நாம் பார்க்கப்போவது, தனித்தன்மையோடு தம் உழைப்பின்வழித் தொழில் செய்துப் பொருளீட்டி, தனி ஆளுமைகளாக வாழ்ந்த தமிழ்நிலத்துப் பெண்களை. எட்டுத் தொகை- பத்துப்பாட்டு நூல்களில் மதுரைக் காஞ்சி, பெரும்பாணாற்றுப்படை இரண்டிலும் நான் கண்ட சுவையான காட்சிகளை இன்று உங்களுடன் பகிர்கிறேன். அந்தக் காட்சிகளில் வரும் நான்கு வகைப் பெண்களும் சொந்தக்காலில் நிற்கும் தொழில் முனைவோர் என்பதுதான் சிறப்பு.
முதலில், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புலவர் மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சியைப் பார்ப்போம்.
மதுரை நகரின் நாளங்காடியில் பண்டங்கள் விற்கும் பெண்களைப் பாருங்கள்-
இருங்கடல் வான்கோடு புரைய, வாருற்றுப்
பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர்
நன்னர், நலத்தர், தொல் முதுபெண்டிர் (407-409)
நன்னர், நலத்தர், தொல் முதுபெண்டிர் என்றால் நல்ல அழகுடைய வயதில் மூத்த பெண்கள்;
எப்படிக் காட்சி அளிக்கிறார்கள்?
வாருற்றுப் பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர்– நரைத்த கூந்தலை வாரிப் பெரிய பின்னலிட்டு உள்ளனர்; இருங்கடல் வான்கோடு புரைய– அந்தப் பின்னிய நரைத்த கூந்தல், கரிய கடலில் வெள்ளை நிறத்துச் சங்கைப் போல இருக்கிறதாம்.
அந்தப் பெண்கள் மதுரைத் தெருக்களில் பலவிதப் பொருட்கள் விற்கின்றனர்.
நரைத்த முடியுடன் முதிய விற்பனைப் பெண்களைப் பார்த்தோம்; இளம்பெண்கள் எப்படி இருக்கிறார்கள்?
மை உக்கன்ன மொய் இருங்கூந்தல்
மயில் இயலோரும், மட மொழியோரும் (417-418)
மை ஒழுகியதுபோன்ற இருண்ட கருங்கூந்தலையுடையவர்கள்; மயிலின் இயல்பும் மென்மையான பேசும்தன்மையும் உடையவர்களாகக் காட்சியளிக்கிறார்கள்.
புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்,
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும்பூவொடு மனை மனை மறுக (421-423)
மக்கள் விரும்பும் பலவிதப் பொருட்களை அழகிய பலவகைக் கிண்ணங்களில், குறிப்பாக மணம்நிறைந்த மலர்களோடு வீடுவீடாகச் சென்று விற்கிறார்கள்.
மதுரைக் காஞ்சியின் மற்றுமொரு காட்சியைப் பாருங்கள்-
பாடு ஆன்று அவிந்த பனிக்கடல் புரைய
————————————————
பானாள் கொண்ட கங்குல் இடையது (629-631)
ஒலியெல்லாம் அடங்கிய குளிர்ந்த கடல்போல அமைதியான நடு இரவில், தம் வேலைகளை முடித்துக்கொண்டு பலர் உறங்கச் செல்கிறார்கள். அவர்களில்-
பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து,
நொடை நவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர (621-623)
அந்த இரவுக்கடைவீதியில், சங்குகளின் ஆரவாரம் அடங்கியிருக்க-
காழ் சாய்த்து– கடையின் தட்டியைத் தூக்கி நிறுத்தும் கட்டையைச் சாய்த்துவிட்டு; நொடை நவில் நெடுங்கடை அடைத்து– பண்டங்களைக் கூவிவிற்கும் தம் நெடியகடையை அடைத்து; ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர– ஒளிரும் அணிகலன் புனைந்த பெண்கள் தூங்கச் செல்கிறார்கள். ஊரடங்கிய நடுஇரவில் தம் பணி முடித்து, கடையை அடைத்து உறங்கச் செல்கின்றனர் கடை நடத்தும் மதுரை நகரத்துப் பெண்கள்.
இந்த இரண்டு காட்சிகளிலும், சங்ககால மதுரையில் பெண்கள், நரைத்த முடியைப் பின்னிய தொல் முதுபெண்டிர் – வயது முதிர்ந்தாலும் உழைத்துப் பொருளீட்டுகிறார்கள்; அடுத்த காட்சியில், வேலையெல்லாம் முடிந்து நடு இரவில் கடையை அடைத்து உறங்கச் செல்லும் அளவிற்குக் கடுமையாக உழைக்கிறார்கள். தத்தம் தனித்தொழில்கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள்.
அடுத்து, தொண்டைமான் இளந்திரையனை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படைக்கு வருவோம்.
இளந்திரையனிடம் பரிசு பெற்றுத் திரும்பிய ஒரு பாணன், வறுமையினால் வருந்தும் மற்றொரு பாணனிடம் தனக்குக் கிட்டிய பரிசுகளைக் கூறி, இளந்திரையனிடம் சென்றால் பொருள் கிடைக்கும் என்று ஆற்றுப்படுத்துவது – அதாவது வழிப்படுத்துவது இப்பாடல். அப்போது, போகும் வழியில் உள்ள இடங்கள், கடக்கையில் காணக்கூடிய காட்சிகளை விவரிக்கிறான் முதல் பாணன்.
அவற்றில் இரண்டு காட்சிகளை இப்போது பார்ப்போம்.
ஆடு, எருமை, பசுக்களை வளர்க்கும் கோவலர் குடியிருப்பில் ஒரு காட்சி.
நாள் மோர் மாறும் நல்மா மேனி
சிறு குழை துயல்வரும் காதில், பணைத்தோள்,
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள் (160-162)
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்– சிறிய வகிடெடுத்த கூந்தலுடைய ஆயர் குடும்பத்தின் பெண், நல்மா மேனி – நல்ல மாந்தளிர் அல்லது கருத்தநிற மேனி கொண்டவள்; சிறு குழை துயல்வரும் காதில், பணைத்தோள்– சிறிய அணிகலன் அசையும் காதும், மூங்கில் போன்ற தோளும் கொண்டவள், நாள் மோர் மாறும்– அன்றன்று கடைந்த புதிய மோரை விற்கச் செல்கிறாள்.
நள் இருள் விடியல் புள் எழப் போகி – இருள் நீங்கி விடியும்காலையில் பறவைகள் துயில் எழும்பொழுதே அவள் பணி தொடங்கிவிடுகிறது.
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
ஆம்பி வால்முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீந்தயிர் கலக்கி, நுரை தெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ (156-159)
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி– அவள் தயிரை மத்தால் கடைகிறாள். அந்த ஒலி புலி உறுமுவதுபோல் கேட்கிறது; உறை அமை தீந்தயிர் கலக்கி– இறுகத் தோய்த்தத் தயிரைக் கடைந்து, நுரை தெரிந்து– வெண்ணெய் எடுத்து, குழிசி பூஞ்சுமட்டு இரீஇ– வெண்ணெய் நீக்கிய மோர்ப்பானையைத் தலையில், மெல்லிய சுமட்டின் மேல் வைத்துச் சென்று, அன்றைய புதிய மோரை விற்கிறாள்.
இங்குச் செய்தி இதுமட்டுமல்ல…
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,
எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம் (163-165)
குறிஞ்சி நிலத்து ஆயர்மகள் மோருக்குப் பண்டமாற்றாக நெல்லைப் பெற்றுக் கொள்கிறாள். கிடைத்த நெல்லைக் கொண்டுச் சுற்றத்தார் யாவரையும் உண்ணச் செய்யும் அவள், நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்– எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்– நெய்யை விற்றுக் கிடைத்த விலையில் பசும்பொன் வாங்காமல், எருமைகளையும் நல்ல பசுக்களையும் கன்றுகளையும் வாங்குவாளாம்.
தொழில் ஒன்றைச் செய்து, அதில் வரும் வருமானத்தில் சுற்றத்தாரையும் பசியாற்றுபவள், கூடுதல் வருவாயில் தொழிலுக்கான மேல்முதலீடு செய்வதிலும் தேர்ந்தவளாக இருக்கிறாள். ஈட்டிய வருவாயில் பொன் வாங்குவது அக்காலத்தில் இயல்பாக இருந்தத் தகவலைத் தரும் புலவர், தொடர்ந்துச் செல்வம் பெருக்கும் அக்காலப் பெண்களின் தொழிலறிவை ஆயர்மகள் வழியாகக் நமக்குக் காட்டுகிறார்.
பெரும்பாணாற்றுப்படையின் மற்றுமொரு காட்சி, கடற்கரைப் பட்டினத்து மக்களின் உபசரிப்புத் தன்மையைச் சொல்கிறது.
கள் விற்கும் பெண்களைச் சங்க இலக்கியங்கள் அரியலாட்டியர், கள் அடு மகளிர் என்ற பெயர்களால் குறிக்கிறது.
கள் காய்ச்சும் பெண்கள் பற்றிய செய்தி எவ்வளவு அழகாக விளக்கப்படுகிறது பாருங்கள்…
நெல்மா வல்சி தீற்றி பன்னாள்
குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றைக்
கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவீர் (343-345)
பட்டினப்பகுதியில், கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவீர்– கொழுத்த ஆண்பன்றியின் இறைச்சியுடன் களிப்பு மிகுந்த கள்ளைப் பெறுவீர்கள்; சரி, அது எப்படிப்பட்ட ஆண்பன்றி? நெல்மா வல்சி தீற்றி பன்னாள் குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏறு– நெல் இடித்த மாவை உணவாகக் கொண்ட பன்றி; பல நாட்களாக குழியில் நிறுத்திப் பாதுகாத்த பன்றி;
அதுபோக-
ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்
பல்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது (341-342)
பல்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது– அடர்ந்த மயிரையுடைய பெண் பன்றிகளுடன் சேராத ஆண்பன்றி அது;
ஓஹோ சரி, அந்தப் பெண் பன்றிகள் எப்படி? ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டி உடைய பெண்பன்றி – ஈரமான சேற்றில் புரளும் பல கரிய குட்டிகளையுடைய பெண்பன்றிகள் அவை;
ஈரமான சேறு எப்படி வந்தது?
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் (339-340)
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய– கள்ளை காய்ச்சிய பெண்கள் வட்டில்/கலத்தைக் கழுவியதால்; வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்– வடிந்து சிந்திய அந்தக் குழம்பில் வந்த ஈரமான சேறு அது.
ஆக, கள் காய்ச்சும் மகளிர் தங்கள் வட்டிலைக் கழுவி ஊற்றிய நீர், அந்த நீர் உருவாக்கிய சேற்றில் புரளும் குட்டிகளையுடைய பெண் பன்றிகள், அவற்றுடன் சேராத கொழுத்த ஆண்பன்றிகள், அந்த ஆண்பன்றியின் இறைச்சியும், அந்த நெய்தல் நில மகளிர் காய்ச்சிய கள்ளும் அங்குச் சென்றால் கிடைக்கும் என்று ஒரு பாணன் மற்றொருவனை ஆற்றுப்படுத்துகிறான்.
பெண்கள் கள் காய்ச்சியதும், கள் விற்றதும் இயல்பான தொழிலாகவே அக்காலத்தில் இருந்தது இலக்கியங்கள்வழி நாம் அறிந்து கொள்கிறோம்.
சங்க காலத்து இலக்கியங்களுள் இரண்டு இலக்கியங்களில், நான்கு வெவ்வேறு காட்சிகள் காட்டிய பெண் தொழில்முனைவோரை மட்டும்தான் இன்று பார்த்தோம். இன்னும் எண்ணிலடங்காத் தகவல்கள் உண்டு.
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கப் பாடல்களில், பெண்கள் பலப்பலத் தொழில்கள் புரிகிறார்கள். தமக்கான ஆளுமையுடன் பொருளீட்டும் குடும்பப் பொறுப்பையும் ஏற்று உழைக்கிறார்கள். வளர்ந்தோங்கிய பண்பாடு செழித்த தமிழ்ச் சமூகத்தின் வெளிப்பாடுகள் இவை; வேறோர் இனத்துக்குக் கிட்டாத ஆவணங்கள் இவை.
கள்அடு மகளிர் காய்ச்சிய கள்ளைவிடச் சுவையான நம் இலக்கியங்களைச் சொற்களால் பேணினால் மட்டும் போதாது, படித்து மகிழவும் வேண்டும்.
நன்றி.
Podcast available on :