மாறிய பெயர்; தடம் மாறிய பொருள்

சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் துப்பாக்கி திரைப்படம் ஒளிபரப்பி இருந்தார்கள். அலைவரிசையைக் கவனிக்கவில்லை. உற்று நோக்கியபோது நடிகர் விஜய் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார். அட.. என்னடா இது என்று ஆர்வம் கூடியது. பெயரைப் பார்த்தால் – ‘Thuppakki – Indian Soldier Never On Holiday’ என்று வந்தது. ஓ.. மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் என்று புரிந்துகொண்டேன். பின்னொருநாள், இந்தி அலைவரிசை வழங்கிக்கொண்டிருந்த படமொன்றைப் பார்க்க அமர்ந்தேன். ஏற்கனவே பார்த்த படம்போல் இருந்தது. மூளையைத் தீட்டித் தேடியதில் அதே துப்பாக்கி- இப்போது அக்‌ஷய்குமார் கையில். உதட்டசைவு மாறாமல் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார். பெயரைப் பார்த்தால் – ‘Holiday – A Soldier is Never Off Duty’ என்று இருந்தது. இது தமிழ்த் துப்பாக்கியின் இந்தி தழுவல். துப்பாக்கி என்று தமிழில் முதலில் எடுத்து, வணிக வெற்றியடைந்ததும், அதையே ‘Indian Soldier Never On Holiday’ என்று இந்தியில் மொழிமாற்றம் மட்டும் செய்து வெளியிட்டு இருந்தார்கள். பின் அதே கதையைத் தழுவி, முதலிலிருந்து முழுமையாக மறுபடி இந்தியில் ‘A Soldier is Never Off Duty’ என்று பயங்கரமாக மாற்றி யோசித்திருந்தார்கள். ஒரே கல்லில் மூன்று மாங்காய்… இல்லை இல்லை.. ஒரே கதையில் குறைந்தது மூன்று படங்கள்.

தோசையும் தேங்காய்த் துவையலும் வழங்கிய உணவகம் அதையே தோசா நாரியல் சட்னி என்று பெயர்மாற்றி வழங்கியது. மேலும் அடங்காத அறிவுப் பசியில், தோசை மாவை பாசுமதி அரிசியில் முதலிலிருந்து ஆட்டி வட இந்திய ‘தோசா’வாகத் திரைவிரும்பிகளுக்குப் பரிமாறியது புரிந்தது. இதுபோல் தோசைகளும் இட்லிகளும் கணக்கில்லாமல் கிடைக்கும் காலம் இது. தலைச் சுற்றியது எனக்கு.

எதை எப்படிக் கொடுத்தாலும் சிந்திக்காது வாங்கியுண்ணும் சமூகமாக மாறிப்போன நமக்கு, மாறிய பெயர்களும் தடம் மாறிய பொருள்களும் பொருட்டாகவே தெரிவதில்லை.

இன்னொரு கவளம் வேண்டுமா? இதோ…

சென்னையில் ஹாமில்டன் பாலம் என்று ஒன்று இருந்தது. அதன் பெயர்க்காரணம் குறித்துச் சென்னை ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக்கள் கூறுகிறார்கள். சென்னையின் ஆளுநராக இருந்த லார்ட் ஹாமில்டன் என்பவரின் பெயரில் இது கட்டப்பட்டதாக நம்பிவந்த நேரத்தில், ஹாமில்டன் என்ற ஆளுநர் சென்னையில் இருந்ததற்கு எந்தச் சான்றும் இல்லை என்கிறார், சென்னை ஆய்வாளரான திரு. முத்தையா. ஆனால், நம்முடைய பேசுபொருள் அதுவல்ல.

ஆங்கிலேயர் காலத்தில் ‘ஹாமில்டன் ப்ரிட்ஜ்’ என்றழைக்கப்பட்ட பாலம், தமிழில் ‘ஹாமில்டன் வாராவதி’ என்றானது. ஹாமில்டன் என்ற சொல் காலப்போக்கில் மருவி ‘அம்பட்டன் வாராவதி’ ஆனது.  அழகுத் தமிழ்ச் சொற்களான கன்னியாகுமரி cape comorin என்றும், தூத்துக்குடி tuticorin என்றும், திருநெல்வேலி tinneveli என்றும் ஆங்கிலேயர் வாயில் படாதபாடுபட்டதைக்கூட ஓரளவு தாங்கிக் கொள்ளலாம். நம் உணவுச் சின்னமாம் மிளகாய்ப்பொடியை gun powder என்று இழிவுபடுத்தியதற்குப் பழிக்குப்பழிதான் ‘அம்பட்டன் வாராவதி’ என்று நினைத்துவிடாதீர்கள். வாராவதியின் கதை அதோடு நிறைவடையவில்லை.

ஹாமில்டன் ப்ரிட்ஜ் தமிழனால் அம்பட்டன் வாராவதி என்றாக, அதை ஆங்கிலேயர் மிகச்சிறப்பாக மறுமொழியாக்கம் செய்து barbers bridge என்று அழைக்கத் தொடங்கினர். ‘ஹாமில்டன் ப்ரிட்ஜ்’ – barbers bridgeஆக மாறிய கதைச் சுருக்கம் இது.

பின்னர் அதுவே அம்பேத்கர் பாலம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

இதை எண்ணிச் சிரிப்பதா? சிந்திப்பதா? முடிவு உங்கள் கையில்.

இது போல இன்னும் நிறைய உண்டு-

பெருமைமிகு மாமல்லபுரம் மகாபலிபுரம் ஆனதும்; அருள்மிகு தில்லைச் சிற்றம்பலம் சிதம்பரம் ஆனதும்; இணையில்லாப் பெருவுடையார் கோயில் ப்ருஹத்தீஷ்வரம் ஆனதும் என்று பட்டியல் நீள்கிறது. பார்ப்போம்… கேட்போம்… அடுத்தடுத்த பதிவுகளில்.

நன்றி.

இணைப்புகள்-


Podcast available on:   Apple   Google   Spotify

நுனி நாக்குத் தமிழ் சரியா? தொல்காப்பிய வழி தமிழ் ஒலிகள்

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்

(ஔவையார்)

என்று ஔவையார் எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

சித்திரம் வரைவது கைப்பழக்கம்;

செம்மையாகத் தமிழ்ப் பேசுவது- நாவின் பழக்கம்;

எக்காலமும் பயன்படுமாறு உள்ளிருத்திக் கொள்ளும் கல்வி – மனப்பழக்கமாம்.

இன்று நாம் பேசும் தமிழ், பெரும்பாலும் கலப்புத் தமிழ்தான். ஆங்கிலச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் கலந்து பேசுவதே இயல்பான பேச்சுவழக்கு என்று பலரும் கருதும் வருந்தத்தக்கச் சூழலைக் காண்கிறோம்.

 இடையிடையே ஒலிக்கும் அந்தத் தமிழாவது சரியான உச்சரிப்பில் உள்ளதா?

இந்தப் பகிர்வில் நாம் பார்க்கப் போவது ஔவை சொன்ன நாப்பழக்கத்தைப் பற்றித்தான்.

ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுக்கும் மையங்கள் – ‘நுனிநாக்கு ஆங்கிலம் பேச வேண்டுமா? எங்களிடம் வாருங்கள்’ என்று விளம்பரப்படுத்துவதைக் காண்கிறோம்.

நுனிநாக்கு ஆங்கிலம் என்பது மற்றவரைக் கவரும்வண்ணம் ஆங்கிலத்தைப் பேசும் முறையைச் சொல்கிறது.  ஆனால், ஒரு சொல் அல்லது தகவல் ‘நுனி நாக்கில் உள்ளது’ என்பதை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தால் – ‘tip of my tongue’ என்று வரும்.

வாய்வரை வந்துவிட்டது ஆனால் மறந்துவிட்டேன்’ என்பதையே அத்தொடர் குறிக்கிறது.

இன்றைய பகிர்வு இதைப் பற்றியதல்ல. நுனிநாக்கு ஆங்கிலம் பற்றியதும் அல்ல.

நுனிநாக்கு ஆங்கிலம்போல் நுனிநாக்கில் தமிழைப் பேசுவது சரியா என்பதுதான் இன்றைய பதிவு.

பேச்சுமொழி தவிர, நாள்தோறும் நம் காதுகளில் ஒலிக்கும் பல்வகைத் தமிழ் உண்டு- வானொலியில் பண்பலைத் தமிழ், தொலைக்காட்சியில் தொகுப்பாளர் தமிழ், செய்தித் தமிழ் என்பதுபோல்.

மகிழ்ச்சியூட்டும் ஒருசில நிகழ்வுகளை விடுத்து, ஔவை சொன்ன நாவில் பழகிய செம்மையான தமிழ் – தேடினாலும் கிடைப்பதில்லை.

தமிழ்வழிக் கல்வி இன்று அருகிவிட்டது;

தமிழ் கற்ற பெற்றோர் வீட்டில் தமிழ்ப் பேசுவதில்லை;

ஆங்கிலவழியில் கல்வி கற்கும் பிள்ளைகளில் பெரும்பாலானோருக்குத் தமிழ்ப் பேசும் தேவை இல்லவே இல்லை.

குறைந்தது, பள்ளியில் தமிழ் படிக்காத முதல் தலைமுறை, பெற்றோர் வீட்டில் பேசுவதைக் கேட்டாவது உச்சரிப்புப் பிழையின்றிப் பேசினார்கள். இப்போது, அந்த வாய்ப்பும் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.

இதற்கெல்லாம் ஏன் வருந்த வேண்டும்? மொழி என்பது தகவல் தொடர்புக் கருவிதானே? என்று உங்களில் பலர் நினைக்கலாம்.

ஆனால், நமக்குப் பயன்படும் பற்பல மொழிகளை அதே எண்ணத்துடன் நாம் பார்ப்பதில்லையே? வெளிநாட்டு மொழிகளைக் கற்கும்போது உச்சரிப்பில் எடுத்துக்கொள்ளும் அக்கறை, நம் வாயிலாக அடுத்தத் தலைமுறைக்குச் செல்லவேண்டிய நம் அடையாளமான தாய்மொழியைப் பழக்கும்போதும் இருக்கலாமே என்பதுதான் என் ஆதங்கம்.

சரி, நாப்பழக்கத்தை எப்படி வளர்ப்பது?

சரியான உச்சரிப்பை எப்படிப் பழகுவது?

தமிழ் மொழியின் ஒலிகள் எப்படி வந்தன, அவற்றை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பது குறித்து, நம் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் சொல்வதைக் கொஞ்சம் பார்ப்போம். 

தொல்காப்பியத்திற்கு முந்தைய நூல்கள் எதுவும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான், தமிழில் இதுவரைக் கிடைத்துள்ள நூல்களில் மிகத் தொன்மையானது தொல்ககாப்பியம் என்கிறோம்.

இலக்கியத்துக்குத்தானே இலக்கணம் வகுக்க இயலும்? தமக்கு முன்பிருந்த இலக்கியங்களில் இருந்து மொழிக்கான இலக்கணத்தை உருவாக்கினார் தொல்காப்பியர்.

தொல்காப்பியரின் காலம், பொதுக்காலத்துக்கு முன் 500 முதல் 300 ஆண்டுகளுக்குள் இருக்கலாம் என்று ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள்.

கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்குமுன், தெளிவான விளக்கங்களுடன் நம் மொழிக்கான இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட மொழியைத் தவறாக உச்சரிப்பது மொழிக்கொலை என்றுதானே சொல்லவேண்டும்?

நம் பிள்ளைகள் கெட்ட சொல் ஏதாவது சொன்னால், அவர்களைத் திட்டினாலும் நமக்கு நன்றாகத் தெரியும் – அவர்கள் அந்தக் கெட்ட சொல்லை உருவாக்கவில்லை- தாம் கேட்ட சொல்லைத்தான் பயன்படுத்தினார்கள்  என்று.

அதேபோல்தான், ஒழுங்காகத் தமிழ்ப் பேசாத சமூகம், தமிழ் எழுத்துக்களை ஒழுங்காக உச்சரிக்காத சமூகம் – தவறான உச்சரிப்பைக் கேட்டு அதையே தொடரும் தலைமுறையைத்தானே உருவாக்கும்?

தொல்காப்பியர், தாம் இயற்றிய தொல்காப்பியத்தில்- எழுத்ததிகாரத்தில் – ‘பிறப்பியல்’ என்று தனி இயலில் எழுத்துக்களின் ஒலிப்புமுறை பற்றிக் கூறுகிறார்.

மிகமிக எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார். 

எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் உறுப்புகளாகத் தொல்காப்பியர் எட்டு உறுப்புகளைக் குறிப்பிடுகின்றார்.

தலை, கழுத்து, நெஞ்சு. பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகியவை அவை.

அண்ணம் என்பது மேல்வாயைக் குறிக்கிறது.

தொல்காப்பியத்தின் நூற்பாக்களையும் அவற்றின் விளக்கத்தையும் கூற முயற்சிக்கிறேன்.

பன்னீர் உயிரும் தம் நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்

12 உயிர் எழுத்துக்களும் மிடற்றுப் பிறந்த வளியின்– அதாவது, தொண்டையில் இருந்து பிறந்த காற்றால் ஒலிக்கும்.

அவற்றுள்,
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்

வாயைத் திறந்த நிலையில், அ ஆ இரண்டும் ஒலிக்கும்.

இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன
அவைதாம்,
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய

இ ஈ எ ஏ ஐ என்ற ஐந்தும் – மேல்வாய்ப் பல்லின் அடியை நாவிளிம்பு பொருந்தப் பிறக்கும்.

அடுத்த நூற்பாவை விளக்கவே தேவையில்லை-

உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்

என்கிறார் தொல்காப்பியர்.

சரி மெய்யெழுத்துக்களின் ஒலி எப்படி பிறக்கிறது?

நாவின் அடி மேல்வாயின் அடிப்பகுதியைச் சென்று பொருந்தும்போது க், ங் ஆகியவை பிறக்கின்றன.

ககார ஙகாரம் முதல் நா அண்ணம்

அண்ணம் என்பது மேல்வாயைக் குறிக்கிறது.

நாவின் இடைப்பகுதி, அண்ணத்தின் (மேல்வாயின்) இடைப்பகுதியைச் சென்று பொருந்தும் நிலையில் ச், ஞ் இரண்டும் பிறக்கின்றன.

சகார ஞகாரம் இடை நா அண்ணம்

நாவின் நுனி, அண்ணத்தின் நுனிப்பகுதியைச் சென்று பொருந்துகின்ற நிலையில் ட், ண் இரண்டும் பிறக்கின்றன. 

டகார ணகாரம் நுனி நா அண்ணம்

மேல்வாய்ப் பல்லினது அடிப்பகுதியை நாவின் நுனியானது நன்கு பரந்து ஒற்றும்போது ‘த்’, ‘ந்’ என்னும் மெய்கள் பிறக்கின்றன.

அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம்

மேல் இதழும் கீழ் இதழும் ஒன்றோடு ஒன்று இயைந்து பொருந்திட, ‘ப்’, ‘ம்’ என்பவை பிறக்கின்றன.

இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம்

நாவின் நுனி, அண்ணத்தைச் சென்று நன்கு ஒற்றும் போது ‘ற்’ ‘ன்’ என்னும் மெய்கள் தோன்றும்.

அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்

இனி, இடையின மெய்களுக்குச் செல்வோம். யரலவழள இடையினம் இல்லையா?

யகர மெய்– மேல்வாயை நாவின் அடிப்பகுதி சேரும் போது, கழுத்தில் இருந்து எழும் காற்று மேல்வாயைச் சென்று அடையப் பிறக்கும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும்

நீங்களும் பொறுமையாகக் கேட்டோ படித்தோ இவற்றை ஒப்புநோக்கிப் பாருங்களேன். எவ்வளவு துல்லியமாக ஒலிகள் குறித்து நம் பழந்தமிழ் நூல் விளக்கியுள்ளது என்பது புரியும்.

மேல்வாய் நுனியை நாக்கின் நுனி வருடும் போது ர், ழ் மெய்கள் தோன்றுகின்றன.

நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்

மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் ஓரமானது (விளிம்பு) தடித்துப் பொருந்தும் (ஒற்றும்) போது லகர மெய் தோன்றும்; மேல்வாயை நாவின் ஓரமானது தடித்துத் தடவ (வருட) ளகர மெய் தோன்றும். 

நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்

ல, ள இரண்டு எழுத்துக்களுக்கும் உச்சரிப்பு வேறுபாடுகளை அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.

மேற்பல் கீழ் இதழோடு இயைந்து பொருந்த வகர மெய் தோன்றுகிறது

பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும்

இதுதான் தொல்காப்பியர் விளக்கிய உயிர் மற்றும் மெய் எழுத்துக்களின் ஒலிப்புமுறை.

இதுவரை, இலக்கணம் குறித்த இந்த ஒலிப்பதிவைப் பொறுமையாகக் கேட்டமைக்கு நன்றி.

ஒவ்வொரு மொழிக்கும் அம்மொழிக்குரிய ஒலிப்புமுறை உண்டு. அதை மனதில் வைத்து அந்த மொழியைப் பேசினால்தானே அழகு?!

நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி வெற்றி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்வோம்;

தாய்மொழி தமிழ் பன்னெடுங்காலம் தழைத்தோங்கிட, ஔவை சொன்னபடி நாவைப் பழக்கிக் கொள்ளலாமே.

நன்றி.

உதவிய நூல்கள்-

தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – பிறப்பியல், அழகப்பா பல்கலைக்கழகம்

மெய்யெழுத்துகளின் பிறப்பு, tamilvirtualuniversity

உயிரெழுத்துகளின் பிறப்பு, tamilvirtualuniversity

Podcast available on:

Apple

Spotify

Google

செம்புலப் பெயல்நீர் – இன்றும் இனிக்கும் குறுந்தொகைக் காதல்


யாயும் ஞாயும் யாராகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல்நீர்போல 

அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே 

(செம்புலப்பெயல்நீரார், குறுந்தொகை 40)

எட்டுத் தொகை இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில் 40ஆவது பாடல் இது. 

சென்ற பகிர்வில் கண்ட, அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்கள்’ இன்றுவரை நம்மிடையே உலவி வருவது போலவே, கவிஞர்களை மகிழ்வுபடுத்தும் மற்றொரு சொற்றொடர் உண்டு. 

அதுதான், ‘செம்புலப்பெயல்நீர்’ – இதன் பொருள் – செம்மண் நிலத்தில் விழுந்த நீர்த்துளி . 

என் தாயும் உன் தாயும் யார் யாரோ, தந்தைமார் இருவரும் உறவினர்  அல்லர்; நானும் நீயும் முன்பின் அறியாதவர்கள். அப்படி இருக்க, செம்புலத்தில் விழுந்த நீரைப்போல, அன்புடை நெஞ்சம் கலந்தது எப்படிப்பட்ட விந்தை பார்த்தாயா? என்று தலைவன் வியந்து தலைவிக்கு உரைக்கிறான்.  

காதலில் இரு மனங்கள் கலப்பதை – அழகான உவமையோடு விளக்குகிறது இந்தப் பாடல்.

எட்டாத தொலைவில் இருக்கும் வானும் செம்மண் நிலமும்போல -தலைவனும் தலைவியும் இருக்கின்றனர். ஆனாலும், மனமொருமித்த இளையவர் இருவரும், கொண்ட காதலால் இணைவதை – செம்மண் நிலத்திலே விழுந்த மழைத்துளிக்கு உவமையாக்குகிறார் பாடல் ஆசிரியர்.

செம்மண் நிலத்தில் மழைநீர் விழுந்தபின், மண்ணென்றும் மழை நீரென்றும் ஒன்றை ஒன்று பிரிக்க இயலாது இரண்டறக் கலந்துவிடும். அதுபோல, அன்பால் இணைந்த இரு மனங்கள் கலந்துவிட்டனவாம்.

என்னவொரு அழகான உவமை! இது, காலம் கடந்து பயணிக்கும் உவமை!

குறுந்தொகையின் இந்தப் பாடலை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால், காலத்தால் அழியாத காதல் உணர்வுக்கு, காலத்தைக் கடந்து நிற்கும் உவமையைத் தந்த அந்தப் புலவருக்கு, அவர் வழங்கிச் சென்ற சொற்றொடரையே தமிழுலகம் பெயராகத் தந்தது. ‘யாயும் ஞாயும்’ என்ற பாடலை இயற்றியவர் செம்புலப் பெயல்நீரார்.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடல் அடி, இன்றளவும் நம்மிடையே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

நாள்தோறும் கேட்கும் திரை இசைப்பாடல்களில், செம்புலப் பெயல்நீராரை நினைவூட்டும் பாடல்கள் என்னென்ன? 

ஒரு சில பாடல்களைக் கேட்டு வியந்ததுதான் இந்தப் பகிர்வுக்குத் தூண்டுகோலாக அமைந்தது. இவை தவிர வேறு பாடல்கள் உண்டா என்று இணையத்தில் தேடியபோது, ‘கற்க நிற்க’ என்ற வலைதளத்தில், ‘செம்புலப் பெயல்நீரை’ ஒட்டிய பாடல்களின் பட்டியல் கிடைத்தது.  

கால வரிசைப்படியே வருவோம். 

1979இல் வெளிவந்த தர்மயுத்தம் திரைப்படத்தில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய ‘ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு- என் தெய்வம் தந்த என் தங்கை’ என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள், தங்கைக்காக அண்ணன் பாடும் அன்புப் பாடல் அது. 

அதில்,

செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது

என்ற அடியில், அண்ணன் தங்கை பாசத்தைச் சொல்ல- குறுந்தொகை வரிகள் சொன்ன, செம்மண்ணில் கலந்த நீர்த்துளியைப் பயன்படுத்தி இருக்கிறார் கவிஞர். 

அடுத்து, 1983இல் வெளிவந்த வெள்ளை ரோஜா என்ற திரைப்படத்தில் வரும் பாடல் இது. 

சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்
காதல் யோகம்

புத்துணர்வோடு கால்களைத் தாளம் போட வைக்கும் இசை; பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம். 

அவர் செம்புலப் பெயல்நீரை எப்படி நமக்களிக்கிறார்?

செந்நில மேடில்
தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம்
நீயென் வாழ்க்கையின் சொந்தம்

என்று தலைவனும் தலைவியும் பாடிக் கொள்கிறார்கள். 

அடுத்து, 1997இல் வெளிவந்த இருவர் என்ற திரைப்படத்தில் வரும் பாடல் இது.  

கவிஞர் வைரமுத்து, ‘நறுமுகையே’ என்று தொடங்கும் பாடலில், ஏற்கனவே ‘அற்றைத் திங்கள்’ என்ற புறநானூற்று அடிகளை பெரிய மாற்றங்களின்றி தந்த கவிஞர், அதே பாடலின் இன்னொரு பகுதியில், ‘யாயும் ஞாயும்’ என்ற குறுந்தொகை அடிகளையும் கிட்டத்தட்ட அப்படியே கொடுத்துவிடுகிறார்.  

யாயும் ஞாயும் யாராகியரோ என்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன 
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன

என்று செல்கிறது பாடல். இங்கு தலைவி தலைவனைப் பார்த்துப் பாடுவதாக அமைத்திருக்கிறார் கவிஞர். 

தமிழ் இலக்கியம் வாசிக்கும் கவிஞர்கள், அதன் ஈர்ப்பிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம் போலிருக்கிறது. 

2006இல் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் வரும்,   கவிஞர் வாலி எழுதிய – 

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

என்ற பாடலில், தலைவன் தலைவியைப் பார்த்து மெய்மறந்து வினவுகிறார் இப்படி-

நீரும் செம்புலச்சேறும்
கலந்தது போலே கலந்தவளா ?

கவிஞர் கபிலன் எழுதிய ‘பட்டாம்பூச்சி’ என்று தொடங்கும் பாடலில்- 

அதே 2006இல் வெளிவந்த சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் வரும் பாடல் இது.  

யாயும் நீயும் யாரோ 
எந்தை நுந்தை யாரோ
செம்புல நீராய் ஒன்றாய்க் கலந்தோமே

என்று ‘செம்புலப் பெயல்நீரை’ இணைக்கிறார். 

மிகச் சமீபத்திய திரைப்படமான, 2019இல் வெளிவந்த ‘ சகா’ என்ற படத்தில், கவிஞர் ஷபீர்,

யாயும் ஞாயும் என்ற குறுந்தொகைப் பாடலை முழுமையாகப் பயன்படுத்தி ஒரு பாடலைத் தொடங்குகிறார். 

நாம் இன்று பார்த்த திரைப்பாடல்களில், 1979 தொடங்கி 2019 வரை, ஆறு திரையிசைப் பாடல்கள், குறுந்தொகைப் பாடலை இயற்றிய செம்புலப் பெயல்நீராருடைய உவமையை மறுபடியும் மறுபடியும் சொல்கின்றன. 

தமிழ் இலக்கியங்களை வாசிப்பவர்கள், அப்பாடல்களின் சொல்லாடலையும் பொருட்சுவையையும் தம் படைப்புக்களில் இணைத்துக் கொள்ளும் துடிப்பைப் பாருங்கள், பாடல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பாருங்கள்.

‘செம்புலப் பெயல்நீர்போல்’ அன்புடை நெஞ்சம் கலந்துவிடும் இயல்பை, தனி அழகை, பாடல் எழுதப்பட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் புரிந்து கொள்ள முடிகிறது; பாடலின் பொருட்சுவையை உணர்ந்து மனம் நெகிழ்ந்து போகிறது. 

இந்தப் பாடலின் சொல் பயன்பாடு, இன்று 21ஆம் நூற்றாண்டில் தமிழ் பேசும் நமக்குப் புரியாது என்று நாம் விலகிப் போகும் பழந்தமிழா? நமக்குத் தொடர்பில்லாதது என்றும் அக்காலச் சமூகத்தின் காதல்நிலை சொன்ன பாடல் என்றும் ஒதுங்கி நிற்கும் பழம்பொருளா? 

அன்றைய அன்புடை நெஞ்சம் நினைத்ததையே இன்றும் உணர்கிறோம்; எண்ணி மகிழ்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும், அதே அன்பு, அதே நெஞ்சினுள்தான் குடியிருக்கிறது; அன்பும், நெஞ்சமும், செம்மண்ணும் நீரும் தத்தம் பொருளையே தமிழில் இன்றும் சுட்டுகின்றன. 

தமிழரின் அடையாளமான தமிழ்மொழி, அத்தொன்மை இனத்தின் பண்பாட்டைத் தொடர்ந்து உரைக்கும் ஊடகமாக இருந்து வருகிறது. 

இன்றைய அகழ்வாய்வுகள் காட்டும் 3000 ஆண்டுகால நாகரிகத்தை 21ஆம் நூற்றாண்டுத் தமிழர் நாகரிகத்தோடு இணைத்துக் கட்டும் பாலமாக நிற்பது ‘தமிழ்’ என்ற நம் தாய்மொழிதான்.   

நம் வாழ்வின் ஒவ்வொரு செயலோடும் உடனிருந்து பேணக்கூடிய பழந்தமிழ் இலக்கியங்களை, கருத்துப் பெட்டகங்களை மகிழ்ந்து படியுங்கள்: பிறருடன் பகிருங்கள். 

தமிழரின் பயணம் ‘தமிழ்’ என்ற அடையாளத்தோடு தொடரட்டும். 

நன்றி. வணக்கம்.

Podcast available on :

Apple

Spotify

Google

கற்றனைத்தூறும் அறிவு- ஈராயிரம் ஆண்டுகளாய் ‘அற்றைத் திங்கள்’

இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்!

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்

எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்

வென்றெரி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே

(புறநானூறு 112)

தமிழ் மொழியும், பண்பாடும், வரலாறும் குறைந்தது 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த மண்ணில் உலவி வருவது பற்றிச் சென்ற பகிர்வில் குறிப்பிட்டேன் இல்லையா?

அந்தத் தொடர்ச்சியைச் சொல்லும் ஓர் அழகான எடுத்துக்காட்டை இன்று பார்ப்போம்.

என் வலையொலிப் பக்கத்திற்குப் பெயர் கொடுத்த பாடல், புறநானூறில் 112 ஆவது பாடலான, பாரி மகளிர் அங்கவை சங்கவை எழுதிய ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ பாடலையே எடுத்துக் கொள்வோம்.

இது வருத்தமான சூழலைக் காட்டும் கையறுநிலைப் பாடல்.

‘சென்ற மாதம் நிலவு பொழிந்த இரவில், எங்கள் தந்தை பாரி மன்னர் எம்முடன் இருந்தார், எங்கள் குன்றாகிய பரம்புமலையும் எம்முடையதாக இருந்தது;

இந்த மாதத்து நிலவைக் காணும்போது, வெற்றி முரசைக் கொண்ட வேந்தர்கள், எங்கள் குன்றை வென்றுவிட்டனர். நாங்கள் தந்தையையும் இழந்து நிற்கிறோம்’

என்று, போரினால் ஏற்படும் மாபெரும் வடுவை, பேரிழப்பைப் பாரிமகளிர் நமக்கு உரைக்கிறார்கள்.

போர் ஏற்படுத்தும் பேரழிவை எழுதியிருப்பவர்கள் பலர். ஆனால், தந்தையையும் தம் அரசையும் இழந்த மகள்களின் மனநிலையை நேரடியாக நம்முடன் பகிர்ந்திருக்கிறார்கள் அங்கவையும் சங்கவையும்.

எந்தவொரு பாடலும் படிப்பவர் மனநிலைக்கேற்ப அவரவர்க்கு ஒவ்வொருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும். அது கவிதையின் வலிமைகளுள் ஒன்று.

பாடல் மட்டுமல்ல, பாடப்பட்ட பொருளும் வேறுபட்ட உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலவும்கூட சூழலுக்கேற்ப வலியைத் தருகிறது; தாக்குகிறது; வேறு சிலருக்கு, மனக்கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது; இன்பத்தைக் காட்டுகிறது.

ஒருவருக்குப் பெரும் வருத்தத்தை அளிக்கும் நிலவு, மற்றவர்க்கு மட்டற்ற மகிழ்ச்சியைப் பொழிகிறது.

அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்கள்’ ஏற்படுத்திய வெவ்வேறு பாதிப்புக்கள்தான்  என்ன?

சங்க இலக்கியக் காலத்தில் இருந்து 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்த் திரை உலகிற்கு வருவோம்.

‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ என்ற கையறு நிலைப் பாடல் / வாழ்க்கைத் துயரைச் சொல்லும் பாடலைக் கவியரசர் கண்ணதாசன், இரண்டு சூழல்களில் கையாண்டு இருக்கிறார்.

1963இல் வெளிவந்த ‘பெரிய இடத்துப் பெண்’ படத்திற்காக எழுதிய –

‘அன்று வந்ததும் அதே நிலா

இன்று வந்ததும் இதே நிலா’

பாடலில், துள்ளலிசையோடு மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ‘அற்றைத் திங்களைப்’ பயன்படுத்தி இருக்கிறார்.

கம்பனின் காதலனாகவே தம்மைக் காட்டிக் கொள்ளும் கண்ணதாசன், இப்பாடலிலும் ‘கம்பன் பாடிய வெள்ளை நிலா’ என்று கம்பனை உடன் வைத்துக் கொள்கிறார்.

இருந்தாலும், ‘அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் இதே நிலா’ என்ற முதல் அடி , பாரி மகளிர் எழுதிய சங்கப் பாடல் அடிகளின் பாதிப்பில்தான் வெளிப்பட்டிருக்க வேண்டும்.

மற்றுமொரு பாடலில், பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி, காதல் நினைவிற்கும் பிரிவிற்கும் ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ பாடலை ஒட்டிய அடிகளைப் படைத்திருக்கிறார்.

1966 இல் ‘நாடோடி’ படத்தில்-

‘அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே

நான் அடைக்கலம் தந்தேன் என்னழகை

நீ அறிவாயே வெண்ணிலவே’

என்று தலைவியை நிலவோடு உரையாட வைக்கிறார்.

காலங்கள் உருண்டோடினாலும், சமூகக் காரணிகளால் பண்பாடு -மாற்றம் கண்டாலும், ஒரு சில தொடர்புகள், நம்மை விடுவதாக இல்லைபோலும்.

1997 இல் ‘இருவர்’ திரைப்படத்தில், கவிஞர் வைரமுத்து, பாரி மகளிரின் ‘அற்றைத் திங்கள்’ அடிகளை அப்படியே நமக்களிக்கிறார்.

காதல் களிப்பை வெளிப்படுத்துகிறது அப்பாடல் –

‘நறுமுகையே’ எனத் தொடங்கும் பாடலில்-

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றித் தரள நீர்வடிய

கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா

என்று தலைவன் கேட்க..

அற்றைத் திங்கள் அந்நிலவில்

கொற்றப் பொய்கை ஆடுகையில்

ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா

என்று தலைவி வினவுகிறாள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2006 இல் வெளிவந்த சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தில், கவிஞர் யுகபாரதி –

அற்றைத் திங்கள் வானிடம்

அல்லிச் செண்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்

சொக்கும் ராகம் யாழிடம்

என்று அற்றைத் திங்களை இணைக்கிறார்.

திரை இசைப் பாடல்களில் சங்க இலக்கிய அடிகள் என்பதைப் பற்றித்தான் இன்றைய பகிர்வா? என்று எண்ண வேண்டாம்.

இல்லவே இல்லை.

உண்மையில், ஈராயிரம் ஆண்டுகாலப் பாடல் அடிகள் இன்றளவும் நம்மிடையே உலவக் காரணம் என்ன? தொடர்ச்சியாக எழுதுவோர் வழக்கின் மூலம் சமூக வழக்கில் இடம் பெறுவதுடன், படிக்கும்போதும் கேட்கும்போதும் இந்த அடிகளின் பொருள் நமக்குப் புரியவும் செய்கிறது, என்றால் அதன் காரணம்தான் என்ன?

என்ன என்ன என்ற வினாக்களுக்கெல்லாம் ஒரே விடை – நம்மில் ஆர்வமுள்ள பலர் நல்ல தமிழ்ச் சொற்களை, சொற்றொடர்களை விடாது பற்றி இருப்பதால்தான்.

கவியரசர் கண்ணதாசனும், கவிஞர்கள் வைரமுத்து மற்றும் யுகபாரதியும் – தாம் படித்த இலக்கியத்தின் அழகுடைய, பொருள் பொதிந்த சொற்றொடரில் மதிமயங்கி, ஈர்க்கப்பட்டு, தாம் புனைந்த பாடல்களில் அதை அப்படியே அல்லது அதன் பொருளை நயம்படப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

மணற்கேணி – அதாவது ஊற்று நீர் தோண்டும் அளவிற்கு ஏற்றாற்போல ஊறும்; அதேபோல, கற்றலுக்கு ஏற்றவாறு அறிவு வளரும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆக, தோண்டத் தோண்ட நீர் பெருகும், படிக்கப் படிக்க அறிவு வளரும்.

நம் மொழியின் சொற்றொடர்கள், வேற்றுமொழி பாதிப்பையும் ஆதிக்கத்தையும் மீறி, வழக்கில் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, சங்கிலித் தொடராக நல்ல தமிழ்ச் சொற்கள் நம்மிடையே வழங்கி வருவது தமிழின் சிறப்பு என்று சொல்லிவிட்டுப் போகலாம்; ஆனால், இந்தச் செம்மொழியைப் படித்து, கேட்டு, உணர்ந்து மகிழும் வண்ணம், நமக்குப் பரிமாறும் படைப்பாளர்கள் முதன்மைப் பங்கு வகிக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள்.. அங்கவை சங்கவையின் புறநானூற்று ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ நமக்குப் புரிகிறதுதானே?

இலக்கிய மாணவர்களாக இருந்துதான் நல்ல தமிழ் நூல்களைப் படிக்க வேண்டும் என்பதில்லையே… தமிழ் என்ற மொழி, இத்தனை ஆண்டுகாலத் தொடர்ச்சியாக நல்ல சொற்களை, தொன்மைச் சொற்களை, தெளிவாகப் பொருளை உணர்த்தும் எளிய சொற்களைத் தாங்கி நிற்கிறது என்றால், அதற்குக் காரணம் ஒவ்வொரு வீட்டிலும் தொடர்ந்து ஒலித்து வந்த/ ஒலித்து வரும் நல்ல தமிழ்தான்.

நூல்களில் எழுத ஒரு தமிழ், மேடையில் முழங்க ஒரு தமிழ், ஊடகங்களில் அறிவிக்க ஒரு தமிழ், வீட்டில் உரையாட ஒரு தமிழ் என்று பாகுபாடு ஏன்?

சூழலுக்கேற்ப ஏற்ற இறக்கங்கள் நம் தொண்டையில் இருந்து வரும் ஒலியில்தானே இருக்க வேண்டும், நாப்பழக்கத்தில் வரும் மொழியில்  இருக்க வேண்டியதில்லையே??

திரையிசையில் வழங்க வேண்டும் என்று எதிர்பாராமல், காத்துக் கிடக்காமல், நல்ல நூல்களை, பழந்தமிழ் நூல்களைப் படிக்கும் வழக்கத்தை நாமும் ஏற்படுத்திக் கொள்ளலாமே.

ஒரு மொழியின் தொடர்ச்சியான பயணம், வாசிப்பவர்கள் மூலமும், தாம் வாசித்த சொற்றொடர்களை மற்றவர்களுடன் பகிர்பவர்கள்மூலமும், அந்த நல்ல சொற்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துபவர்கள்மூலமும், தடையில்லாமல் செல்ல இயலும்தானே!

படைப்பாளிகள் மட்டுமல்ல, தமிழ்ப் பேசும் ஒவ்வொருவருக்கும், தாய்மொழியின் தொடர்ச் சங்கிலியைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு உண்டு.

அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்களை’ இன்று பார்த்தோம்.

‘அற்றைத் திங்கள்’ போலவே, இன்றுவரைத் தொடர்ந்துவரும் மற்றுமொரு சுவையான சங்கப் பாடலோடு அடுத்த பகிர்வில் சந்திப்போம்.

நன்றி. வணக்கம்.

Podcast available on : 

Apple 

Spotify

Google