செம்புலப் பெயல்நீர் – இன்றும் இனிக்கும் குறுந்தொகைக் காதல்


யாயும் ஞாயும் யாராகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல்நீர்போல 

அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே 

(செம்புலப்பெயல்நீரார், குறுந்தொகை 40)

எட்டுத் தொகை இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில் 40ஆவது பாடல் இது. 

சென்ற பகிர்வில் கண்ட, அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்கள்’ இன்றுவரை நம்மிடையே உலவி வருவது போலவே, கவிஞர்களை மகிழ்வுபடுத்தும் மற்றொரு சொற்றொடர் உண்டு. 

அதுதான், ‘செம்புலப்பெயல்நீர்’ – இதன் பொருள் – செம்மண் நிலத்தில் விழுந்த நீர்த்துளி . 

என் தாயும் உன் தாயும் யார் யாரோ, தந்தைமார் இருவரும் உறவினர்  அல்லர்; நானும் நீயும் முன்பின் அறியாதவர்கள். அப்படி இருக்க, செம்புலத்தில் விழுந்த நீரைப்போல, அன்புடை நெஞ்சம் கலந்தது எப்படிப்பட்ட விந்தை பார்த்தாயா? என்று தலைவன் வியந்து தலைவிக்கு உரைக்கிறான்.  

காதலில் இரு மனங்கள் கலப்பதை – அழகான உவமையோடு விளக்குகிறது இந்தப் பாடல்.

எட்டாத தொலைவில் இருக்கும் வானும் செம்மண் நிலமும்போல -தலைவனும் தலைவியும் இருக்கின்றனர். ஆனாலும், மனமொருமித்த இளையவர் இருவரும், கொண்ட காதலால் இணைவதை – செம்மண் நிலத்திலே விழுந்த மழைத்துளிக்கு உவமையாக்குகிறார் பாடல் ஆசிரியர்.

செம்மண் நிலத்தில் மழைநீர் விழுந்தபின், மண்ணென்றும் மழை நீரென்றும் ஒன்றை ஒன்று பிரிக்க இயலாது இரண்டறக் கலந்துவிடும். அதுபோல, அன்பால் இணைந்த இரு மனங்கள் கலந்துவிட்டனவாம்.

என்னவொரு அழகான உவமை! இது, காலம் கடந்து பயணிக்கும் உவமை!

குறுந்தொகையின் இந்தப் பாடலை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால், காலத்தால் அழியாத காதல் உணர்வுக்கு, காலத்தைக் கடந்து நிற்கும் உவமையைத் தந்த அந்தப் புலவருக்கு, அவர் வழங்கிச் சென்ற சொற்றொடரையே தமிழுலகம் பெயராகத் தந்தது. ‘யாயும் ஞாயும்’ என்ற பாடலை இயற்றியவர் செம்புலப் பெயல்நீரார்.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடல் அடி, இன்றளவும் நம்மிடையே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

நாள்தோறும் கேட்கும் திரை இசைப்பாடல்களில், செம்புலப் பெயல்நீராரை நினைவூட்டும் பாடல்கள் என்னென்ன? 

ஒரு சில பாடல்களைக் கேட்டு வியந்ததுதான் இந்தப் பகிர்வுக்குத் தூண்டுகோலாக அமைந்தது. இவை தவிர வேறு பாடல்கள் உண்டா என்று இணையத்தில் தேடியபோது, ‘கற்க நிற்க’ என்ற வலைதளத்தில், ‘செம்புலப் பெயல்நீரை’ ஒட்டிய பாடல்களின் பட்டியல் கிடைத்தது.  

கால வரிசைப்படியே வருவோம். 

1979இல் வெளிவந்த தர்மயுத்தம் திரைப்படத்தில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய ‘ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு- என் தெய்வம் தந்த என் தங்கை’ என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள், தங்கைக்காக அண்ணன் பாடும் அன்புப் பாடல் அது. 

அதில்,

செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது

என்ற அடியில், அண்ணன் தங்கை பாசத்தைச் சொல்ல- குறுந்தொகை வரிகள் சொன்ன, செம்மண்ணில் கலந்த நீர்த்துளியைப் பயன்படுத்தி இருக்கிறார் கவிஞர். 

அடுத்து, 1983இல் வெளிவந்த வெள்ளை ரோஜா என்ற திரைப்படத்தில் வரும் பாடல் இது. 

சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்
காதல் யோகம்

புத்துணர்வோடு கால்களைத் தாளம் போட வைக்கும் இசை; பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம். 

அவர் செம்புலப் பெயல்நீரை எப்படி நமக்களிக்கிறார்?

செந்நில மேடில்
தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம்
நீயென் வாழ்க்கையின் சொந்தம்

என்று தலைவனும் தலைவியும் பாடிக் கொள்கிறார்கள். 

அடுத்து, 1997இல் வெளிவந்த இருவர் என்ற திரைப்படத்தில் வரும் பாடல் இது.  

கவிஞர் வைரமுத்து, ‘நறுமுகையே’ என்று தொடங்கும் பாடலில், ஏற்கனவே ‘அற்றைத் திங்கள்’ என்ற புறநானூற்று அடிகளை பெரிய மாற்றங்களின்றி தந்த கவிஞர், அதே பாடலின் இன்னொரு பகுதியில், ‘யாயும் ஞாயும்’ என்ற குறுந்தொகை அடிகளையும் கிட்டத்தட்ட அப்படியே கொடுத்துவிடுகிறார்.  

யாயும் ஞாயும் யாராகியரோ என்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன 
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன

என்று செல்கிறது பாடல். இங்கு தலைவி தலைவனைப் பார்த்துப் பாடுவதாக அமைத்திருக்கிறார் கவிஞர். 

தமிழ் இலக்கியம் வாசிக்கும் கவிஞர்கள், அதன் ஈர்ப்பிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம் போலிருக்கிறது. 

2006இல் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் வரும்,   கவிஞர் வாலி எழுதிய – 

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

என்ற பாடலில், தலைவன் தலைவியைப் பார்த்து மெய்மறந்து வினவுகிறார் இப்படி-

நீரும் செம்புலச்சேறும்
கலந்தது போலே கலந்தவளா ?

கவிஞர் கபிலன் எழுதிய ‘பட்டாம்பூச்சி’ என்று தொடங்கும் பாடலில்- 

அதே 2006இல் வெளிவந்த சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் வரும் பாடல் இது.  

யாயும் நீயும் யாரோ 
எந்தை நுந்தை யாரோ
செம்புல நீராய் ஒன்றாய்க் கலந்தோமே

என்று ‘செம்புலப் பெயல்நீரை’ இணைக்கிறார். 

மிகச் சமீபத்திய திரைப்படமான, 2019இல் வெளிவந்த ‘ சகா’ என்ற படத்தில், கவிஞர் ஷபீர்,

யாயும் ஞாயும் என்ற குறுந்தொகைப் பாடலை முழுமையாகப் பயன்படுத்தி ஒரு பாடலைத் தொடங்குகிறார். 

நாம் இன்று பார்த்த திரைப்பாடல்களில், 1979 தொடங்கி 2019 வரை, ஆறு திரையிசைப் பாடல்கள், குறுந்தொகைப் பாடலை இயற்றிய செம்புலப் பெயல்நீராருடைய உவமையை மறுபடியும் மறுபடியும் சொல்கின்றன. 

தமிழ் இலக்கியங்களை வாசிப்பவர்கள், அப்பாடல்களின் சொல்லாடலையும் பொருட்சுவையையும் தம் படைப்புக்களில் இணைத்துக் கொள்ளும் துடிப்பைப் பாருங்கள், பாடல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பாருங்கள்.

‘செம்புலப் பெயல்நீர்போல்’ அன்புடை நெஞ்சம் கலந்துவிடும் இயல்பை, தனி அழகை, பாடல் எழுதப்பட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் புரிந்து கொள்ள முடிகிறது; பாடலின் பொருட்சுவையை உணர்ந்து மனம் நெகிழ்ந்து போகிறது. 

இந்தப் பாடலின் சொல் பயன்பாடு, இன்று 21ஆம் நூற்றாண்டில் தமிழ் பேசும் நமக்குப் புரியாது என்று நாம் விலகிப் போகும் பழந்தமிழா? நமக்குத் தொடர்பில்லாதது என்றும் அக்காலச் சமூகத்தின் காதல்நிலை சொன்ன பாடல் என்றும் ஒதுங்கி நிற்கும் பழம்பொருளா? 

அன்றைய அன்புடை நெஞ்சம் நினைத்ததையே இன்றும் உணர்கிறோம்; எண்ணி மகிழ்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும், அதே அன்பு, அதே நெஞ்சினுள்தான் குடியிருக்கிறது; அன்பும், நெஞ்சமும், செம்மண்ணும் நீரும் தத்தம் பொருளையே தமிழில் இன்றும் சுட்டுகின்றன. 

தமிழரின் அடையாளமான தமிழ்மொழி, அத்தொன்மை இனத்தின் பண்பாட்டைத் தொடர்ந்து உரைக்கும் ஊடகமாக இருந்து வருகிறது. 

இன்றைய அகழ்வாய்வுகள் காட்டும் 3000 ஆண்டுகால நாகரிகத்தை 21ஆம் நூற்றாண்டுத் தமிழர் நாகரிகத்தோடு இணைத்துக் கட்டும் பாலமாக நிற்பது ‘தமிழ்’ என்ற நம் தாய்மொழிதான்.   

நம் வாழ்வின் ஒவ்வொரு செயலோடும் உடனிருந்து பேணக்கூடிய பழந்தமிழ் இலக்கியங்களை, கருத்துப் பெட்டகங்களை மகிழ்ந்து படியுங்கள்: பிறருடன் பகிருங்கள். 

தமிழரின் பயணம் ‘தமிழ்’ என்ற அடையாளத்தோடு தொடரட்டும். 

நன்றி. வணக்கம்.

Podcast available on :

Apple

Spotify

Google