இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்!
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்றெரி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே
(புறநானூறு 112)
தமிழ் மொழியும், பண்பாடும், வரலாறும் குறைந்தது 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த மண்ணில் உலவி வருவது பற்றிச் சென்ற பகிர்வில் குறிப்பிட்டேன் இல்லையா?
அந்தத் தொடர்ச்சியைச் சொல்லும் ஓர் அழகான எடுத்துக்காட்டை இன்று பார்ப்போம்.
என் வலையொலிப் பக்கத்திற்குப் பெயர் கொடுத்த பாடல், புறநானூறில் 112 ஆவது பாடலான, பாரி மகளிர் அங்கவை சங்கவை எழுதிய ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ பாடலையே எடுத்துக் கொள்வோம்.
இது வருத்தமான சூழலைக் காட்டும் கையறுநிலைப் பாடல்.
‘சென்ற மாதம் நிலவு பொழிந்த இரவில், எங்கள் தந்தை பாரி மன்னர் எம்முடன் இருந்தார், எங்கள் குன்றாகிய பரம்புமலையும் எம்முடையதாக இருந்தது;
இந்த மாதத்து நிலவைக் காணும்போது, வெற்றி முரசைக் கொண்ட வேந்தர்கள், எங்கள் குன்றை வென்றுவிட்டனர். நாங்கள் தந்தையையும் இழந்து நிற்கிறோம்’
என்று, போரினால் ஏற்படும் மாபெரும் வடுவை, பேரிழப்பைப் பாரிமகளிர் நமக்கு உரைக்கிறார்கள்.
போர் ஏற்படுத்தும் பேரழிவை எழுதியிருப்பவர்கள் பலர். ஆனால், தந்தையையும் தம் அரசையும் இழந்த மகள்களின் மனநிலையை நேரடியாக நம்முடன் பகிர்ந்திருக்கிறார்கள் அங்கவையும் சங்கவையும்.
எந்தவொரு பாடலும் படிப்பவர் மனநிலைக்கேற்ப அவரவர்க்கு ஒவ்வொருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும். அது கவிதையின் வலிமைகளுள் ஒன்று.
பாடல் மட்டுமல்ல, பாடப்பட்ட பொருளும் வேறுபட்ட உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலவும்கூட சூழலுக்கேற்ப வலியைத் தருகிறது; தாக்குகிறது; வேறு சிலருக்கு, மனக்கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது; இன்பத்தைக் காட்டுகிறது.
ஒருவருக்குப் பெரும் வருத்தத்தை அளிக்கும் நிலவு, மற்றவர்க்கு மட்டற்ற மகிழ்ச்சியைப் பொழிகிறது.
அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்கள்’ ஏற்படுத்திய வெவ்வேறு பாதிப்புக்கள்தான் என்ன?
சங்க இலக்கியக் காலத்தில் இருந்து 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்த் திரை உலகிற்கு வருவோம்.
‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ என்ற கையறு நிலைப் பாடல் / வாழ்க்கைத் துயரைச் சொல்லும் பாடலைக் கவியரசர் கண்ணதாசன், இரண்டு சூழல்களில் கையாண்டு இருக்கிறார்.
1963இல் வெளிவந்த ‘பெரிய இடத்துப் பெண்’ படத்திற்காக எழுதிய –
‘அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் இதே நிலா’
பாடலில், துள்ளலிசையோடு மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ‘அற்றைத் திங்களைப்’ பயன்படுத்தி இருக்கிறார்.
கம்பனின் காதலனாகவே தம்மைக் காட்டிக் கொள்ளும் கண்ணதாசன், இப்பாடலிலும் ‘கம்பன் பாடிய வெள்ளை நிலா’ என்று கம்பனை உடன் வைத்துக் கொள்கிறார்.
இருந்தாலும், ‘அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் இதே நிலா’ என்ற முதல் அடி , பாரி மகளிர் எழுதிய சங்கப் பாடல் அடிகளின் பாதிப்பில்தான் வெளிப்பட்டிருக்க வேண்டும்.
மற்றுமொரு பாடலில், பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி, காதல் நினைவிற்கும் பிரிவிற்கும் ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ பாடலை ஒட்டிய அடிகளைப் படைத்திருக்கிறார்.
1966 இல் ‘நாடோடி’ படத்தில்-
‘அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என்னழகை
நீ அறிவாயே வெண்ணிலவே’
என்று தலைவியை நிலவோடு உரையாட வைக்கிறார்.
காலங்கள் உருண்டோடினாலும், சமூகக் காரணிகளால் பண்பாடு -மாற்றம் கண்டாலும், ஒரு சில தொடர்புகள், நம்மை விடுவதாக இல்லைபோலும்.
1997 இல் ‘இருவர்’ திரைப்படத்தில், கவிஞர் வைரமுத்து, பாரி மகளிரின் ‘அற்றைத் திங்கள்’ அடிகளை அப்படியே நமக்களிக்கிறார்.
காதல் களிப்பை வெளிப்படுத்துகிறது அப்பாடல் –
‘நறுமுகையே’ எனத் தொடங்கும் பாடலில்-
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர்வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா
என்று தலைவன் கேட்க..
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா
என்று தலைவி வினவுகிறாள்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2006 இல் வெளிவந்த சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தில், கவிஞர் யுகபாரதி –
அற்றைத் திங்கள் வானிடம்
அல்லிச் செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்
என்று அற்றைத் திங்களை இணைக்கிறார்.
திரை இசைப் பாடல்களில் சங்க இலக்கிய அடிகள் என்பதைப் பற்றித்தான் இன்றைய பகிர்வா? என்று எண்ண வேண்டாம்.
இல்லவே இல்லை.
உண்மையில், ஈராயிரம் ஆண்டுகாலப் பாடல் அடிகள் இன்றளவும் நம்மிடையே உலவக் காரணம் என்ன? தொடர்ச்சியாக எழுதுவோர் வழக்கின் மூலம் சமூக வழக்கில் இடம் பெறுவதுடன், படிக்கும்போதும் கேட்கும்போதும் இந்த அடிகளின் பொருள் நமக்குப் புரியவும் செய்கிறது, என்றால் அதன் காரணம்தான் என்ன?
என்ன என்ன என்ற வினாக்களுக்கெல்லாம் ஒரே விடை – நம்மில் ஆர்வமுள்ள பலர் நல்ல தமிழ்ச் சொற்களை, சொற்றொடர்களை விடாது பற்றி இருப்பதால்தான்.
கவியரசர் கண்ணதாசனும், கவிஞர்கள் வைரமுத்து மற்றும் யுகபாரதியும் – தாம் படித்த இலக்கியத்தின் அழகுடைய, பொருள் பொதிந்த சொற்றொடரில் மதிமயங்கி, ஈர்க்கப்பட்டு, தாம் புனைந்த பாடல்களில் அதை அப்படியே அல்லது அதன் பொருளை நயம்படப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
மணற்கேணி – அதாவது ஊற்று நீர் தோண்டும் அளவிற்கு ஏற்றாற்போல ஊறும்; அதேபோல, கற்றலுக்கு ஏற்றவாறு அறிவு வளரும் என்கிறார் திருவள்ளுவர்.
ஆக, தோண்டத் தோண்ட நீர் பெருகும், படிக்கப் படிக்க அறிவு வளரும்.
நம் மொழியின் சொற்றொடர்கள், வேற்றுமொழி பாதிப்பையும் ஆதிக்கத்தையும் மீறி, வழக்கில் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, சங்கிலித் தொடராக நல்ல தமிழ்ச் சொற்கள் நம்மிடையே வழங்கி வருவது தமிழின் சிறப்பு என்று சொல்லிவிட்டுப் போகலாம்; ஆனால், இந்தச் செம்மொழியைப் படித்து, கேட்டு, உணர்ந்து மகிழும் வண்ணம், நமக்குப் பரிமாறும் படைப்பாளர்கள் முதன்மைப் பங்கு வகிக்கிறார்கள்.
இப்போது சொல்லுங்கள்.. அங்கவை சங்கவையின் புறநானூற்று ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ நமக்குப் புரிகிறதுதானே?
இலக்கிய மாணவர்களாக இருந்துதான் நல்ல தமிழ் நூல்களைப் படிக்க வேண்டும் என்பதில்லையே… தமிழ் என்ற மொழி, இத்தனை ஆண்டுகாலத் தொடர்ச்சியாக நல்ல சொற்களை, தொன்மைச் சொற்களை, தெளிவாகப் பொருளை உணர்த்தும் எளிய சொற்களைத் தாங்கி நிற்கிறது என்றால், அதற்குக் காரணம் ஒவ்வொரு வீட்டிலும் தொடர்ந்து ஒலித்து வந்த/ ஒலித்து வரும் நல்ல தமிழ்தான்.
நூல்களில் எழுத ஒரு தமிழ், மேடையில் முழங்க ஒரு தமிழ், ஊடகங்களில் அறிவிக்க ஒரு தமிழ், வீட்டில் உரையாட ஒரு தமிழ் என்று பாகுபாடு ஏன்?
சூழலுக்கேற்ப ஏற்ற இறக்கங்கள் நம் தொண்டையில் இருந்து வரும் ஒலியில்தானே இருக்க வேண்டும், நாப்பழக்கத்தில் வரும் மொழியில் இருக்க வேண்டியதில்லையே??
திரையிசையில் வழங்க வேண்டும் என்று எதிர்பாராமல், காத்துக் கிடக்காமல், நல்ல நூல்களை, பழந்தமிழ் நூல்களைப் படிக்கும் வழக்கத்தை நாமும் ஏற்படுத்திக் கொள்ளலாமே.
ஒரு மொழியின் தொடர்ச்சியான பயணம், வாசிப்பவர்கள் மூலமும், தாம் வாசித்த சொற்றொடர்களை மற்றவர்களுடன் பகிர்பவர்கள்மூலமும், அந்த நல்ல சொற்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துபவர்கள்மூலமும், தடையில்லாமல் செல்ல இயலும்தானே!
படைப்பாளிகள் மட்டுமல்ல, தமிழ்ப் பேசும் ஒவ்வொருவருக்கும், தாய்மொழியின் தொடர்ச் சங்கிலியைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு உண்டு.
அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்களை’ இன்று பார்த்தோம்.
‘அற்றைத் திங்கள்’ போலவே, இன்றுவரைத் தொடர்ந்துவரும் மற்றுமொரு சுவையான சங்கப் பாடலோடு அடுத்த பகிர்வில் சந்திப்போம்.
நன்றி. வணக்கம்.
Podcast available on :